Presidential Secretariat of Sri Lanka

COP 28 மாநாட்டிற்கு ஜனாதிபதியிடமிருந்து 03 விசேட முன்மொழிவுகள் – வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி

  • இம்முறை மாநாட்டில் ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் மூவர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவர் பங்கேற்பு.
  • அரசாங்க செலவின்றி இளம் பிரதிநிதிகள், வலுசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வர்த்தகர்கள் மற்றும் ஊடகவியலாளர் குழு கலந்து கொள்கிறது.

அச்சுறுத்தலுக்குள்ளாகும் சாத்தியமுள்ள மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான “காலநிலை நீதிக்கான மன்றத்தை” நடைமுறைப்படுத்துதல் உட்பட மூன்று முன்மொழிவுகளை ஜக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இலங்கை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு (COP 28) நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை அரச தலைவர்கள், அரச மற்றும்-தனியார் துறை பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களின் பங்கேற்புடன் டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

காலநிலை மாற்றம் மற்றும் நாடுகள் அதை எவ்வாறு சமாளிக்க திட்டமிட்டுள்ளன என்பதை ஆராய்வதற்கான இந்த மாநாடு காலநிலை பற்றிய கலந்துரையாடலுக்கான பிரதான சர்வதேச தளமாக இருக்கும் என்றும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்த மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று அமைச்சர்களும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார். இருபது இளைஞர் பிரதிநிதிகள் மற்றும் வலுசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறையைச் சார்ந்த வர்த்தகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் குழு என்பன அரச செலவின்றி இதில் கலந்து கொள்ளும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் அலி சப்ரி மேலும் கூறியதாவது,

காலநிலை மாற்றத்தை கையாள்வது ஒரு மாயை என்று சில தரப்பினர்கள் கூறுகின்றன. ஆனால் அது மாயை அல்ல. சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்ந்தால், உலகத்தின் இருப்புக்கே பாதிப்பு ஏற்படும். கைத்தொழிற்புரட்சிக்கு முன் செய்யப்பட்ட உடன்பாட்டின் படி, ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

குறிப்பாக காலநிலை மாற்றத்தால் இலங்கை உள்ளிட்ட வெப்பவலய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றே கூற வேண்டும். வெப்ப வலயத்தில் மழைக்காடுகள் அமைந்துள்ளதோடு பல்வேறு இயற்கை பன்முகத்தன்மையையும் இங்கு பேணப்படுகிறது. வெப்ப வலயத்தில் 136 நாடுகள் உள்ளன. உலக சனத் தொகையில் 40% மக்கள் அந்த நாடுகளில் வாழ்கின்றனர். கைத்தொழிற் புரட்சியுடன் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டது. கைத்தொழிற் புரட்சி செய்யும் நாடுகளை விட கைத்தொழிற் புரட்சியை குறைவாக செய்யும் நாடுகளிலே சுற்றுச்சூழல் மாசுபாட்டின் தாக்கம் குறைவாகக் காணப்படுகிறது.எனவே, இந்த மாநாட்டில் சில புதிய கொள்கை ரீதியான பரிந்துரைகளை இலங்கை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது.

இலங்கை உட்பட அனர்த்தங்களை எதிர்கொள்ளும் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து குழுவாக செயற்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்கும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் தேவையான முதலீட்டை சர்வதேச சமூகத்தின் ஊடாக ஒதுக்குவது தொடர்பிலும் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தின்படி, இலங்கை தலைமை தாங்கி செயற்படுத்தும் காலநிலை நீதிக்கான மன்றத்தின் ஊடாக, காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்குத் தேவையான கொள்கைகளைத் தயாரிப்பதற்கும், யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், சர்வதேச சமூகத்திடமிருந்து யோசனைகளை பெறுவதற்கும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். வெப்ப வலயத்திலுள்ள பல நாடுகள் இதற்கு ஆதரவளிக்க ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளன.

அத்துடன் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் விஞ்ஞானபூர்வ ஆய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சர்வதேச சமூகத்திற்கு முன்வைக்க இருக்கிறோம். இவ்வருட மாநாட்டில் அதிக முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் நாடாக இலங்கை மாற முடியும். மாநாட்டில் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை வெறும் வார்த்தைகளுக்குள் மட்டுப்படுத்தப்படாமல் நடைமுறையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,

சுற்றுச்சூழல் நிகழ்ச்சி நிரல் தற்போது மாறி வருகிறது. இன்று உலகிலுள்ள ஒவ்வொரு தளத்திலும் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை பிரதான தலைப்புகளாகும். ஆனால் இன்றைய நிலவரப்படி சுற்றுச்சூழல் தொடர்பான கலந்துரையாடல் முன்னிலைக்கு வந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புக்கு முக்கிய காரணம் சுற்றுச்சூழல் குறித்து சரியான கவனம் செலுத்தப்படாமையாகும். மனிதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு கணக்கிட முடியாதது. கைத்தொழில் புரட்சியின் போது சுற்றுச்சூழலில் சரியான கவனம் செலுத்தாததன் விளைவை இன்று அனுபவித்து வருகிறோம்.

2015 ஆண்டில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை. அதனால் வெப்ப வலய நாடுகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. அபிவிருத்தி அடைந்த நாடுகளின் செயற்பாடுகளால் வெப்ப வலய நாடுகள் பாரிய நட்டத்தை சந்தித்துள்ளன. எனவே ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டையும் மிஞ்சிய பெறுமதி இம்முறை மாநாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. சுற்றாடல் பாதிப்பு எதிராக வலுவான சூழலை கட்டமைக்க வேண்டிய அவசியம் தோன்றியுள்ளது என்றார்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,

இந்த நாட்டில் எரிசக்தியை செயல்படுத்துவதற்கான நிதி உதவிகளை பெற்றுக்கொள்வது இலகுவானதல்ல. அதற்காக, சர்வதேச நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியைப் பெறுவது அவசியம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் நிபுணர்களும் ஒன்று கூடி முடிவெடுக்கும் வாய்ப்பு உருவாகும். அதேபோல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் நாட்டில் மின் உற்பத்தியை வெற்றிகரமாக மேற்கொள்ளவும் இந்த மாநாடு மிக முக்கியமானது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை வெற்றிகரமாக செய்வதற்கான மும்மொழிவுகளை கடந்த ஆண்டுக்கான மாநாட்டிலும் சமர்பித்தோம். உலக வங்கி மற்றும் அபிவிருத்திக்கான முகவர் நிறுவனங்களினால் நடத்தப்பட்ட ஆய்வுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியின் மூலம் இந்த நாட்டின் உள்நாட்டு தேவைப்பாடுகளுக்கும் பிராந்திய நாடுகளின் தேவைகளுக்கும் அவசியமான மின்சாரத்தை வழங்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் அறியப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி பசுமை ஹைட்ரஜன் வழிகாட்டல் வரைபடத்தை வெளியிட்டார். அதனூடாக வட மாகாணத்தை மையமாகக் கொண்டு கடல்சார் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை பயன்படுத்த எதிர்பார்க்கிறோம். அதனை பயன்படுத்துவதன் மூலம் அவசியமான மின்சாரத்தையும், போக்குவரத்துச் செயற்பாடுகளுக்கு தேவையான ஹைட்ரஜனையும் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறோம். நமது நாட்டில் பசுமை வழிகாட்டலுக்கான வரைபடத்தை செயற்படுத்துவதற்கான ஒத்துழைப்பை இந்த மாநாட்டின் ஊடாக எதிர்பார்க்கிறோம்.

முன்னைய மாநாடுகளில், நமது நாட்டிற்கு தனித்துவமாக இடம் காணப்படவில்லை. ஆனால் இம்முறை மாநாட்டில் இலங்கை தனக்கான இடத்தை உருவாக்கியுள்ளமை சிறப்பம்சமாகும். இந்த மாநாடு தொடர்பில் எதிர்மறையாக சிந்திக்க கூடாது. காலநிலை மாற்றத்தின் காரணமாக வானிலை அவதான நிலையமும் சரியான எதிர்வுகூறல்களை முன்வைக்க முடியாத நிலைமை காணப்பட்டது. எதிர்காலத்திலும் நாம் நீர்மின்சாரத்தின் மீதே தங்கியிருக்க முடியாது. சூரிய சக்தி மற்றும் காற்றைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய உலக நாடுகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு அவசியம்.

காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன,

இந்த மாநாடு உலகளாவிய ஏனைய மாநாடுகளை விடவும் சிறம்பசம் வாய்ந்தது. உலகில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள், உலகின் பிரதான நிறுவனங்கள், மதத் தலைவர்கள், இம் மாநாட்டில் பங்கேற்பர். காலநிலை மாற்றங்கள் தொடர்பில் முகம்கொடுக்கும் பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இது சிறந்த களமாகும். காலநிலை அனர்த்தங்களின் காரணமாக நமது நாடு வருடாந்தம் பெருமளவிலான டொலர்களை இழக்க நேரிடுகிறது. 2050 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 1.2% நட்டத்தை சந்திக்கவிருப்பதாக உலக வங்கியின் நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர். அவ்வாறான நட்டங்களை குறைப்பதற்கும் இந்த மாநாடு வாய்ப்பாக அமையும் என தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் பசிந்து குணரத்ன,

மனிதர்கள் சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புக்கள் தொடர்பில் கேள்வி எழுப்பட வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இம்முறை மாநாட்டின் இளம் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். அவர்கள் நாட்டின் காலநிலை தொடர்பில் தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அதேபோல் தேசிய இளைஞர் சேவை மன்றம், யுனிசெப் அமைப்பு, பிரிட்டிஷ் கவுன்சில் உள்ளிட்ட நிறுவனங்களை மையப்படுத்தி காலநிலை மாற்றங்கள் தொடர்பில் நாட்டின் இளம் சமுதாயத்தினரை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் பலவும் இடம்பெறுகின்றன.

இந்த சுற்றுப் பயணத்திற்காக அவர்கள் அரச நிதியை பயன்படுத்தவில்லை. மேற்படி இளைஞர்கள் காலநிலை மாற்றங்கள் ஊடாக இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான அர்பணிப்புக்களை மேற்கொள்ளும் குழுவினர் ஆவர். காலநிலை அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கும் உலக நாடுகள் வரிசையில் இலங்கை 30 ஆவது இடத்தில் உள்ளது. எதிர்கால சவால்களை அறியாமல் இளைஞர் சமுதாயம் காலநிலை பாதிப்புக்களுக்கு முகம்கொடுப்பதை தவிர்ப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்று தெரிவித்தார்.

(English) Recent News