Presidential Secretariat of Sri Lanka

2048 ஆம் ஆண்டை இலங்கையின் அபிவிருத்தி ஆண்டாக மாற்ற நாம் ஒன்றாக கைகோர்ப்போம்

  • புதிதாக சிந்தித்து புதிய பாதையில் செல்லும் கட்சியாக ஐக்கிய தேசிய கட்சியை மாற்றுவோம்.
  • டி.எஸ். சேனநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்தன ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வேன்.
  • மக்கள் சபை வரைவு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.
  • இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் இவ்வருட இறுதிக்குள் இணக்கப்பாட்டை எட்ட எதிர்பார்க்கப்படுகிறது – ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்விற்கு வாழ்த்துத் தெரிவித்து ஜனாதிபதி உரை.
  • பாரம்பரிய அரசியலில் இருந்து விடுபட்டு நாட்டை பற்றி புதிதாக சிந்தித்து புதிய பாதையில் பயணிக்கும் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியை மாற்றுவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

2048 இலங்கையின் அபிவிருத்திக்கான ஆண்டாகும் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, அந்தப் பயணத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களும் கைகோர்ப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் ஊடாக கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (01) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் இலத்திரனியல் தொழில்நுட்பத்தினூடாக உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“2048 வெல்வோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மேதிக் கொண்டாட்டத்தில் 68 பல்வேறு தொழில்சார் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

ஆசியாவின் இரண்டாவது வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இலங்கையை கட்டியெழுப்பிய டீ.எஸ். சேனாநாயக்கவினதும் திறந்த பொருளாதாரத்தில் நாட்டை முன்னோக்கி கொண்டு சென்ற ஜே.ஆர். ஜயவர்தனவினதும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் இலங்கை மீளக் கட்டியெழுப்பப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் நாட்டைப் பற்றி சிந்திக்கும் அதேவேளை கொள்கை அரசியலிலும் ஈடுபடும் கட்சி என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, ஒருபோதும் அந்தக் கொள்கையில் இருந்து விலகவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த நாட்டின் அரசியல் முறைமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற இளைஞர்களின் கோரிக்கையை சற்றும் மறந்துவிடவில்லை. பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் மற்றும் மேற்பார்வைக் குழுக்களுக்கு தலா ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்கும் பணி இம்மாதம் நிறைவடையவுள்ளது. கரு ஜயசூரியவின் பிரேரணையின் பிரகாரம் மக்கள் சபை தொடர்பான வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்புடன், நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உடன்பாட்டு இந்த ஆண்டு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இது மிகவும் முக்கியமானது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

நான் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அக்கட்சியை ஆதரிக்கும் உங்கள் அனைவருக்கும் உரையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

கடந்த 03 தசாப்தங்களாக நாடு கடுமையான பொருளாதார வீழ்ச்சியில் இருந்த நேரத்தில் நான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றேன். நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக வீழ்ச்சியடைந்து, உணவுத் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்ததோடு, மக்கள் வீதிகளுக்கு இறங்கியிருந்தனர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இந்த நாட்டின் ஜனநாயக கட்டமைப்பையும், பாராளுமன்றத்தையும் சிதைக்க சிலர் முயன்றனர்.

இன்று நாட்டின் பொருளாதாரம் மீண்டும் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளது. உணவுத் தட்டுப்பாடு இல்லை. மேலும் நாட்டில் ஜனநாயக கட்டமைப்பு செயல்படுகிறது. அச்சுறுத்தல்கள் இன்றி பாராளுமன்றம் செயல்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய பணியை தடையின்றி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நான் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்க முன்னர், ஒரு விடயத்தைப் பற்றி சிந்தித்தேன். ஐக்கிய தேசியக் கட்சி நாட்டைப் பற்றி சிந்திக்கும் கட்சி. ஐக்கிய தேசியக் கட்சி ஒரு கொள்கை அரசியலில் இருக்கும் கட்சி. நாங்கள் அதனை விட்டுவிலகவில்லை. சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வது அவசியம், உலக வங்கியின் உதவி தேவை. நாம் 07 பில்லியன் டொலர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் 2020 தேர்தல் விஞ்ஞாபனத்தில், அன்று நாம் குறிப்பிட்டிருந்தோம். கட்சி என்ற வகையில் நாங்கள்தான் அந்த உண்மைகளை குறிப்பிட்டோம். மற்ற அனைவரும், பொருளாதார பிரச்சினை இருப்பதை அறிந்து, நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.

அதன் விளைவு என்ன, உண்மையைக் கூறிய ஐக்கிய தேசியக் கட்சி இறுதியாக தேசியப்பட்டியலில் வீழ்ந்தது. கசப்பானாலும் உண்மையை மக்களுக்குச் சொல்வதே எங்களின் கொள்கையாகும். அதனால் நாங்கள் அதிலிருந்து பின்வாங்கவில்லை. 2020 மற்றும் 2021 இலும் எங்களின் இலக்கு அறிவிக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு, இந்தப் பிரச்சினை தீவிரமடைந்தபோது, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்து, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுமாறு அவருக்கு ஆலோசனை வழங்கினேன். இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த போது எதிர்க்கட்சியின் ஏனைய குழுக்கள் கலந்துரையாடலை புறக்கணித்த போதும் நானும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்க்கட்சியில் இருந்து கலந்து கொண்டோம்.

எனது முயற்சி அரசியல் அல்ல, நாட்டின் பொருளாதாரத்தை முறையாகக் கையாள்வதும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதும் ஆகும். எனவே நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் பலம் என்னிடம் இருப்பதாகவும், எனக்கு ஆதரவளிக்கும் அமைச்சர்களுடன் இணைந்து செயற்பட்டு அந்த பெறுபேறுகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையினால் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

அந்த நம்பிக்கை எனக்கு இருந்ததற்கு முக்கிய காரணம், 2001 இல் அரசாங்கம் கவிழ்ந்தபோது, பொருளாதாரத்தை மீட்டெடுத்தது மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த முடிந்ததுதான். 2015 இல், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது, பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், முதன்மை வரவு செலவுத்திட்ட மேலதிகத்தைப் பெறவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

எனவே, இந்தப் பொருளாதார நெருக்கடியை என்னால் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். அப்படியானால், இந்த நேரத்தில், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதோடு, அரசியல் ஸ்திரத்தன்மையையும் உருவாக்குவதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. தற்போது பாராளுமன்றம் இயங்கி வருகிறது. ஜனநாயகம் மற்றும் சட்டத்தின்படி செயல்படுபவர்கள் பலர் உள்ளனர். எனவே, இதற்கு எனக்கு உதவிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுக்கும் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எனது நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் காரணமாகவே நாம் முன்னோக்கிச் செல்ல வாய்ப்புக் கிடைத்தது. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை, இந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளினால் அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோரும் ஆதரவு வழங்கினர். அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

இப்போது நாம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை அமுல்படுத்த வேண்டும். அதற்கு அவசியமான சட்டதிட்டங்களைக் கொண்டு வந்து 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் நான் அதில் திருப்தியடையவில்லை.

எமக்கு இந்தப் பழைய பொருளாதார முறையுடன் இனியும் முன்னோக்கிச் செல்ல முடியாது. மொத்தத் தேசிய உற்பத்தியை ஆண்டுக்கு 6% – 7% என்ற அளவில் விரைவாகக் கொண்டு வரக்கூடிய பொருளாதாரத்தை நாம் உருவாக்க வேண்டும். என்னிடம் இரண்டு எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஒருவர் டி.எஸ். சேனநாயக்காவின் கீழ், ஆசியாவின் இரண்டாவது வலுவான பொருளாதாரத்தை நாங்கள் கொண்டிருந்தோம். அப்போது எம்மால் இங்கிலாந்துக்கு கடன் கொடுக்க முடிந்தது. ஜே.ஆர் ஜெயவர்தனவின் கீழ் நாம் திறந்த பொருளாதாரத்துடன் முன்னேறினோம். திறந்த பொருளாதாரத்தை உருவாக்கும் இரண்டாவது பயணத்தை இலங்கை தான் தொடங்கியது. அதன் பிறகுதான் சீனா அதனை நோக்கி வந்தது.

எனவே இந்தப் பின்னணியில் இலங்கையை மீண்டும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். பொருளாதாரத்தில் யார் கீழ்மட்டத்தில் இருக்கிறார்கள் என்பதில் நாம் ஆப்கானிஸ்தானுடன் போராட முடியாது. எனவே நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். முன்னேறிய பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும். அன்று ஜே.ஆர் ஜெயவர்தன செய்தது போல், நாம் பல புதிய திட்டங்களை முன்னெடுத்து புதிய பொருளாதாரத்தில் இணைய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை. நாம் சிந்திக்க வேண்டியது நமது எதிர்காலத்தைப் பற்றி அல்ல, நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றியே நாம் சிந்திக்க வேண்டும்.

2048 இல் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் போது, முன்னேறிய பொருளாதாரம் கொண்ட நாடாக நாம் மாற வேண்டும். இந்தியா அந்த இலக்கை 2047 இல் வைத்துள்ளது. சீனா 2049 அந்த இலக்குகளை அடைய உழைக்கிறது. 2048 ஆம் ஆண்டை இலங்கை அபிவிருத்தி ஆண்டாக மாற்ற வேண்டும். இன்றைய இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்காக இந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புகிறோம். அந்த புதிய பொருளாதாரம் மிகவும் போட்டி நிறைந்த பொருளாதாரமாக இருக்க வேண்டும். சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட திறந்த பொருளாதாரமாக இருக்க வேண்டும். பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் குறிப்பாக ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்ட போட்டி பொருளாதாரமாக இருக்க வேண்டும். நாங்கள் அங்கு செல்ல முயற்சிக்கிறோம். எனவேதான் அனைவரின் ஆதரவையும் கோருகிறோம்.

குறுகிய கால அரசியல் பற்றி சிந்திக்க வேண்டாம். இன்று நாளையல்ல, 2048ஐப் பற்றி சிந்தியுங்கள். நாட்டை முன்னேற்ற வேண்டும். இன்று, நாளை என நினைத்து பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளோம், மீண்டும் பாராளுமன்றத்திற்கான மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள இந்த புதிய பாதையில் செல்ல வேண்டும். எனவே, குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் உங்கள் அனைவருக்கும், நாங்கள் எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் கட்சியாக இருப்போம் என்று நான் பரிந்துரைக்கிறேன். நாம் புதிதாக சிந்திப்போம். இந்த நாட்டின் பழைய அரசியல் செயல்முறையை மாற்றும் கட்சியாக நாம் மாறுவோம். அதைத்தான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

பாராளுமன்றம் மீதான மக்களின் ஆதரவை மீண்டும் பெற்றுக்கொள்ள இந்த புதிய பாதையில் செல்ல வேண்டும். எனவே, குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் உங்கள் அனைவருக்கும், நாங்கள் எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் கட்சியாக இருப்போம் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

நாம் புதிதாக சிந்திப்போம். இந்த நாட்டின் பழைய அரசியல் செயல்முறையை மாற்றும் கட்சியாக நாம் மாறுவோம். அதைத்தான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் அங்கீக்கப்பட்டுள்ள நிலையில், அதனை முன்னெடுத்துச் செல்ல எண்ணியுள்ளோம். நாம் முன்நோக்கிப் பயணிக்க வேண்டுமாயின், நாம் இரண்டு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். முதலாவது நாட்டில் உள்ள இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். இதுகுறித்து பேச்சு நடத்தி வருகிறோம். இந்த வருட இறுதிக்குள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ளேன். யாருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது. பெரும்பான்மை சிங்கள மக்களையும், சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களையும் பாதுகாத்துக் கொண்டு முன்நோக்கிச் செல்ல வேண்டும்.

இதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். இரண்டாவது இந்த நாட்டில் அரசியல், பொருளாதார முறைமையில் மாற்றம் வேண்டும் என்று இளைஞர்கள் கோருகின்றனர். நாம் இதனை செவிமடுக்க வேண்டும். இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக பல கட்டங்களாக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கும், மேற்பார்வைக் குழுவிற்கும் தலா ஐந்து இளைஞர்களை நியமிக்க எதிர்பார்த்துள்ளோம். இந்தப் பணிகளை மே மாதத்தில் பாராளுமன்றத்தில் மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம். கரு ஜயசூரிய அவர்களின் ஆலோசனைக்கமைய மக்கள் சபைகளை உருவாக்குவதற்காக அதற்கான சட்ட மூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். நாம் அனைவரும் உடன்பாட்டுடன் புதிய பொருளாதார முறைமையை ஏற்படுத்துவோம். புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவோம். நாம் முன்நோக்கிப் பயணிப்போம்.

அதனால் நான் இன்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களிடம் இந்த புதிய பயணத்தை ஆரம்பிப்போம் என்று கோரிக்கை விடுக்கின்றேன். கடந்த வாக்கெடுப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வாக்களிப்பைப் புறக்கணித்தனர். திறந்த பொருளாதார முறைமையை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். எனவே, வேற்றுமைகளை மறந்து முழு பாராளுமன்றத்தில் அரசாங்கமாக பணியாற்றுவோம் என்று நான் கோரிக்கை விடுக்கின்றேன். இனப்பிரச்சினை விடயத்தில் தூரமாகிச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என்று நான் தமிழ்க் கட்சிகளிடம் கூறுகிறேன். இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமாயின், தயவுசெய்து இந்த பொறிமுறைக்குள் வந்து விசேடமாக பாராளுமன்றத்தில் ஒரு அரசாங்கமாக நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம். இடதுசாரி கட்சிகள் தமது கொள்கைகளுக்கமைய இந்த நடைமுறையை பின்பற்றமாட்டோம் என்று கூறியுள்ளனர்.

நாம் தற்போது எதிர்காலத்தை நோக்கிப் பார்க்க வேண்டும். புதிய வேலைத் திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். புதிய வேலைத் திட்டங்களுடன் அனைவரும் இணைந்துகொள்ளுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன். தொழிற்சங்கங்கள், ஏனைய அமைப்புக்கள் என அனைவரையும் இந்த வேலைத் திட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். புதிய வேலைத் திட்டங்கள் குறித்த அமைச்சரவையின் யோசனைகளை, பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளிடம் சமர்ப்பித்து, மக்கள் சபையுடனும் கலந்தாலோசிப்போம். இதற்கான பரந்த இணக்கப்பாட்டை எட்ட விரும்புகிறோம். அப்படியாயின், எமக்கு அச்சமின்றி முன்நோக்கிச் செல்ல முடியும். இது 25 ஆண்டுகால வேலைத் திட்டம். இந்த 25 ஆண்டுகால வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி,நாட்டைக் கட்டியெழுப்பி, மேம்படுத்துவோம் என்று அனைவரிடமும் கோரிக்கை விடுக்கின்றேன். இதற்காக உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்த்து எனது உரையை நிறைவு செய்கிறேன் என்றார்.

ஜ.தே.க பிரதித் தலைவரும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவன் விஜேவர்தன,
சில கட்சிகள் உழைக்கும் மக்களை ஒடுக்கப்பட்ட வர்க்கமாக மாற்றவும், போராட்டங்களில் மட்டும் அவர்களை மட்டுப்படுத்தவும் பாடுபட்டன. இதனால், ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கம் தனது சொந்த அரசியல் பயணத்திற்காக உருவாக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி உழைக்கும் மக்களை போராட்டங்களுக்காக நசுக்கி வைக்கவில்லை. மக்களுக்கு சலுகைகள் அளித்து அவர்கள் நல்ல வாழ்க்கை வாழக்கூடிய இடத்திற்கு கொண்டு வர நாங்கள் உழைத்தோம்.

உழைக்கும் மக்களுக்கு சலுகைகள் கிடைக்க, வலுவான பொருளாதாரம் இருக்க வேண்டும். இந்த நாட்டை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் . அதைச் செய்ய, பாரம்பரிய அரசியல் முறைமையை மாற்ற வேண்டும். கடந்த ஆண்டு இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடினார்கள். மாற்றம் வேண்டும் என்றார்கள். ஆனால் போராட்டக்காரர்களில் பத்துப் பேரின் கருத்து பத்துவிதமாக இருந்தன.

வரலாற்றில் சில சமயங்களில் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்து, குறுகிய கால கொள்கைகளை அடிப்படையாக கொண்டு ஆட்சி செய்தார்கள்.நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றால் குறுகிய கால முடிவுகளை எடுக்க முடியாது. நீண்ட கால அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கொள்கைகளுடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

அதனால்தான் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ” வெல்வோம் 2048″ என்ற திட்டத்தை முன்வைத்தார்.2048ல் நம்மில் பெரும்பாலானோர் உயிருடன் இருக்க மாட்டோம்.ஆனால் இந்த குழந்தைகளுக்கு வளர்ந்த நாட்டில் வாழ வாய்ப்பளிக்க வேண்டும் அந்த திட்டத்திற்கு நாம் அனைவரும் ஜனாதிபதிக்கு பலமாக இருக்க வேண்டும்.அவ்வாறு செய்தால் எதிர்காலத்தில் வளர்ந்த நாடுகளுடன் இணைந்திருக்க முடியும் என்றார் .

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான சாகல ரத்நாயக்க

சுதந்திரத்திற்குப் பிறகு ஜ.தே.க தலைவர்கள் இந்த நாட்டை தொழில்மயமாக்கவும், இலவச சுகாதாரம் மற்றும் தொழில் பேட்டைகளை உருவாக்கவும் உழைத்தனர். அரசாங்கம் மாறும்போது கொள்கைகளை மாற்றுவது அன்றிலிருந்து இன்றுவரை இருக்கும் பலவீனம். 2019ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு சென்றபோது, முதன்மைக் கணக்கில் மேலதிகம் இருந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கொள்கைகள் மாறின. இது நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்தியது.
நெருக்கடியான நேரத்தில், அவர் மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் தலைகீழாக இருந்த வரிக் கொள்கையை மறுசீரமைத்தார்.வரிக் கொள்கையைப் மாற்றினோம். மறைமுக வரிகள் அதிகரிக்கும் போது மக்கள் அனைவரும் அதை செலுத்துகிறார்கள். அதை மாற்றும் போது வலிக்கிறது. தயக்கத்துடன், நாங்கள் அதை செய்ய வேண்டியிருந்தது. எரிவாயு மற்றும் எண்ணெய் வரிசைகளை அகற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தார். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொருளாதாரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்நியச் செலாவணியைப் பாதுகாக்க இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பணவீக்கம் 70 சதவீதமாக இருந்த ஒரு நாட்டை ஜனாதிபதி பொறுப்பேற்றார். கடந்த மாத இறுதியில், பணவீக்கம் 50 சதவீதமாக கொண்டு வரப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள், பணவீக்க விகிதத்தை ஒற்றை இலக்கமாகக் குறைக்க முயற்சித்து வருகிறோம் பொருட்களின் விலையும் குறைகிறது. எண்ணெய் விலை மேலும் குறையும். இன்னும் சில நாட்களில் எரிவாயு விலை மேலும் குறையும். சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்கனவே செய்துள்ள ஒப்பந்தங்கள் காரணமாக நாட்டு மக்களுக்கு இவ்வாறான பலன்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன என்றார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன எம்.பி:

ஐக்கிய தேசிய கட்சி வீழ்ச்சி கண்டிருந்த போதும் கட்சியுடன் இணைந்திருந்தோரே இங்கு அதிகளவில் கூடியிருக்கின்றனர்.1994க்குப் பிறகு ஏறக்குறைய முப்பது வருடங்களாக உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் ஒருவரை கண்டு அஞ்சின. அது தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே. அவரை வீழ்த்த எல்லா வழிகளிலும் முயன்றனர்.

இந்நாட்டைக் கட்டியெழுப்ப முயன்ற எமது கட்சின் தலைவர்கள் பலரும் எதிர்பாராத விதத்தில் மரணம் அடைந்தனர். ஜே.ஆர்.ஜயவர்தன, பிரேமதாச, லலித் அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்க போன்ற தலைவர்கள் வீதிகளில் கொல்லப்பட்டனர். ஆனாலும் ரணில் விக்ரமசிங்க என்ற ஒரு தலைவர் மிஞ்சி இருந்தமையாலேயே இன்று கொழும்பை சுற்றி இடம்பெறும் மே தினக் கூட்டங்களுக்கு வருவதற்கு மக்களுக்கு எரிபொருள் கிட்டியது. அத்தோடு இன மத பேதங்கள் அற்ற தலைவரான ரணிலை ஆசியாவின் உச்சியில் அமர்த்த வேண்டியது எமது கடமையாகும்.

முழு பாராளுமன்றமும் அரச செயற்பாடுளில் ஈடுபடும் வகையிலான முறையொன்றினை உருவாக்க அவர் முயற்சிக்கிறார். டீ. எஸ் சேனாநாயக்கவும் இந்நாட்டவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டுதான் சுதந்திரத்தைப் பெற்றார். அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதியின் வீட்டிற்கு தீயிட்டாலும் அவர் முடங்கிப் போய்விடவில்லை. அதனால் 2048 என்ற இலக்கை நோக்கி முன்னேறுவோம் என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பூரண ஆசீர்வாதத்துடன் இந்த மேதின கூட்டம் நடைபெறுகிறது. சவால்கள் எதிர்கொள்ளும் போது அதிகமான அரசியல் கட்சிகள் அவற்றில் இருந்து தப்பித்துச் செல்வதுண்டு. ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் சவால்களை ஏற்றுக்கொண்டு சவால்களை வென்றெடுத்துள்ளது. சவால்களை ஏற்று சவால்களை வெல்வதற்கு வரலாற்றில் எமது தலைவர்களுக்கு எமது கட்சி தலைமைத்துவம் வழங்கியது.

அன்று தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி பதவியை வழங்குவதற்கு இந்நாட்டு மக்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், தனக்கு ஜனாதிபதி பதவி தராததால் அவர் மக்களை வெறுக்கவில்லை. சகித்துக்கொண்டு நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்தவர். 2001ல் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ந்திருந்தது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக நாட்டை பொறுப்பேற்றார். பொருளாதார வளர்ச்சி மறை 1.5க்கு சரிந்திருந்த நிலையில் மூன்று மாதங்களில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்து முன்னேற்றினார். 2015ல் கூட பிரதமராக நாட்டை சரியாக நிர்வகித்து நாட்டை அபிவிருத்தி செய்தார். 2022 ஆம் ஆண்டு வங்குரோத்தடைந்த அரசை சரியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் சவாலை ஜனாதிபதியாக ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த சவால்கள் அனைத்தையும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

2048ல் நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதே எமது இலக்காகும். இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்கள் திட்டம் வகுத்துள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு எந்தத் தலைவருக்கும் இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் தொலைநோக்குப் பார்வை இல்லை. இவ்வளவு தியாகம் செய்யும், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் வேறு யாரும் இல்லை. 2048க்குள் கண்டிப்பாக வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்கும் இலக்கை அடைவதற்கான திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.

ஜ.தே.க உப தலைவர் அகில விராஜ் காரியவசம்:

கடந்த வருடம் ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் இக்கட்டான நேரத்தில் மே தினத்தை கொண்டாடியது.1956 தேர்தலில் தோல்வியடைந்த போது ஐக்கிய தேசிய கட்சியின் சவப்பெட்டியில் ஆணி அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.1970 இல் ஐக்கிய தேசிய கட்சி புதைக்கப்பட்டதாக கூறப்பட்டது. 1988 இல் ஜே.வி.பி யினர் ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்க முயன்றனர். 1993 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் எமது முன்னாள் தலைவர்களை வெடிகுண்டுகளால் அழிக்க முயன்றனர். 2020ல் கட்சியை இரண்டாகப் பிரித்து ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்க முயன்றனர். ஆனால் இன்று ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கட்சியாக மாறியுள்ளது.
ஆனால் இறுதியில், எங்கள் கட்சியின் தலைவர், நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளார். இந்த நாடு வீழ்ச்சியடைந்த போது ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு யாரும் அந்த சவாலை ஏற்க முன்வரவில்லை.

இன்று அவர் இந்த நாட்டை படிப்படியாக முன்னோக்கி கொண்டு செல்கிறார். பல அவதூறு பிரச்சாரங்களுக்கு மத்தியில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டார் . அவர் யாரையும் பழிவாங்கவில்லை. இந்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி, 2048ல் வளர்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு அவர் தோள் கொடுத்துள்ளார் என்றார்.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க:
நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் மே தினத்தை கொண்டாடியிருந்தாலும், இன்று மிக முக்கியமான தருணத்தில் மே தினத்தை கொண்டாடுகிறோம். கடந்த காலத்தில் வரிசை யுகம் இருந்தது.

தற்போதைய தலைமைத்துவம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து நாட்டை முன்னேற்றியுள்ளது. இந்த பிரச்சினை இந்த நாட்டின் உழைக்கும் மக்களை மட்டுமல்ல முதலீட்டாளர்களையும் பாதித்துள்ளது. அதனால் தான் புதிதாக சிந்திக்க வேண்டும். உரிமைக்காக மட்டும் போராடும் காலத்தில் நாம் இல்லை. நாட்டில் ஒரு புதிய சகாப்தத்திற்காக நாங்கள் போராட விரும்புகிறோம்.

உழைக்கும் மக்கள் அனைவரும் வாழக்கூடிய அமைதியான சூழல் நாட்டில் நிலவ வேண்டும். அந்த யதார்த்தத்தை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டை முதன்மைப்படுத்தி உழைப்போம். நாட்டுக்காக உழைப்போம். அப்படிப்பட்ட நாட்டின் உரிமைகளுக்காக போராட வேண்டிய அவசியம் இல்லை. அந்த உரிமைகள் எப்போதும் உங்களை வந்தடையும்.

நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற வேண்டும். பொருளாதாரத்தை வலுப்படுத்த, உழைக்கும் மக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையே நல்லிணக்கம் தேவை என்றார் .

காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ:

எவர் ஒருவருக்கும் சரியான இலக்கு ஒன்று இல்லாதபோது அவர்களது பயணத்தை தொடர்வது கடினமாகும். ஜனாதிபதியின் உரை ஒரு இலக்கையும் நோக்கையும் கொண்டதாக காணப்படுகிறது. அதுதான் அரசியலில் நிகழ வேண்டிய மாற்றமாகும். 6 தடவைகள் பிரதமராக இருந்த ரணில் இன்று ஜனாதிபதியாகி தனக்கான மைதானத்தை கட்டமைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார்.

அன்று சவால்களை ஏற்க முன்வராதவர்கள் இன்று பேரணியாகச் செல்வதில் அர்த்தமில்லை ஐக்கிய மக்கள் சக்தி அதனை புரிந்துகொள்ள நீண்ட காலம் தேவைப்படும் நாம் அதனை புரிந்துகொண்டதாலேயே இவ்விடத்தில் இருக்கிறோம். அடுத்த வருடத்தில் சுற்றுலாத்துறையை அதிக வருமானம் ஈட்டும் துறைகளில் முதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அந்த சவாலை நான் ஏற்றுக்கொள்வேன் . இன்று வரையில் காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் 2.5 பில்லியன் வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிகள் மட்டுமே நமக்குப் போதுமானதல்ல.

எதிர்கால சந்ததிக்காக நல்லதொரு நாட்டினை உருவாக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும். அதற்காக அவர் 2048 யும் வெற்றிகொள்வார். இவற்றை நமக்காகவே செய்கிறார். இதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக காணப்பட்ட நிலைமையை தலைகீழாக மாற்றியவரும் அவரேயாவார். எதிர்க் கட்சிகளுக்கு ஆர்ப்பாட்டங்களை செய்வது மாத்திரமே நோக்கமாக இருந்தாலும் 2048 அடுத்த சந்ததிக்கான அபிவிருத்தி அடைந்த நாட்டினை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

ஐக்கிய தேசிய கட்சியை ஒருவராலும் வீழ்த்த முடியாது. அதனால் அடுத்த ஆறு வருடங்களுக்குள் இந்நாட்டவர் அனைவருக்கும் தங்களுக்கு உரித்தான காணி இருக்கும் என்பதை நான் உறுதியளிக்கிறேன். அதற்காக நமது நாட்டின் தொழிலாளர்களை தொழில் முயற்சியாளர்கள் ஆக்க வேண்டியது அவசியமாகும். நாம் இறந்துவிட்டாலும் நமது பிள்ளைகள் வாழ்வர் என்பதால் 2048 ஆம் ஆண்டு இலக்கை வெற்றிகொள்ள முடியும் என்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை:

கடந்த கோவிட் தொற்றுநோயுடன் தொடங்கி பொருளாதார வீழ்ச்சிக்குள்ளான நாட்டில் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.அவர்களை கருவியாகப் பயன்படுத்தி அரசியல் செய்ய முயலும் குழுக்களைத் தவிர அவர்களின் வாழ்க்கையின் பாதுகாப்பிற்காக செயற்படுவோரை நாம் காணவில்லை. அவர்கள் எப்போதும் எங்கள் கட்சியை தொழிலாளர்களின் எதிரியாக முத்திரை குத்தினார்கள்.

ஆனால், ஊழியர்களின் நம்பிக்கை நிதியத்தை நிறுவுதல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை அதிகரிப்பது, முறைசாரா ஊழியர்களை வழக்கமான ஊழியர்களாக்குதல், ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் போது இழப்பீட்டுச் சூத்திரத்தை அறிமுகப்படுத்துதல், தொழிலாளர் பிணக்கு சட்டம் கொண்டு வருதல், பணிக்கொடை சட்டம்.போன்ற நடவடிக்கைகளை எடுத்தது நாங்கள்தான்.
இனவாத, மதவாத, குறுகிய கட்டமைப்பில் இருந்து விடுபட்டு நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்த உலகளாவிய நற்பண்புகளைக் கொண்ட கட்சி என்ற வகையில் பின்வரும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கிறேன்.

1. சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை ஊக்குவிக்கும், தொழிலாளர்களின் நிலையான பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பைப் பாதுகாப்பதன் மூலம் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் வலுவான தொழில்முனைவோரை உருவாக்கும் ஒரு ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்டத் தொகுதியை தயாரித்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றுதல்

2. ஊழியர் சேமலாப நிதிக்கு பங்களிக்கும் ஊழியர்களின் தொகையை அதிகரிக்கவும் பங்களிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், பங்களிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் மற்றும் முறைசாரா துறையில் பணிபுரியும் ஊழியர்களை ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் இணைத்தல்

3. சமூகப் பாதுகாப்பு திறந்த பொருளாதாரக் கொள்கையை நாட்டில் உருவாக்கி ஒரு விரிவான சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பொன்று செயல்படுத்தப்பட வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தில் முறையான சமூகப் பாதுகாப்பு கட்டமைப்புகளில் உள்ளடங்காத தொழிலாளர்களுக்கு ஒரு பரந்த சமூகப் பாதுகாப்பு வலையமைப்பைச் செயல்படுத்துதல் மற்றும் வேலை நிறுத்தம் அல்லது வேலை இழப்பின் போது வேலையின்மை காப்பீட்டு முறையை செயல்படுத்துதல்.

4. 2048 இல் வளர்ந்த நாட்டிற்கான மூலோபாயத் திட்டத்திற்கு ஏற்ற வகையில், மனித வளத்தைப் பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக பயன்படுத்த நடவடிக்கை எடுத்து, அடுத்த நாகரீகத்தை வெற்றிகொள்ளக்கூடிய நவீன உலகத்திற்கு ஏற்ற மனித வளத்தை உருவாக்குவதற்கான மூலோபாய திட்டங்களை செயல்படுத்துதல்.

5. பொருளாதார ரீதியில் பயனுள்ள மனித வளத்தை உருவாக்குவது மற்றும் வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வது தொழிலாளர் துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை டிஜிட்டல் மயமாக்குவது

6. சர்வதேச தொழிலாளர் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவாறு , அனைத்து பணியிடங்களிலும் தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த சட்டம் இயற்றுதல்

7. பணியிடத்தில் பாலின அடிப்படையிலான பாகுபாட்டைத் தடுப்பதற்கும், பெண் தொழிலாளர் பங்கேற்பை அதிகரிப்பதற்கும், பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு சலுகைகளை சமூகப் பாதுகாப்பு நிதியின் மூலம் வழங்குவதற்கும் முறையான சட்டக் கட்டமைப்பை உருவாக்குதல்.

8. எந்தத் தொழிலாக இருந்தாலும் தொழிலாளியின் கண்ணியம், கௌரவத்தைப் பாதுகாக்கும் திட்டத்தை உருவாக்குதல்.

9. மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவைகள் உள்ளவர்களை மனித வளமாக ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.

10. உரிமைகளும் நலன்களும் வலுவாக, நவீன உலகிற்கு ஏற்ற தோட்டத் தொழிலாளியை உருவாக்குதல்

11. எதிர்கால பணி உலகில் எதிர்கால தொழில்நுட்ப மாற்றங்களுக்கான கொள்கை உருவாக்கத்திற்கான பாரிய தரவுகளை சேகரிக்கும் நோக்கத்திற்காக தனியார் மற்றும் அரச தொழிலாளர் சந்தையை அடிப்படையாகக் கொண்ட தேசிய சந்தை தகவல் அமைப்பை செயல்படுத்துதல்.

இந்த மேதின நிகழ்வில் ஜ.தே.க முன்னாள் அமைச்சர்கள், எம்.பிகள், மாகாண மற்றும் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள்,ஜ.தே.கவுடன் தொடர்புள்ள தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அமைப்பு செயற்பாட்டாளர்கள்,கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

(English) Recent News