Presidential Secretariat of Sri Lanka

நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு நுவரெலியாவின் அதிகபட்ச பங்களிப்பினை பெற்றுக்கொள்வதற்கு புதிய வேலைத்திட்டம்

  • நகரத்திற்கு நீர் முகாமைத்துவம் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு நிலையான தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி அறிவுரை

உயர்ந்த கட்டிடங்களுக்கு மாறாக ரம்மியமான சூழலுடன் நுவரெலியாவை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

சம்பிரதாய முறைமைகளை விடுத்து நாட்டிற்கு அவசியமான புதிய வேலைத்திட்டத்திற்காக அனைவரும் ஒன்றிவோம் -ஜனாதிபதி தெரிவிப்பு.

நான்கு வருடங்களுக்குள் இந்நாட்டின் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கான பிரதான சுற்றுலா நகரமாக காணப்படும் நுவரெலியாவின் அதிகபட்ச பங்களிப்பினை பெற்றுக்கொள்ளவதற்கான திட்டமிடலுடன் வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

நுவரெலியா நகர அபிவிருத்தி தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் நுவரெலியா புதிய நகர அபிவிருத்தி திட்டம் மற்றும் நுவரெலியா சுற்றுலா திட்டம் என்பனவும் வெளியிடப்பட்டன.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்று பலர் நினைத்தாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தம் வாயிலாக நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற புதிய எதிர்பார்ப்புக்கள் தோன்றியுள்ளதென சுட்டிக்காட்டினார்.

நுவரெலியா மாவட்டத்தை நோக்கி வரும் சுற்றுலாப் பிரயாணிகளை இலக்கு வைத்து வருடம் முழுவதும் சுற்றுலாப் பிரயாணிகளின் வருகை அதிகரித்துக் கொள்ளுவதற்கான கண்கவர் நகரமாக அதனை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் நோக்கத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

சுற்றுலாத்துறையின் தேவைப்பாடுகளை அறிந்துகொண்டு புதிய திட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உயர் கட்டிடங்களுக்கு மாறாக ஓய்வெடுக்கக்கூடிய வகையிலான ரம்மியமான சூழலுடல் அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

நுவரெலியா நகரத்திற்குள் மழைநீர் வழிந்தோடுவதற்கு அவசியமான வேலைத்திட்டம் ஒன்று இல்லாமை நீண்டகால பிரச்சினையாக உள்ளதெனவும் அதற்கு தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்திய ஜனாதிபதி, குடிநீர் பிரச்சினைக்கான தீர்வுகளை வழங்குவதற்கான முக்கியமான சில அறிவுரைகளையும் வழங்கினார்.

நுவரெலியா நகரத்திற்கு முறையற்ற விதத்தில் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு மாறாக உரிய திட்டமிடலுக்கமைய நிர்மாணிப் பணிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், பாரிய கட்டிடங்களை நிர்மாணிப்பதால் நகரம் சீரழிவுக்கு உள்ளாவதாகவும் நுவரெலியாவாகவே தொடர்ந்தும் தக்கவைப்பதா அல்லது நியுயோர்க் நகரமாக மாற்றியமைப்பதாக என்பதை தீர்மானிக்குமாறும் அறிவுறுத்தினார்.

மத்திய அதிவேக வீதியின் நிர்மாண பணிகள் நிறைவு கண்டவுடன் நுவரெலியாவிற்கு வருகைத்தரும் சுற்றுலாப் பிரயாணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவர்களுக்கு அவசியமான வசதிகளை மேம்படுத்துவதற்கான உரிய திட்டங்களை வகுத்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

முதலீட்டாளர்கள் மற்றும் வேறு தரப்பினருக்கு அவசியமான வகையில் நுவரெலியா மாவட்டத்தை சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாதெனவும், சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவும் திட்டமிடப்பட்ட வகையிலுமான அபிவிருத்தியை நகருக்குள் ஏற்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதேபோல் இந்த விடயத்தில் அரசியல் பிரமுகர்களும் அரசாங்க அதிகாரிகளும் நன்கு புரிதலுடன் ஒருங்கிணைந்து செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிதாக சிந்தனைகளுன் நாட்டிற்கு அவசியமான புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் பின்னர் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அதிகார சபை மற்றும் ஆணைக்குழுக்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களை சந்திக்க தாம் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், 2025 ஆம் ஆண்டு இலக்கு வைத்துள்ள அபிவிருத்தித் திட்டத்தில் வெற்றியீட்டுவதற்கு அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பையும் பெறுவதே தமது எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

நிலையான மற்றும் கவர்ச்சியா அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக நுவரெலியா மாவட்டத்தை சுற்றாடலுக்கு உகந்த மாவட்டமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நுவரெலியா நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நகரத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் நானுஓயாவை உப நகரமாக அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வனப் பாதுகாப்புப் பகுதிகளைப் பாதுகாத்து நுவரெலியாவை பசுமை நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன் நுவரெலியாவை மையமாகக் கொண்டு 05 புறநகர்ப் பகுதிகளை அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பது மற்றும் இராமாயண மையம் ஒன்றை அமைப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

நானுஓயா புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தி அதற்கு அருகில் உயர்தர பொருளாதார நிலையமொன்றை ஸ்தாபிக்குமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, இதன் மூலம் விவசாயிகள் மரக்கறிகளை பொதி செய்து பாதுகாப்பாக கொழும்புக்கு கொண்டு செல்ல முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

குதிரைப் பந்தய மைதானம் மற்றும் குளத்தை அபிவிருத்தி செய்தல், குளத்திற்கு அருகில் வாகன தரிப்பிட வசதிகளை மேம்படுத்துதல், நுவரெலியா நகரில் முறையான நீர் முகாமைத்துவ வேலைத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், பிரதேச மக்களின் வருமானத்தை உயர்த்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டம் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி. திசாநாயக்க, சி.பி.ரத்நாயக்க, வி.எஸ்.ராதாகிருஷ்ணன், எம்.ராமேஷ்வரன், ஜனாதிபதி யின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட மற்றும் அரச அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular