Presidential Secretariat of Sri Lanka

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்ப தனது தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு!

  • டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்த விசேட குழு

டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக நவீன இலங்கையை கட்டியெழுப்ப தனது தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரச துறையை டிஜிட்டல் மயமாக்குவதும், டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்காக அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அலரிமாளிகையில் நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற “DIGIECON 2030” வெளியீட்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியை தொழில்நுட்ப அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.

தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் வரவேற்புரை நிகழ்த்தியதைத் தொடர்ந்து (Leveraging digital economy toward a sustainable & resilient Sri lanka) “நிலையான மற்றும் மீள்திறன்மிக்க இலங்கையை நோக்கி டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்” என்ற தொனிப்பொருளில், உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தில் டிஜிட்டல் அபிவிருத்தி தொடர்பான பிராந்திய கூட்டிணைப்பின் பிரதானி சித்தார்த்த ராஜா உரையாற்றினார்.

DIGIECON SRI LANKA 2023-2030 இணையத்தளம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், டிஜிட்டல் மயமாக்கலுக்கான ஜனாதிபதியின் கொள்கைக்கு, தகவல் தொழில்நுட்ப சங்கங்கள் தமது ஆதரவை இதன்போது தெரிவித்தன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கருத்தின்படி ஆரம்பிக்கப்பட்ட “DIGIECON 2030”, டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் ஒரு தனித்துவமான மைல்கல்லாகும். நிலையான பொருளாதார வளர்ச்சியை உருவாக்கல் மற்றும் உலக சந்தையில் நாட்டின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் புத்தாக்கத் தீர்வுகளை ஏற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதால், தொழில்நுட்ப அமைச்சு முக்கிய பங்குதாரர்களின் ஆதரவுடன் திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்தும்.

DIGIECON 2030”, மூலம் புதிதாக பல்வேறு துறைகளில் ஆரம்பிக்கப்பட்ட புதுமையான, நவீன, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் 50 பேருக்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு உலகளாவிய முதலீடு மற்றும் சந்தை அணுகலுக்கான தளம் அமைக்கப்படும்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய ஆய்வு நிறுவனங்களை இணைத்து டிஜிட்டல் கொள்கையை திட்டமிடுவதற்காக, இந்த வருடம் 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதேபோன்று செயற்கை நுண்ணறிவை முதன்மையாகக் கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்,

சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்புகள் எமக்கு அவிருத்திக்கான ஆரம்பத்தை தந்துள்ளன. அவற்றை நாம் பற்றிக்கொள்ள வேண்டும். அதேபோல் நூற்றாண்டுக்கு பொருத்தமான உயர் போட்டித் தன்மை மிகு சந்தைப் பொருளாதாரத்தை நாம் திட்டமிட வேண்டும்.

உயர் போட்டித் தன்மை என்பது சகலதுறைகளுடனுமான போட்டித்தன்மை அல்ல. நம்மால் அவ்வாறு செய்யவும் முடியாது. இருப்பினும் நம்மால் போட்டித்தன்மையை பேணக்கூடிய துறைகள் உள்ளன. உதாரணமாக, வலயத்தின் வளங்கள் மத்தியஸ்தானமாக விவசாயத்தின் சில அங்கங்களை குறிப்பிடலாம். அந்த துறைகளை நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய அதேநேரம் பசுமை பொருளாதாரத்திற்கான சாத்தியக்கூறுகள் இலங்கையில் அதிகமாக காணப்படுவதால் அதிக போட்டித் தன்மை கொண்ட அந்த பொருளாதாரம், பசுமை பொருளாதாரமாகவும் அமைந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

மூன்றாவதாக அதிக போட்டித் தன்மை கொண்டதாகவும் பசுமை பொருளாதாரமாக மற்றும் டிஜிட்டல் பொருளாதாரமாகவும் அமைந்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த பாதையே எமக்கு பொருத்தமானதாகும். மேற்படி இரு துறைகளும் ஒன்றாக இணைவது அவசியம் என்பதோடு பின்னர் அவை இரண்டும் போட்டித் தன்மை மிகுந்த துறைகளாக மாற வேண்டும்.

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கு இதுவரையில் தயாரிக்கப்படாமல் இருக்கின்ற பொருளாதார கொள்கையையும் நாம் தயாரிக்க வேண்டியது அவசியமாகும். அது தொடர்பிலான பல்வேறு கருத்துக்களும் யோசனைகளும் காணப்பட்ட போதிலும் மேற்படி துறைக்கு சமீபமான விதத்திலேயே அவற்றை செயற்படுத்த வேண்டும். அத்தோடு அரசாங்க நிதியை கொண்டு டிஜிட்டல் பொருளாதாரத்தை செயற்படுத்த முடியாது என்பதால் தனியார் துறையே அதனை மேற்கொள்ள வேண்டும்.

அதற்குத் தடையாக அரசாங்கம் நிற்கப்போவதில்லை என்பதோடு அதற்கான ஊக்குவிப்பையும் வழங்கும். அதுவே எமது கொள்கையாகும். அதற்கமைய செயற்கை நுண்ணறிவு உள்ளடக்கிய டிஜிட்டல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதே எமது கொள்கையாகும். அதனை செயற்படுத்துவதற்கு அவசியமான மனித வளத்தை முதலில் மேம்படுத்த வேண்டும்.

அரசாங்கம் அதற்கான முதலீடுகளை மேற்கொள்ளும் போது அதற்கான மனித வளமும் மேம்படும். இதனையே தனியார்துறை செய்ய வேண்டியுள்ளதுடன் நாம் தற்போதும் அதற்கான நிதியை வழங்குகின்றோம்.
டிஜிட்டல் துறையை முழுமையாக நோக்கும் போது, அமெரிக்காவும் சீனாவுமே பலவான்களாக உள்ளனர். ஐக்கிய அமெரிக்காவை போன்று சீனாவும் இத்துறையை சந்தை வாயிலாகவே கையாளுகிறது. சீனாவின் சகல அபிவிருத்திகளும் சந்தை வாயிலாகவே இடம்பெற்றிருப்பதால் டிஜிட்டல் கொள்கை அரசாங்கத்தை மையப்படுத்தியதாக அமைந்திருக்க வேண்டும் என நாம் கருத முடியாது.

ஆனால் அரச துறைகளை டிஜிட்டல் மயமாக்கி அதன் பணிகளையும் துரிதப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அரச துறைகளின் டிஜிட்டல் மயமாக்களை துரிதப்படுத்துவதற்காக அமைச்சரவை குழுவொன்றை நியமிக்க நாம் திட்டமிட்டுள்ளோம். அந்த நடவடிக்கைகள் உங்களது டிஜிட்டல் மயமாக்க முயற்சிகளையும் துரிதப்படுத்த உதவும்.

இதற்காக எம்மால் நீண்ட காலத்தை செலவிட முடியாது. இந்த தருணத்தில் எமது அண்டை நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேண வேண்டியது அவசியமாகும். இத்துறை மிக வேகமாக வளர்ச்சி கண்டிருக்கும். இந்தியாவுடனும் குறிப்பாக தென் இந்தியாவுடனும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியில் மிக நெருக்கமாக செயற்பட நான் தயாராக உள்ளேன். இதுவே இலங்கை டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையாக காணப்படுகிறது.

இத்துறைக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ச்சியாக வழங்கும் இயலுமை அரசாங்கத்திடம் இல்லை என்பதால் அவற்றை தனியார் துறையே வழங்க வேண்டும். தனியார் துறை உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் போது அரசாங்கம் அதனை ஊக்குவிக்கும். இவ்வாறான காரணத்திற்காகவே ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான நிதி வழங்கும் இயலுமை எம்மிடத்தில் இல்லை.

இது தொடர்பில் எமக்கு அவசியமான வெளிநாட்டு முதலீடுகள் ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் அதனுடன் இணைந்த ஏனைய நிறுவனங்களுக்கு கிடைப்பதற்கு இடமளியுங்கள். இவ்வாறாகவே அரச டிஜிட்டல் கொள்கைக்கான திட்டமிடல்களை நாம் மேற்கொண்டு வருகின்றோம். இது தொடர்பான விடயங்களை உங்களுக்கு தெரியப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என்பதுடன் இந்த விடயத்தில் நீங்கள் அரசாங்கத்துடனோ அல்லது அரசாங்கம் உங்களுடனோ இணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.

அனைத்து தொழில்நுட்பங்களும் இலங்கையில் பரீட்சித்து பார்க்கப்படுவதால் இந்த கொள்கை தயாரிப்பு தகவல் தொழில்நுட்ப துறை மீதே தங்கியுள்ளது. தொழில்நுட்பத்திற்கான தொழிற்சாலைகளை ஆதாரமாக கொண்ட புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் எமக்கு உள்ளது.

விவசாயம், மீன்பிடித்துறை, உற்பத்திச் சேவைகள் போன்ற துறைகள் இன்னும் 20 வருடங்களில் நீங்களும் நாங்களும் இன்று காண்கின்ற நிலையை விடவும் பாரிய மாற்றங்களைக் கொண்டதாக இருக்கலாம். இவற்றில் இந்தியா வளர்ச்சி காணும் போது தெற்காசியாவிலும் அவை உள்நுழையும்.

நாம் செய்ய எதிர்பார்கின்றவற்றை நான் கூறுகிறேன். எமக்கு தற்போது அமைச்சரவை குழுவொன்றும் உள்ளது. தற்போது நாம் நம்மால் இலகுவாக அபிவிருத்தி செய்யக்கூடிய துறைகள் பற்றியே அவதானம் செலுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு அவ்வாறதொரு துறையாகும். செயற்கை நுண்ணறிவு என்பது என்ன? அது எவ்வாறு மனதுடன் தொடர்புபடுகிறது. இங்குள்ளவர்கள் பௌத்தர்கள் என்பதால் இது மிகவும் வழக்கமான தலைப்பாகும்.

தம்ம பதத்தின்படி, அனைத்தும் மனத்தால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம். அப்படியானால் மனதிற்கும் செயற்கை நுண்ணறிவிற்கும் என்ன தொடர்பு? இது நாம் அவதானம் செலுத்த வேண்டிய ஒரு பகுதி என்று நான் நினைக்கிறேன். இரண்டாவது தேவை ஆராய்ச்சி. இலங்கையில் மிகக் குறைவாகவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுகின்றன. நான் ஒரு போதும் புதிய ஆராய்ச்சி நிறுவனங்களை தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை.

பல்கலைக்கழகங்களையும் தனியார் துறையையும் அரசாங்கம் இணைக்க விரும்புகிறது. பல்கலைக் கழகங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நாங்கள் நிச்சயமாக உதவுவோம். ஆனால் தனியார் துறைதான் ஆராய்ச்சியை முன்னெடுக்க வேண்டும். அதற்கான பணத்தை தனியார் துறை முதலீடு செய்ய வேண்டும். அவர்கள் அதில் சிலவற்றை இழக்கலாம். ஆனால் ஆராய்ச்சி மூலம் தனியார் துறை இந்தத் தொழிலை இயக்குவதை உறுதி செய்வதால். அவர்கள் மற்ற நன்மைகளைப் பெறுவார்கள்.

இதற்கு உதவக்கூடிய பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் இருந்தால், அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்படும். இந்தக் கொள்கையைத் தயாரிக்க இராஜாங்க அமைச்சர், உங்கள் அனைவரிடமும் கலந்தாலோசித்து, மீண்டும் அமைச்சரவைக் குழுவிடம் அறிக்கை அளிப்பார். இந்த வருடத்தின் ஆரம்பமாக அதற்காக 100 மில்லியன் ரூபாவை அதற்காக ஒதுக்குகின்றேன்.

அடுத்த வருடம், எங்களுக்கு ஆராய்ச்சிகள் தேவை. நீங்கள் செயற்கை நுண்ணறிவில் முக்கிய கவனம் செலுத்தி ஆராய்ச்சிகளை நடத்த வேண்டும். அதற்கு இந்த ஆண்டு உங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஒரு பில்லியன் ரூபாயை நான் ஒதுக்குவேன்.அதன் பின்னர் 2025 இல் என்ன செய்யலாம் என்று முடிவு செய்வோம்.

நான், பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்களுடன் இணைந்து, இந்த அரசாங்கம் ஒட்டுமொத்த நாட்டையும் நவீனமயப்படுத்துவதில் உறுதியாக உள்ளோம். அரசாங்கம் தனியார் துறையுடன் இணைந்து, டிஜிட்டல் மயமாக்கலில் இலங்கையை பிராந்தியத்தில் முன்னணி நாடாக மாற்றுவோம்.

இங்கு உரையாற்றிய தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்,

இன்று அறிமுகப்படுத்தப்பட்ட “DIGIECON 2030” ஊடாக டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் இலங்கை ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கிறது.

மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் நிலையான வர்த்தகம் செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகள் ஊடாக பொருளாதாரத்தை விரைவுபடுத்துவது எமது நோக்கமாகும்.

“DIGIECON 2030” மூலம், அனைத்து பங்குதாரர்களுக்கும் டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை எளிதாக்குவதற்கு அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்றும், அதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை முன்னெடுக்கும் என்றும் நான் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்கிறேன். இதன் மூலம், முதலீட்டுக்கு சாதகமான வர்த்தக சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் மற்றும் மனித வளத்தை மையப்படுத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கூட்டாண்மைகளை ஆராயும் தொடர்ச்சியான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது என்பதை நான் கூற விரும்புகிறேன்.

அமைச்சரவை அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம்ஜயந்த், அலி சப்ரி, கஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரன, நசீர் அஹமட், மனுஷ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர்களான சுரேன் ராகவன், அரவிந்த குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் பேராசிரியர் நெரஞ்சன் குணவர்தன, வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், உலக வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular