Presidential Secretariat of Sri Lanka

சியட் களனி வர்த்தகத்தின் 25ஆவது நிறைவு விழா ஜனாதிபதியின் தலைமையில்

சியட் களனி வர்த்தகத்தின் 25ஆவது நிறைவு விழா நேற்று (31) பிற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

வர்த்தகதுத்றையில் 25 வருட சிறப்பான பயணத்தைக் குறிக்கும் வகையில், அரச நிறுவனமாக இருந்து வெற்றிகரமான தனியார் வர்த்தகமாக சியெட்-களனி டயர் வணிகம் கடந்து வந்த பாதையைப் பாராட்டிய ஜனாதிபதி, இலங்கைச் சந்தைக்குள் பிரவேசிக்க விரும்பும் தரப்பினருக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.

சியெட் – களனி வர்த்தகத்தை வெற்றிகரமான வணிகமாக மாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“எனது தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட பியகமவை அண்டிய களனி பிரதேசத்தில் களனி டயர் கம்பனி அமைந்துள்ளது. அந்த சமயம் நான் கைத்தொழில் அமைச்சராக இருந்தேன். களனி டயர் நிறுவனம் ஒரு புகழ்பெற்ற நிறுவனமாக இருந்த போதிலும் அதனை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

பின்னர் அதை விற்க முடிவு செய்து, வழக்கமான நடைமுறைப்படி கேள்விமனு கோரப்பட்டது. அதற்கு முதலில் விண்ணப்பித்தவர் சானக சில்வா. பின்னர் அவர் இந்தத் தொழிற்சாலையைக் பொறுப்பேற்றார்.

களனி டயர் நிறுவனம் விற்கப்படுமா அல்லது மூடப்படுமா என்ற பெரும் சர்ச்சை எழுந்தது. தேசிய ஊழியர் சங்கமும் அந்த சமயம் என்னுடன் இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடியது.

நான் கல்வி அமைச்சராக இருந்த போது இலங்கையில் இறப்பர் சார்ந்த உற்பத்தித் தொழிற்சாலையொன்றை அமைப்பதன் அவசியம் தொடர்பில் டெரிக் நுகவெல என்னிடம் பரிந்துரைத்தார்.

1993இல், சியெட் வர்த்தகம் இலங்கையில் நிறுவப்பட்டது. அடுத்த கட்டமாக சியெட் மற்றும் களனி டயர் நிறுவனங்களை இணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இன்று 25ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், நான் அவர்களை வாழ்த்துகிறேன். மேலும் போட்டித்தன்மையுடன் ஏற்றுமதியை அதிகரித்து தொழிற்சாலையை விஸ்தரிக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கூட்டு முயற்சியானது வெற்றிகரமான இந்திய – இலங்கை ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் ஒரு சந்தர்ப்பம் என்று கூறவேண்டும். மேலும், இலங்கை சந்தையில் பிரவேசிக்க விரும்பும் தரப்பினருக்கு இது ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் உள்ளது.

சியெட் களனி வர்த்தகத்தை வெற்றிகரமானதாக மாற்ற தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த 25 ஆண்டுகளில் இலங்கைப் பண்டங்களிடையே போட்டித்தன்மையுள்ள ஏற்றுமதியாளராக உங்களைப் பார்ப்பது எனது எதிர்பார்ப்பு” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, ரஞ்சித் மத்துமபண்டார, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, சியட் களனி ஹோல்டிங்ஸ் தலைவர் சானக டி சில்வா, உப தலைவர் திலக் டி சொய்சா, நிறைவேற்றுப் பணிப்பாளர் ரொஹான் திலக் பெர்னாண்டோ மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(English) Recent News