Presidential Secretariat of Sri Lanka

மாத்தளையில் மக்களின் பல பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி உடனடித் தீர்வு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இன்று (10) மாத்தளை மாவட்டத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மக்களின் பல பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கினார்.

மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ரைதலாவ பாலத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு கடந்த அரசாங்கம் முயற்சி எடுக்காததனால் தாம் பாரிய அசௌகரியத்திற்கு உள்ளாகி இருப்பதாக பிரதேச மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர். அதனால் அம்பன்கங்கோரலை பிரதேச சபைக்கும் பல்லேதென்ன பிரதேச செயலகத்திற்கும் இடையில் பயணிப்பதற்கு 15 கி.மீ கூடுதலான தூரத்தை பயணிக்க வேண்டியுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டினர். கைக்காவல, கும்பல்தொட்ட வீதியின் நிர்மாணப் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டப்ளியு.ஆர்.பிரேமசிறியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட ஜனாதிபதி அவர்கள், பாலம் மற்றும் வீதியின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை விடுத்தார்.

கதிரைகள், மேசைகளை பெற்றுத் தருமாறு மெட்டிஹக்க, மொன்டிகொல்ல ஆரம்ப பாடசாலை மாணவர்கள் கேட்டுக்கொண்டதற்கமைய தொலைபேசி மூலம் கல்வி அமைச்சருக்கு தெளிவூட்டி தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்தார்.

விசல் மாத்தளை நீர் செயற்திட்டத்தை துரிதப்படுத்தி லக்கல தொகுதியின் நீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தருமாறும் கிராமிய மாணவர்களுக்கு கணனி தொழிநுட்ப அறிவை பெற்றுக்கொள்ளும் வகையில் ஈ – நெனசல திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறும் மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

திரு.சமன் விஜேநாயக்க லக்கல, அம்பன்கங்கை, மெட்டிஹக்க பொது விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களிடம் இவ்வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டது.

திரு.திலக் பண்டார லக்கல பேருந்து நிலையத்திற்கு அருகில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களிடம், மொரகஹகந்த செயற்திட்டத்தின் காரணமாக காணிகளை இழந்ததினால் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் குடி நீர் பிரச்சினை போன்ற அத்தியாவசிய கீழ் கட்டுமான வசதிகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாகவும் லக்கல பிரதேச மக்கள் ஜனாதிபதி அவர்களுக்கு தெரிவித்தனர்.

திரு.லக்ஷ்மன் வசந்த பெரேரா லக்கல நாவுல பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் பங்கேற்றார். மாத்தளை அபிவிருத்தி திட்டம் தொடர்பான மகஜர் ஒன்றையும் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தனர்.

அம்பன் கங்கை கோரலையின் பிரதேச சபை ஊடக விநியோகிக்கப்படும் நீர் குடிப்பதற்கு தரமற்றதென மாத்தளை தொட்டகமுவ, பலாபத்வல மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் முறையிட்டனர். பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளுக்கு தெளிவூட்டி தீர்வை பெற்றுத் தருவதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். திரு.நாலக்க பண்டார கோட்டேகொட மாத்தளை பலாபத்வலயில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் பங்கேற்றார்.

திரு.ரோஹன திசாநாயக்க மாத்தளை நகர் சிறுவர் பூங்காவிற்கு அருகிலும் திரு.சமந்த தர்மசேன ரத்தொட்ட, உக்குவெல பிரதேச சபையின் வாகனத் தரிப்பிடத்திற்கு அருகிலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளிலும் ஜனாதிபதி அவர்கள் பங்கேற்றார்.

இதுவரை காலமும் ஜனாதிபதி அவர்கள் நாட்டுக்காக முன்னெடுத்த நடவடிக்கைகளை நிகழ்வுகளில் பங்கேற்ற பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

(English) Recent News