Presidential Secretariat of Sri Lanka

இடைநடுவில் கைவிடப்பட்ட 200க்கும் அதிகமான அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் மீள ஆரம்பிக்கப்படும்.

  • சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடன் கிடைத்தவுடன் நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும்

-நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

வெளிநாட்டு உதவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் மீள ஆரம்பிக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அரசியல் ஸ்திர நிலையை உறுதிப்படுத்தும் வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதென தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர், அரசாங்கத்தின் வரவு செலவு முகாமைத்துவத்துக்கான பின்னணி உருவாகியுள்ளதெனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அரசாங்கத்தின் ஸ்திர நிலையை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடனுக்கான அனுமதி கிடைத்தமை முன்னோக்கிச் செல்வதற்கு வலுவாக அமைந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் நிதி உதவிகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த கடனுக்கான அனுமதி கிடைக்காது என்று போலிப் பிரசாரங்கள் செய்யப்பட்டமை கவலைக்கிடமானது.

சரிவடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டமைத்து முன்னேற்றிச் செல்ல சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழிமுறைகள் எவையும் இருக்கவில்லை. இந்நிலையில் ஏனைய கடன் வழங்குநர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் வரைவுக்குள் இலங்கை எவ்வாறு செயற்பட போகின்றது என்பது தொடர்பிலேயே அவதானம் செலுத்துக்கின்றனர்.

இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது நாட்டு மக்கள் நெருக்கடிக்கு உள்ளனர் என்பதையும் நாம் கருத்தில் கொள்வோம். இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் பிரசித்தமான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது. நெருக்கடிக்கு முகம் கொடுத்த காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தையும், பாராளுமன்றத்தின் ஒத்துழைப்பையும் நாட்டு மக்களின் பொறுமையான அணுகுமுறையையும் நன்றியுடன் நினைவுக்கூற வேண்டும்.

எவ்வாறாயினும் தற்போது வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் செயற்பாடுகளை வலுவாக முன்னெடுத்துச் செல்ல முடியும். அதனை விடுத்து அரசியல் ரீதியான பார்வையினால் எதனையும் சாதிக்க முடியாது.

கடந்த கால தவறுகள் தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதால் மாத்திரம் அவற்றை நிவர்த்திக்க மாற்று வழி கிடைக்காது. சர்வதேச நிதியத்துடனான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதலே எதிர்கட்சி அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்தது. அதற்கு மாறாக சிலர் தாம் பிரசித்தம் ஆவதற்காகவும் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்தமை வருந்தற்குரியது.

அதேநேரம் வற் வரி விதிப்பு பணவீக்கத்தில் 2 சதவீத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மறுமுனையில் வரி செலுத்துவோர், செலுத்தாமால் இருப்போர் தொடர்பில் கவனம் செலுத்தி வரி வலையமைப்பைவிஸ்தரிக்க எதிர்பார்த்துள்ளோம்.

எவ்வாறாயினும் கடன் மறுசீரமைப்புக்கு பின்னர் கடந்த காலத்தில் இடைநிறுத்தப்பட்ட பல திட்டங்களை 2024 ஆம் ஆண்டில் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். அதேபோல் 2021 ஆம் ஆண்டு இறுதி முதல் 2023 இறுதி காலாண்டு வரையில் மறை பெறுமானத்தில் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சியை 2024 ஆம் ஆண்டி நேர் பெறுமானத்திற்கு கொண்டுச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம்.

எதிர்கட்சியினர் கூறுவது போல இலகுவாக அவற்றை செய்ய முடியாது. அவ்வாறு அவர்களால் செய்ய முடியுமெனில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் முன்னதாக அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு காணப்பட்டது. மேலும் நாட்டிலுள்ள பொருளாதார மதிப்பீட்டு நிறுவனங்கள் சிலவும் பொருளாதார செயற்பாடுகள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.

எவ்வாறாயினும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது நம்பிக்கை இருப்பதால் எதிர்க்கட்சியினரின் போலிப் பிரசாரங்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் பதிலளிக்கவில்லை. அரசாங்கத்தின் நிலைப்பாடு சரியானது என்பது சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவனைக்கான அனுமதி கிடைத்ததன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தற்போது நாட்டில் அரசியல், சமூக, பொருளாதார நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தியின் பலன்களும் படிப்படியாக கீழ் மட்டம் வரையில் சென்றடையும். இவ்வாறான நிலைமைக்கு கைகொடுத்த சர்வதேச நாணய நிதியத்திற்கு நன்றி கூற வேண்டும்.

அதேநேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தினால் எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை என்றும். மாறாக நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான வழிகாட்டல் வரைவையே மேற்படி நிதியம் வழங்கியுள்ளது. அதேபோல் 2023 – 2024 ஆம் ஆண்டுக்களுக்காக ஐஎம்எப் 667 மில்லியன் டொலர்களை அனுமதித்திருப்பதோடு உலக வங்கி 1300 மில்லியன் டொலர்களையும் ஆசிய அபிவிருத்தி வங்கி 1553 மில்லியன் டொலர்களையும் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், வரவு செலவு திட்டம் தொடர்பில் ஒரு மாத காலமாக பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் எதிர்கட்சியினர் ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்தவொரு திருத்தத்தையும் முன்வைக்கவில்லை. மாறாக அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களை மாத்திரமே முன்வைத்தமை கவலைக்கிடமானதாகும்.

எவ்வாறாயினும் சரிவடைந்த பொருளாதாரத்தை நினைத்த மாத்திரத்தில் மீட்டெடுக்க முடியாது என்பதே உண்மையாகும். சரிவை சந்தித்துள்ள நாடுகளுடன் ஒப்பிடுகைளில் இலங்கை ஓரளவு விரைவாகவே மீண்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தினால் அனுமதிக்கப்பட்ட இரண்டாவது தவணைக் கடன் தொகை விரைவில் நாட்டுக்கு கிடைக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

(English) Recent News