Presidential Secretariat of Sri Lanka

இந்நாட்டின் நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நீர் வழங்கல் துறையின் புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கொள்கைத் திட்டமிடல் மற்றும் கண்காணிப்புக் கட்டமைப்பு பற்றி இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

காலநிலைக்கு ஏற்ற, பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான நீர் வழங்கல் கட்டமைப்பு முகாமைத்துவத்தை வலுப்படுத்துதல் மற்றும் நீர் செயல்பாடுகளின் கட்டுப்பாடு, நிலைத்தன்மை, செயல்திறன், தாங்கும் திறன் மற்றும் கொள்ளளவு தொடர்பாக கொள்கைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கி இந்த மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுப்பது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இந்தத் திட்டம் பிரதமர் அலுவலகம், நீர் வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை ஆகியவற்றால் செயல்படுத்தப்பட உள்ளது.

அமைச்சர் ஜீவன் தொண்டமான், பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச். எஸ். சமரதுங்க, நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டபிள்யூ.எஸ் சமரதிவாகர உட்பட அதிகாரிகள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் உள்நாட்டுப் பணிப்பாளர் டகபுமி கடோனோ (Takafumi Kadono) மற்றும் அதன் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

(English) Recent News