- ஜனாதிபதியின் சரியான பொருளாதார வேலைத்திட்டம் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது.
- ஜப்பான் நிதி உதவியில் ஆரம்பிக்கப்பட்டு, இடைநடுவில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் – ஜப்பான் நிதி அமைச்சர் சுசூகி ஷூனிச்சி.
இலங்கை பொருளாதார ரீதியில் அடைந்துள்ள சிறந்த முன்னேற்றங்களுக்கு ஜப்பான் நிதி அமைச்சர் சுசூகி ஷூனிச்சி (H.E. SUZUKI Shunichi) பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி மற்றும் பணவீக்க குறிகாட்டிகளில் காணக்கூடிய முன்னேற்றங்களை சுட்டிக்காட்டிய ஜப்பான் நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான பொருளாதார வேலைத்திட்டத்தின் பலனாகவே அந்த முன்னேற்றங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜப்பான் நிதியமைச்சர் SUZUKI Shunichi, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜப்பான் – இலங்கை பொருளாதார உறவுகளை பலப்படுத்திக்கொள்ளும் நோக்கிலேயே ஜப்பான் நிதி அமைச்சர் இலங்கைக்கு இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதரத்தை நிலைப்படுத்தி மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் கடன் நிலைப்படுத்தல் தொடர்பில் கவனம் செலுத்தி பல்வேறு சிறப்பான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொண்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
அதேநேரம் இலங்கையின் கடன் நீட்டிப்பு முயற்சிகளுக்கு ஜப்பான் வழங்கிய சிறப்பான ஒத்துழைப்புக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்தார்.
இலங்கைக்கு ஜப்பான் யென்களாக வழக்கப்பட்டுவந்த கடன்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் ஜப்பான் நிதி அமைச்சர், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் சங்கத்துடனான புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மேற்பார்வையின் பின்னர் கடன் நிலைத் தன்மை தொடர்பில் அறிவிப்பு விடுத்த பின்னர் மேற்படி கடன்களை மீள வழங்கும் இயலுமை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் கடல் பாதுகாப்பு தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும், இலங்கையின் எதிர்கால பயணத்திற்காக ஜப்பானினால் வழங்க முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
ஜப்பான் – இலங்கை தொடர்புகளை மேலும் பலப்படுத்த, தான் அர்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
வர்த்தக துறையை சிறந்த மட்டத்தில் பாதுகாப்பதற்கு ஏற்றுமதி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, இலங்கைக்கான புதிய பொருளாதார முறைமை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதன்போது இலங்கையின் கடன் நீடிப்பு செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் விளக்கமளித்த இலங்கை தரப்பினர், கடன் நீடிப்பை இவ்வருடத்தின் முதற் காலாண்டில் நிறைவு செய்வதே இலங்கையின் இலக்காகும் என தெரிவித்தனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீள் நிர்மாண பணிகள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டதோடு, ஜப்பான் நிதி உதவியில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடைநடுவில் கைவிடப்பட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
ஜப்பான் தூதுக் குழுவினர் மற்றும் இலங்கை சார்பில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.