Presidential Secretariat of Sri Lanka

அரசியல் வேறுபாடுகளை அவ்வண்ணமே வைத்துக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்

  • ரோயல் கல்லூரியின் “ரீட் மாவத்தையின் நூற்றாண்டு விழா” நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு.

கட்சி ஜனநாயக அரசியலுக்குள் காணப்படும் வேறுபாடுகளை அவ்வண்ணமே தக்கவைத்துக்கொண்டு, புதிய நாடு, புதிய பொருளாதாரம் மற்றும் புதிய அரசியலை கட்டியெழுப்பும் பணியில் சகல அரசியல்வாதிகளும் ஒன்றுபட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் பிரதான மண்டபத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று (27) நடைபெற்ற “ரீட் மாவத்தையின் நூற்றாண்டு விழா” நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை கட்டமைப்புக்குள் முன்னெடுத்துச் செல்லப்படும் தரமான கல்வி முறைமையை பாராட்டிய ஜனாதிபதி, இதில் ரோயல் கல்லூரிக்கு முக்கிய பங்கு உண்டு எனவும் நாட்டிற்காக கடமையாற்ற ரோயல் கல்லூரியினர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்வந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் அடையாளமாக வெளியிடப்பட்ட நூலின் முதல் பிரதியும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டது.

அதனையடுத்து பாடசாலையின் அதிபர் திலக் வத்துஹேவாவினால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

”வெறுமனே செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடமாக மாத்திரமின்றி நாட்டுச் சம்பிரதாயங்களின் அடையாளாமாகவும் விளங்கும் இந்த மண்டபத்தின் வரலாறு நீண்டுச் செல்கிறது. எமது நாட்டின் அரசியல் முன்னோடிகளான சீ.ஏ.லோரன்ஸ், ரிசட் மோகன், முத்துக்குமாரசாமி மற்றும் ஜேம்ஸ் டி அல்விஸ் உள்ளிட்ட அனைவரும் ரோயல் கல்லூரியில் உருவானவர்கள். அதேபோல் ஆனந்த குமாரசுவாமி, அநாகரிக தர்மபால உள்ளிட்டவர்களும் இங்குதான் உருவாகினர். பொன். அருணாச்சலம், பொன் இராமநாதன் மற்றும் ஜேம்ஸ் பீரிஸ் போன்றவர்களும் இந்த பாடசாலையிலேயே உருவாகினர்.

அதேபோல் சென்.செபஸ்தியன் பாடசாலையில் உருவானவர்களையும் மறந்துவிடக்கூடாது. சேர். ஜோன் கொத்தலாவல சென்.செபஸ்தியன் கல்லூரியில் கல்வியை ஆரம்பித்து அந்த கட்டித்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்கும் வரையில் கல்வி கற்றார். ஜே.ஆர்.ஜயவர்தன இந்த பல்கலைக்கழகத்தை ஆரம்பித்த காலத்தில் இங்கு கல்வி பயின்றதாக கூறியுள்ளார். நாமும் இங்கிருந்து உருவாகியவர்கள் என்ற வகையில் அனைவரும் வெவ்வேறு துறைகளில் பல சேவைகளை ஆற்றியவர்களாகவும், ஆற்றி வருபவர்களாகவும் விளங்குகிறோம்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் ரோயல் கல்லூரியினர் நாட்டுக்கான பணிகளை ஆற்றியுள்ளனர். இங்கு மாஷ் பூசகரை நினைவுகூற வேண்டும். அனைத்து அதிபர்களும் ஆசிரியர்களும் பாடசாலையின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்துள்ளனர். அவர்களில் சிலர் இன்றும் இங்கு உள்ளனர். டட்லி சில்வா மற்றும் போகொட பிரேமரத்ன ஆகியோரை நினைவுகூற வேண்டும்.

ட்டலி சில்வா சிறந்த அதிபர். அவருடைய பலவீனமான பக்கங்களும் இருந்தன. அவர் ஒரு முறை எனக்கு சங்கீதம் கற்பிக் முயன்றார். அந்த முயற்சி பலனளிக்கவில்லை. போகொட பிரேமரத்ன பியகம பகுதியில் நீடித்த இருப்பை கொண்ட குடும்பமொன்றைச் சேர்ந்தவர். அவருடனான பழக்கம் பிற்காலத்தில் எனது அரசியல் வாழ்வின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. ரோயல் கல்லூரி நாட்டிற்கு பயனுள்ளவர்களை உருவாக்கிய களமாகும். இந்த பாடசாலைக்குள் ஆளுமையுடன் கூடியவர்கள் உருவாக்கப்படுகின்றனர்.

முதலாம் உலகப் போரில் உயிர் நீத்தவர்களின் நினைவாக நிர்மாணிக்கப்பட்ட சின்னமொன்று இங்கு உள்ளது. அதில் 380 ரோயல் கல்லூரியினரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களில் மேஜர் ஜெனரல் பெர்னாண்டோ மற்றும் பிரிகேடியர் ஜயதிலக்க போன்றவர்கள் நினைவிற்கு வருகின்றனர். அவர்கள் ஆனையிறவில் இருந்த வேளையில் அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அவர்கள் பயந்தோடவில்லை. தம்மோடு இருந்தவர்களை முன்னால் அனுப்பிவிட்டு அவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரை நீத்தனர். அவர்களது கடமைகளைச் சரியாக செய்துள்ளனர். அதுவே ரோயல் கல்லூரியினரின் பண்பாகும்.

நாம் என்றும் பயந்தோடவில்லை. நானும் பிரதமரும் இன்றும் இந்தப் பணிகளை முன்னெடுத்துச் செல்கிறோம். நாம் இருவரும் சகபாடிகள், எங்கள் இருவருக்கும் சொந்த வீடுகள் இல்லை. நான் தற்காலிக வீட்டிலேயே இருக்கிறேன். நாம் கடந்த காலத்தைப் பற்றி சிந்திப்பதற்கு மாறாக எதிர்காலத்தை பற்றி சிந்திக்கிறோம்.

உலகம் மாற்றம் கண்டுவரும் வேளையில், இந்நாட்டின் பொருளாதாரத்தை நாம் எவ்வாறு மாற்றியமைப்பது என்று சிந்திக்கிறோம். கல்வி முறையிலும் மாற்றம் வேண்டும். கல்வி அமைச்சரிடத்தில் அது குறித்து நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளேன். ரெடிகல் முறையில் மாற அவசியமான திட்டத்தை தயாரித்துள்ளோம்.

இன்று மலையகத்தின் பாடசாலையொன்றில் 80 மாணவர்கள் மாத்திரமே உள்ளனர். இருப்பினும் இந்த பாடசாலையில் 8000 மாணவர்கள் உள்ளனர். 20 -30 பாடசாலைகள் மாத்திரமே 5000 மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ளன. அதனால் பாடசாலை முகாமைத்துவம் தொடர்பிலான புதிய முறைமை தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

புதிய கல்வி முறைமை மற்றும் புதிய பாடசாலை முகாமைத்துவ முறைமையை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதேபோல் புதிய பல்கலைக்கழகங்களை நிறுவி பல்கலைக்கழகக் கல்வியை மேம்படுத்தவும் நாம் எதிர்பார்க்கிறோம்.

இன்று நாட்டிலுள்ள 50 – 100 பாடாசாலைகளுக்குள் போட்டி நிலவுகிறது. அந்த 100 பாடசாலைகளிலும் லண்டன் பாடசாலைகளுக்கு நிகரான தெரிவைக் கொண்ட மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். எமது உயர்தர பரீட்சை இலண்டன் உயர்தர பரீட்சை விடவும் கடினானதாக அமைந்திருப்பதே அதற்கான காரணமாகும்.

நாம் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய அறிவியல் முறைமைகளுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அனைத்து துறைகளினதும் முன்னேற்றத்திற்கு எமக்கு புதிய முறைமைகள் அவசியப்படுகின்றன.

அதேபோல் புதிய பொருளாதாரம், அரசியல் முறைமைகளுடன் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு புதிய நாட்டை கட்டியெழுப்புவோம். பாராளுமன்றத்திலும் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்படுவோம். கட்சி ஜனநாயக அரசியல் வேறுபாடுகளை அவ்வண்ணமே தக்கவைத்துக்கொண்டு அனைவரும் ஒன்றுபடுவோம்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குனவர்தன, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்லாபிட்டிய, பாராளுமன்ற உறுப்பினர்களான லக்‌ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக, எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம், எரான் விக்ரமரத்ன, ஹர்ஷ டி சில்வா, சீ.வீ.விக்னேஸ்வரன், யாதாமினி குணவர்தன, வைத்தியர் காவிந்த ஜயவர்தன ஆகியோருடன் ரோயல் கல்லூரி அதிபர், முன்னாள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர் குழாத்தினரும், மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

(English) Recent News