Presidential Secretariat of Sri Lanka

நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு, ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை கூடியது

நான்கு வருடங்களின் பின்னர் ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியது.

இந்த ஆளும் சபை, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள் உட்பட 07 உறுப்பினர்களைக் கொண்டது. வண, கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ நாயக்க தேரரும் நியமிக்கப்பட்ட உறுப்பினராக செயற்படுகின்றார்.

நான்கு வருடங்களின் பின்னர் நடைபெற்ற இந்த ஆளும் சபை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை தவிர ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தினூடாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை வினைத்திறனுள்ளதாக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு விசேட வேலைத்திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

ஜனாதிபதி நிதியத்துக்காக அபிவிருத்தி லொத்தர் சபையினால் பெறப்படும் வருமானம் மற்றும் பல்வேறு நன்கொடையாளர்களின் வழங்கப்படும் நிதி என்பன பயன்படுத்தப்படுவதுடன், ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதிக்கும் வழங்கப்படவுள்ளது.

நிதியச் சட்டத்தின் அதிகாரங்களின்படி, இந்த நிதியம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, பொதுமக்களின் நலனுக்காக இந்நிதியம் பெரும் பணிகளை ஆற்றியுள்ளது.

வறுமை ஒழிப்பை முதன்மை நோக்கமாக கொண்ட ஜனாதிபதி நிதியம் நோயுற்றவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு அதிக பங்களிப்பை வழங்கியுள்ளதோடு, இதன் கீழ் பல்வேறு நோய்களுக்கான அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

ஜனாதிபதி நிதியத்திற்கு 12,0000 மருத்துவ உதவிக் கோரிக்கைகள் கிடைத்திருந்ததோடு, ஜனாதிபதியின் பணிப்புரை மற்றும் ஜனாதிபதியின் செயலாளரின் வழிகாட்டலின் கீழ், அவற்றை 31-12-2022 க்குள் பூர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, குவிந்து கிடந்த விண்ணப்பங்கள் தொடர்பான பணிகள் நிறைவடைந்து, தகுதியான பயனாளிகளுக்கு உதவிகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதோடு, இதற்காக 1,717 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நிதி செலவிடப்பட்டது.

சில சந்தர்ப்பங்களில், விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ உதவி வழங்க பல ஆண்டுகள் சென்றதைக் காணமுடிந்தது. இதற்கு ஒரு தீர்வாக, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் சரத் குமாரவின் வழிகாட்டுதலின் கீழ், விண்ணப்பச் செயல்முறை ஒரு வார காலத்துக்கும் குறைந்த காலப்பகுதியில் விண்ணப்பதாரர்கள் நன்மைகளைப் பெறக்கூடிய வகையில் இந்த புதிய முறை திறம்படவும் எளிமையானதாகவும் நெறிப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவச் சலுகைகளை வழங்குவதற்காக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் முக்கிய நகரங்களுக்கு அருகாமையில் அதிகமாக அமைந்துள்ளதால், கிராமப்புறங்களில் அமைந்துள்ள மருத்துவமனைகளின் பதிவைத் ஆரம்பிப்பதன் மூலம், தொலைதூரப் பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு கிராமப்புற பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை/அறுவை சிகிச்சையைப் பெறுவதற்கான மருத்துவ உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் ஜனாதிபதி நிதியத்தினால் நிதியுதவி வழங்கும் நோய்களுக்கு மேலதிகமாக நோயாளர்களின் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு சுகாதார அமைச்சின் சிபாரிசுடன் புதிய நோய்கள் உள்வாங்கப்பட உள்ளமையினால் அதிகளவான நோயாளர்கள் பயன்பெற முடியும்.

தற்போதைய பொருளாதார நிலை மற்றும் அறுவை சிகிச்சை/மருத்துவ செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அனைத்து நோய்களுக்கும் மருத்துவ உதவியாக வழங்கப்படும் மருத்துவ உதவித்தொகையின் அளவை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் கீழ், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி நிதியம் உதவியுள்ளது.

(English) Recent News