Presidential Secretariat of Sri Lanka

மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு மற்றும் அது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் வெற்றி

  • பங்களித்தவர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு.

மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு ஒழிப்புக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திடடங்களின் முன்னேற்றம் தொடர்பிலான மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலை பின்பற்றி முப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு தொற்று அதிகமான காணப்படும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு டெங்கு ஒழிப்பு மற்றும் அதுகுறித்த விழிப்புணர்வு தொடர்பிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக டெங்கு பரவல் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ்ப்பாணம்,திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் குறித்து கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும், பாடசாலை, வழிப்பாட்டுத் தலங்கள், பொது இடங்கள், தனியார் நிறுவனங்களை அண்டிய பகுதிகளில் அதிகளவில் டெங்கு பரவல் காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது.

பல்வேறு வேலைத்திட்டங்களின் கீழ் டெங்கு ஒழிப்புக்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஜனாதிபதி பாராட்டுத் தெரிவித்தார்.

மேலும், டெங்கு ஒழிப்புக்காக சுகாதார அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயற்படும் பிரிவொன்றை நிறுவவும், அதற்கு உரிய அதிகாரிகளை நியமிக்கவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தலைமையில் முப்படை பிரதானிகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபரின் பங்கேற்புடன் இன்று (04) விசேட சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதனூடாக நாடளாவிய ரீதியிலான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மற்றும் அதன் நாளாந்த முன்னேற்றம், எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் அறிவிப்பதற்கான முறைமை தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டது.

சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால , பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோருடன் கொழும்பு மாநகர சபை, கல்வி மற்றும் சுற்றாடல் அமைச்சுகளின் பிரதிநிதிகளும் Zoom தொழில்நுட்பத்தின் வாயிலாக இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

(English) Recent News

Most popular