Presidential Secretariat of Sri Lanka

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அவலுவூட்டல் குறித்த தேசியக் கொள்கைக்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பிற்கு UNFPA பாராட்டு

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கையை அங்கீகரிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் அர்ப்பணிப்பை ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) பாராட்டியுள்ளது.

ஜனாதிபதியின் இந்த அர்ப்பணிப்பு, இலங்கையில் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், உரிமைகள் ஆகியவற்றை உறுதி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக அந்த நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் மதிப்பீட்டு அலுவலகப் பணிப்பாளர் மார்கோ செகோன் உள்ளிட்ட பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டனர்.

கொள்கை மற்றும் நிறுவன மற்றும் தொழில்சார் மட்டங்களில் வலுவான தேசிய மதிப்பீட்டுத் திறன்களை மேம்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள வெற்றிகளுக்கு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் வாழ்த்துத் தெரிவித்தது.

குறிப்பாக அரச துறை மதிப்பீட்டை ஊக்குவிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமைத்துவத்தைப் பாராட்டிய பிரதிநிதிகள், சவால்களை வெற்றிகொள்வதில் இலங்கை தனித்துவமான பாத்திரத்தை வகிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் வலுவான தேசிய மதிப்பீட்டு திறன்களை அபிவிருத்தி செய்வதில், இலங்கையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இது தொடர்பான சட்டமூலமொன்று எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு, குறிப்பாக பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் ஆகிய துறைகளில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சியை ஊக்குவிப்பதற்கான முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மார்கோ செகோன், இலங்கையின் தேசிய மதிப்பீட்டுத் திறனை மேம்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், தேசிய மதிப்பீட்டு திறன் அபிவிருத்தி நிபுணர் அசேல களுகம்பிட்டிய மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் மதிப்பீட்டு அலுவலக அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular