Presidential Secretariat of Sri Lanka

பாலினம், சமத்துவம் ஆகியவற்றை வலுப்படுத்தி பெண்களுக்கு அதிகாரமளிக்க சட்டமூலம்! – ஜனாதிபதி

பாலினம், சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

இந்த சட்டமூலத்தை உருவாக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் மட்டுமன்றி ஏனைய துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும், அரச மற்றும் தனியார் துறைகளும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார்.

புதிய சட்டமூலத்தின் ஊடாக தேசிய பெண்கள் ஆணைக்குழு என்ற பெயரில் சுயாதீன ஆணைக் குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கையின் முதலாவது அரச சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 2 வீதமாக இருந்ததாகவும், சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டு 91 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தற்போதைய பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 5.3 வீதம் மட்டுமே எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (01) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி,
”இன்று எமது பாராளுமன்ற பெண்கள் கூட்டமைப்பினால் ஆண், பெண் பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறைக்கு எதிரான 16 நாள் செயல்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். 1931ஆம் ஆண்டில் இந்த நாட்டில் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது. முதலாவது இலங்கை அரச சபையில் பெண்கள் இருக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் பாட்டி அந்தத் தேர்தலில் போட்டியிட்டிருந்தார். ஆனால் இந்தத் தேர்தலில் ஒரு பெண்ணும் தெரிவாகவில்லை. எட்டு – ஒன்பது மாதங்கள் ஆகும்போது, எங்கள் பாட்டனார் ஜே.எச்.மீதெனிய அதிகாரம் காலமானதன் பின்னர் மொலமூரே அம்மையார் தெரிவானார்.

எதிர்க்கட்சியிலும் ஃலொரன்ஸ் சேனாநாயக்க என்ற பெண் ஒருவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். 51 பேரில் பெண் ஒருவர் இருந்தார். அதாவது அந்தச் சபையில் 100இற்கு இரண்டு வீதம் அது. சர்வஜன வாக்கெடுப்பின் பின்னர் அதாவது 91 வருடங்களின் பின்னர் நான் இதனைக் குறிப்பிடுகிறேன். இன்று 12 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதாவது 5.3 வீதமானோரே இருக்கின்றனர்.

நாம் என்ன செய்திருக்கிறோம் என்று கேட்கிறேன். 90 வருடங்களாக இரண்டு வீதத்தை 5 வீதமாக மட்டுமே உயர்த்தியுள்ளோம். எமது அரசியல் முறைமை இப்படித்தான் இருக்கிறது. ஆளும் கட்சியில் இருந்தும், எதிர்க்கட்சியில் இருந்தும் எமக்கு இதனை செய்ய முடியாமல் போனது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எமக்கு இரண்டு வீத பெண் பிரதிநிதித்துவம் இருக்கும்போது ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்தில்கூட அந்த இரண்டு வீதம் இருக்கவில்லை. இன்று நிலைமையைப் பாருங்கள். கனடா பாராளுமன்றத்தைப் பாருங்கள். லோக் சபையைப் பாருங்கள்.

அவுஸ்திரேலியாவைப் பாருங்கள். எனவே, பெண்களின் பிரச்சினைகள் குறித்து நாம் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எமக்கு இதில் பொறுப்பு இல்லை என்று கூற முடியாது. காரணம் நாம் அனைவரும் இந்தப் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்துள்ளோம். நானும் இருந்தேன். அப்படியாயின், 91 வருடங்களாக நாம் என்ன செய்துள்ளோம். இரண்டு வீதத்தை 5.3 வீதமாக உயர்த்தியுள்ளோம். குறைந்த பெண் பிரதிநிதிகளே இருக்கின்றனர். 2015ஆம் ஆண்டு உள்ளுராட்சி சபையில் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டது. திருத்தம் செய்யப்பட்டு அந்த வாய்ப்பும் இல்லாமல் போனது. இதைத்தான் செய்துள்ளோம். எமது சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்கள்.

பாராளுமன்றத்தில் 5.3 வீதமான பெண் பிரதிநிதிகளே இருக்கின்றனர். இங்குதான் பிரதான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தப் பணிகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற பெண்கள் கூட்டமைப்பிற்கு பொறுப்பு கொடுத்தேன். விசேடமாக, பாலினம், சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்திற்கான கொள்கைகளை வகுக்குமாறு அறிவுறுத்தினேன். அந்தப் பணிகள் நடந்து வருகின்றன. ஒரு சட்டமூலத்திற்கு பதிலாக இரண்டு சட்டமூலங்களை சமர்ப்பிப்பதாக அவர்கள் அறிவித்தார்கள். இது சிறந்த விடயம். இதற்குத் தேவையான முழுமையான பணிகளை முன்னெடுக்க வேண்டும். சட்டம் மற்றும் கொள்கை மறுசீரமைப்பு மற்றும் பெண்கள் உரிமை, பாலினம், சமத்துவம், ஆகிய விடயங்களுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்காக பாலினம் சமத்துவம் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கத் தேவையான பங்களிப்புச் செய்வதற்கு பாராளுமன்றத்திற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்க வேண்டும். அதிகாரத்துடன் கூடிய தேசிய பெண்கள் ஆணைக்குழு என்ற பெயரில் சுயாதீன ஆணைக்குழுவொன்றை பாராளுமன்ற சட்டமூலத்தின் ஊடாக ஸ்தாபிக்க வேண்டும். அரசாங்கம் இதற்கு ஆதரவளிக்கிறது என்று நான் கூறுகிறேன். எதிர்க்கட்சி இதனை எதிர்க்கும் என்று நான் நினைக்கவில்லை. விசாரணை நடத்த ஒம்புஸ்மன் ஒருவரை நியமிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் மட்டும் இதுகுறித்து கதைப்பது போதுமானதாக இருக்காது. எமது பெருந்தோட்ட நிறுவனங்கள் குறித்து பாருங்கள்.

பெருந்தோட்டங்களில் பணியாற்றும் பெரும்பாலானவர்கள் பெண்கள். ஆனால் பணிப்பாளர் சபையில் ஒரு பெண்ணாவது இருக்கிறார்களா என்று பாருங்கள். ஆடை தொழில்துறையில் பெரும்பாலானவர்கள் பெண்கள் இருக்கின்றனர். ஆனால் நிறைவேற்று அதிகாரத்தில் ஒரு பெண் இருக்கிறாரா? இவ்வாறு பெண்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. குறிப்பாக பணிப்பாளர் சபைகளில் பெண்களுக்கு பொறுப்புக்கள் வழங்க வேண்டும். அத்துடன் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமானது. இந்த தவறை, தனியார்துறை மட்டுமல்ல அரசாங்கமும் செய்துள்ளது. எமது கூட்டுத்தாபனங்களிலும் பெண் பிரதிநிதித்துவம் இல்லை.

இதற்காக சட்டமொன்றை இயற்றினால், சட்டத்தின் மூலம் இதனை சரிசெய்ய முடியும். இதுபோன்று பாரிய குறைபாடுகள் உள்ளன. இவற்றைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். கல்வித்துறையில் அநேகமான பெண்கள் இருக்கின்றனர். ஆசிரியர், அதிபர்களாக பெண்களே அதிகமாக இருக்கின்றனர். சுகாதாரத் துறையிலும் பெண்கள் இருக்கின்றனர். நிர்வாகத்துறையிலும் பெண்கள் இருக்கின்றனர். தனியார் துறையில் இந்த வளர்ச்சி ஏற்படவில்லை. ஆனால் பல்கலைக்கழகங்களிலும், வெளியிலும் 50 வீதத்திற்கும் அதிகமான பெண்களே கல்வி பயில்கின்றனர். சிறுவர் நலன்புரி விடயங்களையும் இந்த கூட்டமைப்பிடம் ஒப்படைத்துள்ளோம்.

சிறுவர் விடயங்களிலும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. விசேடமாக, அநாதை பிள்ளைகளின் எண்ணிக்கையைப் பார்த்தால், குறைந்தளவிலான அநாதை பிள்ளைகளே பராமரிக்கப்படுகின்றனர். அந்த பிள்ளைகள் இருக்கும் இடங்களை யாரும் பார்ப்பதில்லை. பழைய கட்டிடங்களே இருக்கின்றன.

உரிய ஆசிரியர்கள் இல்லை. எனவே, முழுமையான, புதிய சிறுவர் பாதுகாப்பு சேவையொன்றை நாட்டில் உருவாக்க வேண்டும். இதற்காகவும் இந்த கூட்டமைப்பு பணியாற்றுகிறது

ஊனமுற்றவர்களையும் பார்க்க வேண்டும். அவர்களுக்கு நாம் வழங்கும் சேவை போதுமானதாக இல்லை. அவர்கள் மட்டுமல்ல முதியோர் குறித்தும் பாருங்கள். அவர்களுக்கு வழங்கும் பணத்தின் அளவு குறைந்துள்ளது. காரணம், நாம் கடன் செலுத்துகிறோம். சம்பளம் கொடுக்கின்றோம்.

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு பணத்தைக் கொட்டுகிறோம். இதுதான் பிரச்சினை. இதில் மாற்றம் செய்ய முயற்சித்தால், சிலர் குறைகூறுகின்றனர். இந்த சமூகத்திற்கு ஒதுக்கியுள்ள பணம் போதுமானதாக இல்லை. இவற்றை அதிகரிப்பதற்கு முன்னர், இதற்காக இயங்கும் நிறுவனங்கள் இருக்க வேண்டும். இல்லையெனில், பணம் வீண்விரயம் ஆகும். எங்களுக்கு திரையின் வெளித்தோற்றம் சிறப்பாக தெரிகிறது. திரைக்கு முன்பாகவே நாம் அனைவரும் இருக்கிறோம்.

திரைக்கு முன்பாக நாம் அனைவரும் நடித்துக் கொண்டிருக்கிறோம். அரசாங்கமாகட்டும், எதிர்க்கட்சியாகட்டும், தனியார்துறையாகட்டும் அனைவரும் திரைக்கு முன்னால் நடிக்கிறோம்.

ஆனால் திரையை விலக்கிவிட்டு உள்ளே பாருங்கள். யாரும் திரையை விலக்கவில்லை. நாம் திரையை விலக்கி உள்ளே பார்க்க வேண்டும். உண்மையில், எந்தவொரு அரசாங்கமும் இந்த அமைச்சை முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சாக கருதவில்லை. தற்போதுதான் பெண்களுக்கு வேறு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படுகின்றன. முன்னர் தலதா அத்துகோரள நீதியமைச்சராக பணியாற்றினார். சுகாதார அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி பணியாற்றியிருந்தார். எனினும், இன்னும் முக்கியமான அமைச்சுப் பொறுப்புக்கள் பெண்களுக்கு வழங்கப்படவில்லை.

வேறுநாடுகளைப் பாருங்கள். இந்தியாவில் நிதியமைச்சர் முன்னதாக பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார். முக்கியமான பொறுப்புக்களில் பெண்கள் இருக்கின்றனர். இந்த நிலைக்கு நாங்கள் இன்னும் வரவில்லை. எனவே, இதற்குத் தேவையான சட்டதிட்டங்களுக்கான சட்டமூலத்தையும், கொள்கைகளையும் அனுப்பிவையுங்கள் என்று பாராளுமன்ற பெண்கள் கூட்டமைப்பைக் கேட்டுக்கொள்கிறேன். இதற்குத் தேவையான பணிகளை இந்தக் காலப்பகுதியில் நாம் முன்னெடுப்போம். பெண்களின் பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்திலும், அரசியலிலும் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் அதிகரிப்பதற்கான பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. இதற்குத் தேவையான வழிகள் குறித்து நாம் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

அடுத்து சமுர்த்தி குறித்து பார்க்க வேண்டும். ஏராளமானோருக்கு சமுர்த்தி வழங்க வேண்டியுள்ளது. எனினும், அனைவருக்கும் வழங்க முடியாமல் இருக்கிறது. காரணம், பொருத்தமற்றவர்களும் சமுர்த்தியைப் பெறுகின்றனர். பொறுத்தமற்றவர்களை அப்புறப்படுத்தினால், தகுதியுடைய அனைவருக்கும் சமுர்த்தி வழங்க முடியும். சிலர், 20 வருடங்களாக சமுர்த்தி பெறும் பட்டியலில் இருக்கின்றனர். எனினும், இதனைத் தொடர்ந்து செய்ய முடியாது. எனவே, தகுதியானவர்கள் யார் என்பதையும், புதிதாக யாரை இணைத்துக் கொள்ளவது என்பதையும் கண்டறிய வேண்டும். சிலர் இதனை அரசியல் செயற்பாடாக பார்க்கக்கூடும். எனினும், உண்மையில் சமூர்த்தி உதவி தேவையானவர்களுக்கு அதனை வழங்க வேண்டும். சமுர்த்தியைப் பெற தகுதியற்றவர்கள் அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும். அனைவருக்கும் சமுர்த்தி வழங்க எமக்கு பணம் இல்லை.

இந்த நிலைமையை நான் சொல்ல வேண்டும். இந்தப் பணிகள் சிரமமானவை என்றாலும் இதனைப் பொறுப்பேற்றுள்ளோம்.

நாட்டையும், சமூகத்தையும் கட்டியெழுப்ப வேண்டும். எடுக்கும் சில தீர்மனாங்கள் பிரபலமானதாக இருக்காது. எனினும், இந்தப் பணிகளை முன்னெடுப்பதற்கான பலம் பாராளுமன்றத்திற்கு இருக்க வேண்டும். கல்வி குறித்தும் பேச வேண்டியிருக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் தீர்மானிக்க வேண்டும். 1946ஆம் ஆண்டு இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தினோம். அக்காலத்தில் இருந்ததைப்போல் பாடசாலைகள் வேண்டுமா? அல்லது 80ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இருந்ததைப்போல் பாடசாலைகள் வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டும். எமக்கு 2023ஆம் ஆண்டில் இருந்து 25 ஆண்டுகள் முன்நோக்கிப் பயணிக்கக் கூடிய பாடசாலைகளே எமக்குத் தேவை. எம்மிடம் மிகப் பெரிய பல்கலைக்கழங்கள் இல்லை. ஆனால், கல்விக்கான பிராந்திய வலயமாக இலங்கை இருக்க முடியும். இதற்கு தயாராக வேண்டும். பல பில்லியன் டொலர்கள் வெளியே செல்வதற்கு நீங்கள் அனுமதிக்கிறீர்கள். குறைந்தபட்சம் 3 பில்லியன் டொலர்கள் வெளியே செல்கின்றன. இந்த மூன்று பில்லியன் டொலர்கள் இலங்கையில் தக்கவைத்துக் கொள்ள முடியும். இதற்கு மேலதிகமாக நாம் உரிய முறையில் செயல்பட்டால் மேலும் 10 பில்லியன் டொலர்களை உள்ளீர்த்துக் கொள்ள முடியும். இதனையே செய்ய வேண்டும். இதனை செய்ய முயற்சிக்கும் என்னைத் திட்டுகிறார்கள்.

இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும். இளைஞர்கள் 21 – 22 வயதில் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற வேண்டும். அப்படியிருந்தால் அவர்களுக்கு வேலைக்குச் செல்ல முடியும். தொழில் சந்தைக்குத் தேவையான வகையில் இவற்றை நாம் செய்ய வேண்டும். அரச வேலைவாய்ப்புக்கள் எதிர்காலத்தில் இல்லாமல் போகும். இந்த விடயத்தில் தேசிய சபையும் பாராளுமன்றத்தில் உள்ள ஏனைய குழுக்களும் கவனம் செலுத்தவேண்டும். இதனை அரசாங்கம் தனியாக செய்வதா? அப்படி செய்தவுடன் எதிர்க்கட்சியினர் இதனை எதிர்த்து வீதிகளில் இறங்குவதா? அல்லது பாராளுமன்றம் என்ற வகையில் நாம் அனைவரும் இணைந்து இதனைச் செய்வதா என்ற கேள்வி மட்டுமே இருக்கிறது. இந்த இரண்டில் ஒன்றை நாம் தீர்மானிக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்காக கல்வியை மேம்படுத்த வேண்டும். இதுகுறித்து நாம் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும்.” என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

(English) Recent News

Most popular