Presidential Secretariat of Sri Lanka

பாரம்பரிய சுதேச மருத்துவ முறை பாதுகாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி கண்டியில் தெரிவிப்பு

பாரம்பரிய சுதேச மருத்துவ முறையை பாதுகாப்பதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

பாரம்பரிய சுதேச மருத்துவ முறையை பிரபல்யப்படுத்தி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பொதுஜன முன்னணியில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக இன்று (12) இரண்டாவது நாளாகவும் கண்டி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தெல்தெனிய பேருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ஜனாதிபதி அவர்களிடம் சுதேச மருத்துவர் ஒருவர் முன்வைத்த மகஜர் ஒன்றை கையேற்ற வேளையிலேயே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

ஹசித்த ஏக்கநாயக்க இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்ததுடன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவும் அதில் கலந்துகொண்டார்.

சுயதொழில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்காக கிராமிய கடனுக்கு விண்ணப்பிக்கும்போது ஏற்படும் பிரச்சினைகளை அரச வங்கிகளுடன் கலந்துரையாடி தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குண்டசாலையில் மெனிக்ஹின்ன பிட்டவலையில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே பாத்துதும்பர யட்டிவாரன விகாரைக்கு அருகில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதி அவர்கள், வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் 2020 தேர்தல் கருப்பொருள் பாடல் ஜனாதிபதி அவர்களினால் வெளியீட்டு வைக்கப்பட்டது. மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து வருகை தந்திருந்தவர்களை ஆசிர்வதித்தனர்.

மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும்போது 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஏற்படும் தடைகளை விளக்கிய ஜனாதிபதி அவர்கள், அதனை சரி செய்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடனான பாராளுமன்றத்தின் அவசியத்தை சுட்டிக்காட்டினார். முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஹரிஸ்பத்துவ அலவத்துவல பிரதேச சபை விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

குணதிலக்க ராஜபக்ஷ ஹரிஸ்பத்துவை மெதவெலவில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றியதுடன், பாதையில் இரு புறத்திலும் நின்றுகொண்டிருந்த மக்கள் ஜனாதிபதி அவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

கெஹெலிய ரம்புக்வெல்ல கலகெதரே ஹத்தரலியத்த சந்தை வளாகத்திலும் எல்.பிரசன்ன வீரவர்தன ஹரிஸ்பத்துவை நுகவெல 05ஆம் கட்டையிலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள், அங்கு வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

(English) Recent News