• தனியார் துறையினரையும் பங்களிக்குமாறு அழைப்பு
தொழில்துறை மற்றும் உற்பத்தி போட்டித் தன்மைக்கு முகம்கொடுக்கும் வகையில் வர்த்தக சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டத்துடன் கூடியதாக சுங்கத் தீர்வை மற்றும் சுங்கமற்ற தீர்வை ஆகியவற்றை எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு நீக்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத் தரப்பு என்ற வகையில் உலக வங்கியுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதற்காக தனியார் துறை எவ்வாறான ஒத்துழைப்பை வழங்கப் போகிறது என கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, சிவப்புக் கொடியைக் காட்டி எதிர்ப்பு தெரிவிப்பதா அல்லது ஒத்துழைப்பு வழங்குவதா என்பது தொடர்பில் தனியார் துறையினர் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சவால்களை மீறி – வாய்ப்புகளை எட்டுதல்’ – எனும் 2023 வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னரான கருத்துக்களம், கொழும்பு ஷெங்ரிலா ஹோட்டலில் இன்று (18) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் என்ற வகையில் ஜனாதிபதி, வரவு செலவுத் திட்டத்தை முதலில் முன்வைத்துள்ளார்.
நடைமுறை சாத்தியமான பெறுபேறுகளை பாராமல் தவறான கொள்கைகளை பின்பற்றியமையே நாட்டின் நிதி நெருக்கடிக்கு காரணமென கூறிய ஜனாதிபதி நாட்டை இந்நிலையிலிருந்து மீட்பதாயின் அரசாங்கம் மட்டுமன்றி தனியார் துறையினரும் பொது மக்களும் பாரிய வகிபாகத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களுக்கு அவசியமான சுகாதாரம் , கல்வி மற்றும் நலன்புரி வசதிகளை வழங்குவதை அரசாங்கம் கையாள வேண்டியிருப்பதனால் தனியார் துறையினரே வியாபாரங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“வேறு வழியில்லை.பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தால் தனியார் துறையும் வளர்ச்சி அடையும் என்பதை நான் அறிவேன். வியாபார முன்னெடுப்புகளை அரசாங்கத்தால் முன்னெடுக்க முடியாது.” என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,
இது வழமையான வரவு செலவுத் திட்டத்திலும் பார்க்க முற்றிலும் வித்தியாசமானது. இங்கு முன்வைக்கப்பட்டிருக்கும் கொள்கைகளைப் பார்த்து சிகரட் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளனவா, வேறு ஏதேனும் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளனவா என்பதை தேட முடியாது. அதே கண்ணோட்டத்துடனேயே இந்த வரவு செலவுத் திட்டத்தையும் பார்ப்பீர்களேயானால் நீங்கள் தவறான பாதையில் பயணிக்கின்றீர்கள்.
துரதிஷ்டவசமாக பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் பலர் இந்த தவறை செய்கின்றார்கள்.நாம் தற்போது முன்னொருபோதும் கண்டிராத எதிர்பராத பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இருக்கின்றோம். இது பல நாடுகளால் மற்றும் உலகமே சந்தித்திராத்தொரு நிலைமையாகும்.
நாம் இந்நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தவறான கொள்கைகளை பின்பற்றியதன் விளைவாகவே எமக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. ‘கொள்கைகள்’ எனும்போது அவை நடைமுறை சாத்தியமானதாக இருக்க வேண்டும்.
நிதியமைச்சர் என்ற வகையில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே எனது முதலாவது இலக்காகும். இதனை கடந்த ஆகஸ்ட் வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகம் செய்தோம். இதற்கான சட்டவாக்க நடவடிக்கைகளையும் ஆரம்பித்தோம்.
இதற்கு மேலதிகமாக நாம் ஐ.எம்.எப் உடன் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை அடைந்துள்ளோம். தற்போது பிரதான இருதரப்பு கடன் வழங்கனர்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்தாக வேண்டும். இதில் இரண்டு, கடன் வழங்கும் நாடுகள் பாரிஸ் கிளப்பில் இல்லை. அவை இந்தியா மற்றும் சீனாவாகும். இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததும் நாம் தனியார் கடன் வழங்குனர்களிடம் சென்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம். அதன் பின்னர் எமக்கு எமது பாதையில் பயணிக்க முடியும். அதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக நாம் பல வேலைகளை முன்னெடுக்க வேண்டும். நாம் பொருளாதார மீட்சி தொடர்பில் ஆராய வேண்டும். அதற்கான திட்டம் என்ன? கட்டமைப்பு என்ன? என்பது தொடர்பில் நாம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
2023 என்பது உறுதிப்பாட்டுக்கு மட்டுமன்றி மீட்சிக்குமானதொரு ஆண்டாகும்.
உறுதிப்பாட்டுச் செயன்முறைகள் 2026 வரை தொடரும். அப்போது எமது மொத்த தேசிய உற்பத்தி, 2019 ஆம் ஆண்டில் நாம் இருந்த நிலையை எட்டும் என நம்புகின்றேன். எனினும் என்ன நடக்கும் என்பது திட்டவட்டமாக தெரியாது.
இதற்கு மேலதிகமாக நாம் என்ன செய்யலாம்? நாம் தற்போதுள்ள முறைமை தொடர்பில் திருப்தி அடைந்துள்ளோமா? அடுத்த பத்து வருடங்களில் இதே பொருளாதார நெருக்கடிக்கள் சிக்கும் வகையில் நாம் மீண்டும் கடன் வாங்க ஆரம்பிக்கலாமா?
அப்படியானால் ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே இருக்கும். அதாவது, நெருக்கடி எம்மை மூழ்கடிப்பதற்கு முன்னர் நாம் ஐ.எம்.எப் இடம் செல்வோம். ஆர்ஜன்டினாவின் மாதிரியை ஒத்த ஆசியாவாக நாம் மாறி விடுவோம். எனவே இம்முறை நாம் இந்நிலையிலிருந்து எப்படியாவது மீள்வதில் வெற்றிக் காண வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.
நாம் முன்னர் பேசிய, பல முறைமைகள் தோல்வி கண்டுள்ளன. இன்றும்கூட பத்திரிகைகளில் அவ்வாறு தோல்வி கண்ட முறைமைகள் பற்றியே எழுதப்படுகின்றன. அதற்கான உதாரணமே 1965 ஆம் ஆண்டு இதே மாதிரியான பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டபோது மறைந்த டட்லி சேனாநாயக்க அவர்கள், அப்போது கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராக இருந்த எம்.ஜே. ஷெனன் எனும் இந்தியர் ஒருவரிடம் அது தொடர்பில் அறிக்கையொன்றை கோரியிருந்தார். அதனை நாம் நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று எமது நாடு சிங்கப்பூரிலும் உயர்வானதொரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்.
பயந்தால் போட்டியில் வெல்ல முடியாது. வெல்வதற்காகவே இந்தப் போட்டியில் நீங்கள் போட்டியிட வேண்டும். போட்டியில்லா விட்டால் வெல்வது கடினம்.
அப்படியானால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் என்ன உள்ளது? 03 பக்கங்களில் எழுதப்பட்ட 07 பந்திகளை மட்டுமே கொண்ட இந்த வரவு செலவுத் திட்டத்தில் 3.21, 3.22, 3.24, 3.25, 3.29, 3.37 ஆகிய பந்திகள் இது பற்றிய சரியான விளக்கத்தைக் கொடுத்துள்ளன.
நாம் எவ்வாறு இதை நடைமுறைப்படுத்தப் போகின்றோம்? நாம் சில கொள்கைகளை முன்வைத்துள்ளோம். அதில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களில் நல்லது, கெட்டதை எம்மால் கூற முடியாது. எவ்வாறாயினும் கொள்கைகள் மட்டும் போதுமானவையல்ல.
எமது முதலாவது கொள்கை, ‘ஒன்றிணைந்த முதலீடு மற்றும் ஏற்றுமதி முகவர் அமைப்பு’ தொடர்பானது. இதற்காக சில சட்டங்களை அகற்றவும் பொருளாதாரத்தில் அடிப்படை மீள்கட்டமைப்பை முன்னெடுக்கவும் வேண்டும். இல்லையேல் அதுவும் இன்னுமொரு சொத்து விற்பனை முகவர் அமைப்பாகிவிடும்.
கொள்கைகள் இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவான கட்டமொப்பொன்று இருக்க வேண்டும்.
அடுத்த 2,3 அல்லது 4 தசாப்தங்களில் இந்து சமுத்திரமானது உலகளாவிய அரசியல் மையமாக திகழப்போகின்றது. அதனடிப்படையில் உறுதியான பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளால் மட்டுமே தப்பி பிழைத்து வாழ முடியும். ஏனையவையால் முடியாமல் போகும். இது இராணுவ போட்டி மட்டுமல்ல. கூடவே பொருளாதார போட்டியுமாகும்.
முழு உலகையும் எடுத்துப் பார்த்தால் 18,19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் நிலவிய ஐரோப்பிய மற்றும் மேற்கு ஆதிக்கத்தின் காரணமாகவே ஆசியா பின்னடைவைக் கண்டது. எனினும் தற்போது சீனா, இந்தியா.ஜப்பான் ஆகிய நாடுகள் வளர்ச்சியடைந்து வருவதைக் கண்டிருப்பீர்கள்.
உலகளாவிய பொருளாதாரப் பின்னணியில் நாம் அணு குண்டை வைத்திருக்கப் போவதில்லை. எனினும் உறுதிப்பாடுடைய பொருளாதாரம் மட்டுமே இதில் தப்பி பிழைக்கும்.
பொருளாதார அபிவிருத்தியில் மூலோபாய அமைவிடமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த வகையில் எம்மிடம் மூன்று முக்கிய துறைமுகங்களும் சிறியதான காங்கேசந்துறை துறைமுகமும் உள்ளது. ஆனால் நாம் அவை பற்றி பேசுவதேயில்லை. சிந்திப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்கின்றோம்.
கடந்த முறை நான் பிரதமராக இருந்தபோது இது பற்றி தூரநோக்குடன் சிந்தித்ததுடன் கிழக்கு முனையம் தொடர்பில் ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் ஒப்பந்தங்களையும் மேற்கொண்டிருந்தோம். நீங்கள் அதை ரத்துச் செய்தீர்கள். இது இன்னும் அப்படியே உள்ளது. துறைமுகத்தால் செயற்பட முடியாதுள்ளது. எம்மிடமும் பணம் இருக்கவில்லை. எனவே நாம் கிழக்கு முனையம் தொடர்பான திட்டத்தை நிறைவு செய்வதற்கு ஊக்குவிப்பதுடன் அதனை ஒரு சிறந்த மையமாகவும் உருவாக்குவோம்.
எம்மிடம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளது. ‘பெல்ட் என்ட் ரோட்’ திட்டம் நிறைவடைந்ததும், சீன கம்பனிகள் ஆபிரிக்காவில் பல துறைமுகங்களை உருவாக்கியது போல ஹம்பாந்தோட்டையுடன் இணைந்ததாகவும் பல துறைமுகங்களை உருவாக்க முடியும். திருகோணமலை துறைமுகம் வங்காள விரிகுடாவுக்கான சேவையை வழங்க க்கூடியதாகவுள்ளது. எனவே எமக்குள்ள வாய்ப்புக்களை நாம் உணர வேண்டும்.
இந்த துறைமுகங்களே, எம்மிடமுள்ள மிகச் சிறந்த சொத்துக்கள்.அநுராதபுர இராச்சியம் காலம் தொட்டு மாந்தை முதல் திருகோணமலை வரையில் இந்த துறைமுகங்களே எம்மிடமிருந்தன. அதனை தவிர காலி துறைமுகம். கொழும்பு துறைமுகங்களும் எம்மிடமுள்ளன. நாம் எம்மிடமுள்ள அனைத்து துறைமுகங்களையும் மறந்து விட்டோம்.
அடுத்ததாக எமது விவசாயத்தை முழுமையாக நவீனமயப்படுத்த வேண்டும். அதனை நாம் புறக்கணித்துள்ளோம். உலகிலேயே எமது தேநீரே மிகச் சிறந்ததாக காணப்பட்டது. எனினும் தற்போது அந்த இடத்தை வேறு நாடுகள் எடுத்துக் கொண்டுள்ளன. எனவே விவசாயம் நவீனமயப்படுத்த வேண்டியது கட்டாயமாகும். இதற்காக காணியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்காக மக்கள் வழங்கியுள்ள காணிகளுக்கு நாம் சட்டவாக்கத்தை உருவாக்குவோம்.
எனவே அரசாங்கத்தால் அவற்றை இயல்பாக எடுத்துக் கொள்ள முடியாததுடன் அதற்காக பின்பற்றவதற்கு ஒரு செயன்முறை இருக்கும். இதற்கேற்ப அரசாங்கத்தின் நிலத்தை கையகப்படுத்தும் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். பின்னர் புதிய முறைமை ஒன்றை அறிமுகம் செய்ய வேண்டும். பாரியளவிலான விவசாயம் என்பதற்கில்லை என்றாலும் சுற்றாடலை பாதுகாக்கும் வகையில் சிறிய காணிகளை கொண்டவர்களுக்கும் ஏற்ற வகையில் இவை முன்னெடுக்கப்பட வேண்டும். அனைவருக்கும் இலவசமான காணி இருக்க வேண்டும். நாம் அதனை முன்னெடுப்போம். இது அவசியமானது.
சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக ஆகக்கூடியது 02 மில்லியன் சுற்றாலாத்துறையினரை இலக்கு வைத்து புதிய நிகழ்ச்சித் திட்டமொன்றை நாம் அறிமுகம் செய்யவுள்ளோம். சுற்றுலாத்துறையின் மேம்பாடு தொடர்பில் நாம் மாலைதீவிடமிருந்து கற்றக்கொள்ள வேண்டும். நாம் எமது சுற்றுலாத்துறையை மீட்க வேண்டும்.அதற்காக நாம் 02 மில்லியன் சற்றாதுறையினரை இலக்கு வைத்துள்ளோம்.
இதற்காக பல திட்டங்களை நாம் வகுத்து வருகின்றோம். அதில் யாழ்.குடாநாட்டைச் சூழ முன்னெடுக்கப்படும் கடல் சுற்றுலாத்துறை, பொதுமக்கள் கப்பல் போக்குவரத்து சுற்றுலாத்துறை என்பன அடங்கும். இந்த கப்பல் போக்குவரத்துச் சேவை மூலம் திருகோணமலை அல்லது கொழும்பில் வைத்து ஆரம்பிக்கும் கடல் பயணம் அந்தமான் தீவு, மியன்மார், தாய்லாந்து, மலேசியா என பயணித்து சிங்கப்பூரில் முடிவடையும். சீனா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், தென்கிழக்காசியா ஆகிய நாடுகளில் பெருமளவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரை இலக்கு வைப்பதாக அது அமையும்.
அதனை தவிர புதிய தொழில்துறைகள், நனோ தொழில்நுட்பம், உற்பத்தி துறை ஆகியன தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்த ஆரம்பித்துள்ளோம். நாம் இப்பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றாவிட்டால் எம்மால் இலக்குகளை அடைய முடியாமல் போய்விடும். எமது சனத்தொகையில் அதிகமான வயதானவர்களும் மிகக் குறைந்த இளைஞர்களுமே உள்ளனர். எனவே, ஏன் நாம் அதனை இப்போதே தொடங்க ஊக்கமளிக்கக் கூடாது. தானியங்கி, ரோபோட்டிக்ஸ் ஆகிய துறைகளை ஊக்குவிக்க வேண்டும். இதற்காக புத்தம் புதிய கல்வி முறைமை எமக்கு அவசியமாகும்.
இவ்வருடம் கல்வி துறைக்காக போதிய நிதி ஒதுக்காமை தொடர்பில் நான் குற்றம் சுமத்துகின்றேன். கோவிட் இற்குப் பின்னர் மீள்வதற்கான முயற்சிகளை கல்வியமைச்சு இதுவரையில் முன்னெடுத்து வருகின்றது. அப்படியே அதிக நிதியை வழங்கினாலும் கூட அவர்களால் அதனை திறம்பட பயன்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகிறது. எனவே திட்டமிட்டு அடுத்த வருடம் முதல் அதிக நிதியை ஒதுக்க வேண்டும்.
பசுமை பொருளாதாரம் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும். நாம் புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். உண்மையில் பசுமை ஹைட்ரஜன் எமக்கு சாத்தியமாகும். அதற்கான வாய்ப்புகளையே அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சுகாதார சேவைகளுக்கான பிராந்திய மையம், துறைமுக நகரை எவ்வாற கரையோர மையமாக அபிவிருத்தி செய்வது போன்ற பல விடயங்கள் தொடர்பில் அரசாங்க தரப்பு என்ற வகையில் நாம் உலக வங்கி , ஆசிய அபிவிருத்தி வங்கி, அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுடன் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளோம்.
சிவப்புக் கொடியைக் காட்டி எதிர்ப்பு தெரிவிப்பதா அல்லது ஒத்துழைப்பு வழங்குவதா என்பது தொடர்பில் தனியார் துறையினர் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் மட்டுமன்றி தனியார் துறையினரும் பொது மக்களும் பாரிய வகிபாகத்தை முன்னெடுக்க வேண்டும்.
மக்களுக்கு அவசியமான சுகாதாரம் , கல்வி மற்றும் நலன்புரி வசதிகளை வழங்குவதை அரசாங்கம் கையாள வேண்டியிருப்பதனால் தனியார் துறையினரே வியாபாரங்களை முன்னெடுக்க வேண்டும்.
வேறு வழியில்லை.பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தால் தனியார் துறையும் வளர்ச்சி அடையும் என்பதை நான் அறிவேன். வியாபார முன்னெடுப்புகளை அரசாங்கத்தால் முன்னெடுக்க முடியாது.
தொழில்துறையினர் மற்றும் உற்பத்தியாளர்கள் போட்டி நிலைமைகளுக்கு முகம்கொடுக்கும் வகையில் வர்த்தக சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டத்துடன் கூடியதாக சுங்கத் தீர்வை மற்றும் சுங்கமற்ற தீர்வைகளை எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு நீக்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
எவ்வாறாயினும் 2023 தொடக்கத்தில் சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். அடுத்து, இந்தியா, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளுடனும் இந்த ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்படும் .
அடுத்த ஆண்டில் அல்லது அதற்கு அடுத்த ஆண்டில் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நீண்ட கால இலக்காகும். அது உங்களை தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவிற்கு அழைத்துச் செல்லும்.
மக்களைப் பலப்படுத்துவதா? அல்லது மக்களின் பணத்தைக் கொண்டு காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ஶ்ரீலங்கன் மற்றும் டெலிகொம் நிறுவனங்களை வலுப்படுத்துவதா? என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். மக்களை பாதுகாப்பதற்கே தவிர இந்த நிறுவனங்களையும் கட்டடங்களையும் பாதுகாப்பது எனது முன்னுரிமையல்ல.
நாங்கள் ஏன் அவற்றை விற்கின்றோம் என கேட்பவர்களுக்கு, விற்பதால் கிடைக்கும் பணத்தை அந்நியச் செலாவணி கையிருப்பில் சேர்த்து, ரூபாயை வலுப்படுத்தப் போகின்றோம் என நான் கூற விரும்புகின்றேன்.
என்னிடம் 07 பில்லியன் ரூபாய் இருந்தால் அதனை கையிருப்பில் வைத்து நாட்டை இயல்பு நிலைக்கு மீட்பேன். இந்த நாட்டு மக்கள் சிறந்த முறையில் வாழ வேண்டும் என்றே நான் விரும்புன்கிறேன்.
வங்கிகள் சுமக்கும் கடனை என்ன செய்வது? சுற்றுலாத் துறை, கட்டுமானத் துறை, அதைவிட சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை போன்ற விடயங்களில் நாம் கவனம் செலுத்துகின்றோம்.
நாம் இதுவரை கட்டுமானத் துறையை அதிகமாக நம்பியிருந்தோம். அதற்காக நாம் அதை கைவிட வேண்டும் என்பது அர்த்தமல்ல. நாம் அதை திரும்பப் பெற வேண்டும்.
உங்களிடம் என்ன முன்மொழிவுகள் இருந்தாலும் நான் கேட்க விரும்புகிறேன். மீண்டும், என்னை இங்கு அழைத்தமைக்காக நன்றி.”
இந்நிகழ்வில், மத்திய வங்கி ஆளுநர் ந்ந்தலால் வீரசிங்க, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, உலக வங்கியின் தெற்காசியாவுக்கான பணிப்பாளர் பாரிஸ் ஹடாட் ஷர்வோஸ் , ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் சென் சென், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் விஷ் கோவிந்தசாமி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் சந்திம சமரசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.