Presidential Secretariat of Sri Lanka

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை தட்டிக் கழிக்க வேண்டாம். சரியான மூலோபாயம் எதுவென எனக்குக் கூறுங்கள்

ஜனாதிபதி மத்திய வங்கி அதிகாரிகளிடம் தெரிவிப்பு

“நாடு முகங்கொடுத்துள்ள சுகாதார பிரச்சினையை பொருளாதார பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. நாம் ஒரு பூகோள பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளோம். வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உதவும் நிதி மற்றும் அரசிறை வருமான கொள்கைகளை வகுக்கும் பொறுப்பு மத்திய வங்கியிடமும் திறைசேரியிடமுமே உள்ளது. உலகின் பெரிய, சிறிய நாடுகளின் மத்திய வங்கிகள் இப்பிரச்சினையை வெற்றிகொள்வதற்கு பல்வேறு வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. எமது மத்திய வங்கியிடமிருந்து அதற்கான எந்தவொரு நல்ல பதிற்குறியும் கிடைக்கப்பெறவில்லை. பிரச்சினையை வெற்றிகொள்வதற்கு செய்ய வேண்டியதை எவ்வித தாமதமுமின்றி எனக்கு அறியத் தாருங்கள்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மத்திய வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

பொருளாதார புத்தெழுச்சிக்காக அரசாங்கம் அதன் முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது. அதற்கு மத்திய வங்கியின் உதவி இதுவரை கிடைக்கவில்லை. அதற்கான காரணத்தை விளக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் முன்னணி நாடுகளினதும் சிறிய நாடுகளினதும் மத்திய வங்கிகள் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான பொறிமுறைகளை முன்வைத்துள்ளன. எனினும் எமது நாட்டின் மத்திய வங்கி பொருளாதார புத்தெழுச்சிக்காக எவ்வித முன்மொழிவையும் முன்வைக்கவில்லை. கடந்த சில வருடங்களாக பல நிறுவனங்களுக்கு அவர்கள் வழங்கிய சேவைகள் மற்றும் உற்பத்திகளுக்காக அரசாங்கம் பெருமளவு நிதியை செலுத்த வேண்டியுள்ளது. அவற்றை பிணையாக வைத்துக்கொண்டு 150 பில்லியன் ரூபா நிதி ஏற்பாடுகளை வங்கிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி முன்வைத்த முன்மொழிவை மத்திய வங்கி நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக ஏற்படும் பொருளாதார பின்னடைவு குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மீது சுமத்தப்படுவதாக ஜனாதிபதி கூறினார்.

மத்திய வங்கியில் நிதி மோசடிகள் இடம்பெற்ற காலப்பகுதியில் இருந்த அதிகாரிகள் இன்னும் தமது பதவிகளில் உள்ளனர். அந்த பாரிய மோசடிக்கு உதவிய இவர்கள் நாட்டை கட்டியெழுப்புவதற்கு உதவாது இருப்பது குறித்து ஜனாதிபதி அவர்கள் அதிருப்தி தெரிவித்தார். நாட்டை கட்டியெழுப்புவதற்காக  மக்கள் தனக்கு மிகப்பெரும் மக்கள் ஆணையை வழங்கியிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதனை நிறைவேற்றுவதற்கான கடப்பாட்டினை கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை இணைந்து கொவிட் நோய் தொற்றிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு பாரிய அர்ப்பணிப்பை செய்துள்ளனர். நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பும் பொறுப்பு மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கு பதிலாக மத்திய வங்கி தனது முன்மொழிவுகளுக்குகூட தடை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். இந்த பிரச்சினைகளை விளங்கிக்கொண்டு மிக விரைவாக மத்திய வங்கி அதன் முன்மொழிவுகளை அல்லது தனது முன்மொழிவுக்கான அனுமதியை வழங்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தார். இது இன்றைய தினமே செய்யப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளியு.டி.லக்ஷ்மன் ஆகியோரும் மத்திய வங்கியின் அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

(English) Recent News