Presidential Secretariat of Sri Lanka

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் வளாகம், இலங்கை IOC எண்ணெய் தாங்கிகள் மற்றும் களஞ்சிய முனையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

பல தசாப்தங்களாக பயன்படுத்தப்படாத எண்ணெய் தாங்கிக் கட்டமைப்பை நவீனமயப்படுத்தி, திருகோணமலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை

திருகோணமலை எண்ணெய் தாங்கி கட்டமைப்பை மீண்டும் செயற்படுத்தி தேசிய பொருளாதாரத்துடன் இணைப்பதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இன்று (03) முற்பகல் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் வளாகம், இந்தியன் ஒயில் நிறுவன எண்ணெய் தாங்கிகள் மற்றும் களஞ்சிய முனையத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டபோதே, ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பல தசாப்தங்களாக பயன்படுத்தப்படாத திருகோணமலை எண்ணெய் தாங்கிக் கட்டமைப்பை நவீனமயப்படுத்தி, திருகோணமலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையம் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

திருகோணமலை இந்தியன் ஒயில் நிறுவனத்தின் எண்ணெய் தாங்கிகள் மற்றும் களஞ்சிய முனையத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா வரவேற்றார்.

அவற்றின் செயற்பாடுகளை பார்வையிடச் சென்ற ஜனாதிபதிக்கு, அந்த முனையத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் சுருக்கமாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்தியன் ஒயில் நிறுவனத்தின் மசகு எண்ணெய் கலக்கும் ஆலையையும் ஜனாதிபதி பார்வையிட்டதுடன், வருடத்திற்கு 18000 கிலோ லீற்றர் கொள்ளளவைக் கொண்டுள்ள இந்த ஆலை மூலம் நாட்டின் மசகு எண்ணெய் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது.

எண்ணெய்க் களஞ்சிய முனையத்தில் அமைந்துள்ள அதிநவீன ஆய்வு கூடத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அதன் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன், அண்மையில் மேம்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது உள்நாட்டு கிரீஸ் உற்பத்தி ஆலையையும் பார்வையிட்டார்.

வருடாந்தம் 3000 மெற்றிக் டொன் கொள்ளளவைக் கொண்ட இந்த கிரீஸ் உற்பத்தி ஆலையானது இந்நாட்டின் மொத்த கிரீஸ் தேவையையும் பூர்த்தி செய்வதோடு தற்போது கிரீஸ் இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் திறனையும் கொண்டுள்ளது.

நாட்டின் வலுசக்தித் தேவைகள் எப்பொழுதும் திறம்படப் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்து, எல்லா நேரங்களிலும் தொடர்ச்சியாகச் செயற்படும் இந்தியன் ஒயில் நிறுவனத்தின் பவுசர் நிரப்பு வளாகத்தின் வசதிகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனம் இணைந்து முன்னெடுக்கும் 61 எண்ணெய் தாங்கிகளை உள்ளடக்கிய மேல் தாங்கி வளாகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அதன் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.

இதேவேளை, இரண்டாம் உலகப் போரின் போது குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் தாங்கி வளாகத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

நெருக்கடியான காலப்பகுதியில் நாட்டின் எரிபொருள் விநியோகத்தை முறையாகப் பேணுவதற்கு இந்தியன் ஒயில் நிறுவனம் ஆற்றிய அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பாராட்டியதுடன், ஜனாதிபதியின் வருகையை நினைவுகூரும் வகையில் அவருக்கு நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர்களான பிரமித பண்டார தென்னகோன், டி.வி.சானக்க, பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இந்தியன் ஒயில் நிறுவனத்தின் சிரேஷ்ட உப தலைவர் பி. முகர்ஜி, உப தலைவர் பி.கே.மண்டல், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular