Presidential Secretariat of Sri Lanka

கைத்தறி மற்றும் பதிக் பிடவைகள் இறக்குமதியை நிறுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானம்

கைத்தறி மற்றும் பதிக் பிடவைகள் இறக்குமதியை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார்.

இத்தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களை முன்னேற்றுவதற்கும் மேலும் உற்பத்தியாளர்களை இத்துறைக்கு ஈர்ப்பதற்கும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

பிடவை மற்றும் ஆடைக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இறக்குமதி பிடவைகளை பயன்படுத்தி உற்பத்திசெய்யப்படும் ஆடைகளுக்கு பதிலாக சுதேச பிடவை உற்பத்தி சார்ந்த ரெடிமேட் ஆடைகளுக்கு அதிக சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன் மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் பெருமளவு அந்நியச் செலாவணியை மீதப்படுத்த முடியும்.

பாடசாலைகள் மற்றும் பல்வேறு சீருடைகளுக்காக மேற்கொள்ளப்படும் பிடவை உற்பத்தியின் தரம் அதிக தரம்வாய்ந்ததாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அதற்காக கண்காணிப்பு குழுவொன்றை ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

ஒரு சிலரிடம் உள்ள பிடவை உற்பத்தி சந்தையை அத்துறையில் ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்களுக்கும் திறந்துவிட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ரெடி மேட் ஆடை உற்பத்தியாளர்களும் சுதேச வர்த்தக நிறுவனங்களும் ஒன்று கூடி தீர்மானங்களை மேற்கொள்வதன் மூலம் விரிந்த சந்தையொன்றை உருவாக்க வேண்டும் என்றும், ஏனைய நாடுகளின் கொள்வனவாளர்களுக்கு மொத்தமாக கொள்வனவு செய்வதற்கு வர்த்தக மத்திய நிலையமொன்றை தாபிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நூல் மற்றும் இரசாயண நிறச்சாயங்களின் தரம் மற்றும் விலையுடன் தொடர்புடைய பிரச்சினைகளை தீர்ப்பது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர் விமல் வீரவங்ச, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜே.ஏ. ரஞ்சித், பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல மற்றும் ஆடைகள், பிடவைகள் துறை வர்த்தகர்கள் சிலரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

(English) Recent News

Most popular