- எட்மண்ட் ரணசிங்க, இந்த நாட்டில் பத்திரிகைத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்திய திறமையான ஊடகவியலாளர்- எட்மண்ட் ரணசிங்க கௌரவிப்பு நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு.
அவரின் ஏழு தசாப்த கால ஊடகப் பணியைப் போற்றும் வகையில் தொகுக்கப்பட்ட ‘எட்மண்டின் பத்திரிகைப் புரட்சி’ புத்தகம் வெளியிடப்பட்டது.
சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா அல்லது நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதா என்பது தொடர்பில் சமூக ஊடகங்கள் உட்பட இந்நாட்டின் அனைத்து ஊடகங்களும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான ‘திவயின’ பத்திரிகையின் ஆரம்ப ஆசிரியரும் ஆசிரியர் பீடப் பணிப்பாளருமான எட்மண்ட் ரணசிங்க அவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் ஊடகத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின் படி ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
93 ஆவது வயதை அடைந்துள்ள ரணசிங்க அவர்களின் ஏழு தசாப்த கால ஊடகப் பணியை கௌரவிக்கும் வகையில் தொகுக்கப்பட்ட ‘எட்மண்டின் பத்திரிகைப் புரட்சி’ நூலும் இதன்போது வெளியிடப்பட்டது.
இந்நூலை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார, ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் டபிள்யூ. எம். கே. விஜேபண்டார, பிரதி ஊடகப் பணிப்பாளர் தீப்தி அதிகாரி ஆகியோர் தொகுத்துள்ளனர்.
இந்நாட்டில் ஊடகத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்திய முன்னோடியாக, மூத்த ஊடகவியலாளர் எட்மண்ட் ரணசிங்கவை குறிப்பிடலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஏழு தசாப்த கால ஊடகப் பணியில் ஈடுபட்ட எட்மண்ட் ரணசிங்கவின் ஊடகத் துறை இலங்கையின் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஊடகக் கலையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை ஆராய்வதன் மூலம் பயனுள்ள ஊடகக் கலையை உருவாக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
1977 ஆம் ஆண்டு நான் முதன்முதலில் பியகம தொகுதியில் தேர்தலில் போட்டியிட்ட போது அதற்கு தேவையான கட்டுரையொன்றைத் தயார் செய்ய நல்ல ஊடகவியலாளர் ஒருவரைப் பற்றி வினவிய போது திடீரென்று எட்மண்ட் ரணசிங்கவைப் பற்றி எனது தந்தை சொன்னார். எனது அரசியலில் எனக்கு முதல் கட்டுரையை எழுதித் தந்தார். கடந்த ஆண்டு வரை அது என்னிடம் இருந்தது. ஆனால் இப்போது என்னிடம் அது இல்லை.
எனது தந்தை லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த காலத்தில் எட்மண்ட் ரணசிங்க சிலுமின, தினமின போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராக பாரிய சேவையாற்றினார்.
பியசேன நிஷங்க,எம்.ஏ.சில்வா, மார்ட்டின் விக்கிரமசிங்க போன்ற சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்களிடமிருந்து அவர் பயிற்சி பெற்றுக்கொண்டார். எனவே, சுதந்திரத்திற்கு முன்னர் இருந்த ஊடகக் கலை, அதற்குப் பின் தோன்றிய ஊடகக் கலை இரண்டிலும் ரணசிங்க நல்ல அனுபவத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
1953 ஆம் ஆண்டு அரிசியின் விலை அதிகரித்த போது டட்லி சேனாநாயக்க பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.அதற்கு 69 ஆண்டுகளுக்குப் பின்னர், கோட்டாபய ராஜபக்ஷவினால் எண்ணெய் தட்டுப்பாட்டினால் பதவி விலக நேரிட்டது. இந்த 69 வருடங்களில் ரணசிங்கவுக்கு நிறைய அனுபவம் கிடைத்திருக்கும். அவற்றைப் பற்றி புத்தகம் எழுதும் திறமை அவருக்கு இருக்கிறது.
1964 ஆம் ஆண்டு பத்திரிகைத் துறைப் போராட்டத்தை ரணசிங்க நடைமுறையில் முன்னெடுத்தார். அவரின் அனுபவம் இந்நாட்டின் ஊடக கலாசாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே கூற வேண்டும். ஆனால் தற்போது அச்சு ஊடகத்துறை ஓரளவு பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளது.
அன்று எழுத்துக்கள் கோர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட பத்திரிகை கலை இன்று i pad வரையில் வளர்ந்துள்ளது. லேக்ஹவுஸ் போன்ற பெரும் மாளிகைக்குள் அடங்கி கிடந்த அறிவை google ஊடாக இலகுவாக தேடிக்கொள்ளும் வாய்ப்பு தற்போது உள்ளது. அதனால் பத்திரிகை துறையை சமூகமயப்படுத்துவதற்கு தொழில்நுட்பம் சிறந்த களமாகவும் அமைந்துள்ளது.
இருப்பினும் எந்தவொரு நாட்டிலும் உள்ள ஊடகங்கள் அந்நாடுகளின் சட்டங்களுக்கு இணங்கிச் செயற்படுகின்றன. ஆனால் சமூக ஊடகங்களின் வரவை தொடர்ந்து அவரவரின் தேவைக்கேற்ற பதிவுகள் இடப்படுகின்றன.
அதனால் அனைத்து சமூக ஊடகங்களும் சர்வதேச சட்டத்துக்கு இணங்க வேண்டுமா அல்லது நாட்டின் உள்ளக சட்டதிட்டங்களுக்கு இணங்க வேண்டுமா என்ற கலந்துரையாடலை ஏற்படுத்த வேண்டும். ஐரோப்பாவில் உள்ள சட்டத்திற்கு அனைவரும் உடன்படுவதற்கான சாத்தியம் உள்ளது. தற்போது உலகிலுள்ள பத்திரிகை மற்றும் சுஞ்சிகை உரிமையாளர்கள் விற்பனை அல்லது முதலீட்டாளர்களிடத்தில் மீளக் கையளிக்கும் செயற்பாடுகளுக்கு தயாராக உள்ளனர். அதனால் ஊடகத்துறையின் எதிர்கால நடைமுறையை அடுத்த இரண்டு, மூன்றுவருடங்களுக்குள் அவதானிக்க முடியும். அந்த துறைசார் நிபுணர்கள் நியூயோர்க்கில் மாத்திரமின்றி இலங்கையிலும் உருவாகலாம்.
இந்த பாராட்டு நிகழ்வில் ஆரம்ப உரையாற்றிய திவயின மற்றும் ரிவிர பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரான அமெரிக்காவில் வசிக்கும் உபாலி தென்னகோன்,
எட்மண்ட் ரணசிங்கவின் ஏழு தசாப்த ஊடக வாழ்க்கைக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வில் சிறப்புரை ஆற்றுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.எட்மண்ட் ரணசிங்க பாராட்டுக்களை விரும்புவதில்லை. அவர் தனது சேவைகளை செய்துள்ளதாக மாத்திரமே நினைப்பதால் பாராட்டுக்களும் விருதுகளும் அவருக்கு பொருட்டல்ல.
இருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய பத்திரிகை துறையிலிருக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்ற வகையில் எட்மண்ட் ரணசிங்கவுக்கு பாராட்டு வழங்கப்படுவது முக்கியமானதாகும்.
1952 இல் லேக்ஹவுஸ் நிறுவனத்தில் ‘டெயிலிநியுஸ்’ பத்திரிகையின் ஊடகவியலாளராக ஊடக வாழ்க்கையை ஆரம்பித்த எட்மண்ட ரணசிங்க, தினமின பத்திரிகையின் பிரதிப் பணிப்பாளராக பணியாற்றிய 1973 ஆம் ஆண்டு காலப்பகுதியில் லேக் ஹவுஸ் நிறுவனம் அரசுடமையாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகினார்.
1977 ஆம் ஆண்டுகளில் மீண்டும் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க ‘தினமின’ பத்திரிகையின் ஆசிரியராக பதவியேற்ற ரணசிங்க பின்னர் சிலுமின பத்திரிகையின் ஆசிரியராகவும் தெரிவு செய்யப்பட்டார்.1981 ஆம் ஆண்டில் ‘திவயின’ பத்திரிகையின் இணை ஆசிரியராக தெரிவாகிய ரணசிங்க குறுகிய காலத்தில் இந்நாட்டின் பத்திரிகை துறையை புதிய பாதைக்கு இட்டுச் சென்று பிரசித்தப்படுத்தினார். அதன் முதலாவது ஆசிரியர் பீட பணிப்பாளரான ரணசிங்க, தனது 86 ஆவது வயதில் 2016 ஆண்டில் மீண்டும் ‘சிலுமின’ ஆசிரியர் பதவிக்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.
அவர் கதிரையில் அமர்ந்து நேரத்தை செலவிட விரும்பியவர் அல்ல. அறிவுமிகுந்த வாசகர் சமூகத்தை உருவாக்க பாடுபட்டார். அதனால் வாசகர்களின் அறிவு மேம்பாடு மற்றும் அறிவு மிகுந்த வாசகர் சமூகத்தை உருவாக்குதல் என்ற இரு, வாழ்நாள் இலக்குகளையும் கொண்டிருந்தார். அந்த எண்ணக்கரு இன்றும் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது.
“உங்கள் பிள்ளையை வகுப்பறையில் வீரராக்குங்கள்” என்ற வாசகத்தை கொண்டே வேர்ல்ட் சுவீட் ஜேர்னல் என்ற சஞ்சிகை விற்பனை செய்யப்படுகின்றது. அவ்வாறான வாசகங்களை மூன்று தசாப்தங்களுக்கு முன்னதாகவே எட்மண்ட் ரணசிங்க இந்நாட்டின் பத்திரிகை துறையில் கையாண்டிருந்தார். திவயின பத்திரிகையை மக்கள் மத்தியில் கொண்டுச் செல்லவும் அவர் பெரும் பணியை ஆற்றியிருந்தார். இன்று ஊடகத்துறையில் இருக்கின்ற பலரும் அவரது நிழலில் வளர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை மன்றக் கல்லூரியின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் சமன் அத்தாவுத ஹெட்டி மேற்படி நிகழ்வை வழிநடத்தினார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன, ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமநாத் சீ தொலவத்த, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனூச பெல்பிட்ட, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் தினித் சிந்தக கருணாரத்ன உட்பட பத்திரிகை ஆசிரியர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.