Presidential Secretariat of Sri Lanka

சிக்கலற்ற காணிகளுக்கு மூன்று மாத காலத்திற்குள் காணி உறுதிப்பத்திரம்

ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை

  • காணிக் கொள்கை சீர்திருத்தப்படும்
  • காணி அபிவிருத்தியின் பின்னர் வேறு ஒருவருக்கு கைமாற்ற முடியாது
  • பயன்படுத்தப்படாத LRC காணிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
  • இளைஞர் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகள்

மக்கள் பயன்படுத்தி வருகின்ற சிக்கலற்ற காணிகளுக்கு மூன்று மாத காலத்திற்குள் காணி உறுதிப்பத்திரங்களை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

பல்வேறு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டபோது காணி உறுதிப்பத்திரம் இல்லாமையே மக்கள் முன் வைத்த மிக முக்கிய பிரச்சினை என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பரம்பரையாக வாழ்ந்து வந்தாலும், பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் உறுதிப்பத்திரம் இல்லாமையினால் அவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு உட்பட்டிருப்பதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாட்டுக்கும் பொருளாதார கொள்கைக்கும் பொருத்தமான வகையில் அமைந்த காணி கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இன்று (02) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச வியாபார காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

காணி உறுதிப்பத்திரம் இல்லாமையினால் மக்கள் பாரிய சிக்கல்களுக்கு உட்பட்டுள்ளதுடன், அபிவிருத்தியும் பாரிய பின்னடைவு கண்டுள்ளது. விவசாய பொருளாதார பொறிமுறை ஒன்றை கட்டியெழுப்பும்போது காணி பயன்பாட்டு கொள்கை மிக முக்கியம் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

குத்தகைக்கு விடப்பட்டுள்ள காணிகளை அபிவிருத்தி செய்ததன் பின்னர் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு அல்லது காணி உரித்துடைய நிறுவனம் அல்லது வேறு தரப்பினருக்கு பொறுப்பளித்தல் விவசாயிகள் முகங்கொடுத்துள்ள மேலும் ஒரு சிக்கலாகும். அவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாமென்று ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு உரித்துடைய பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படாத காணிகளை பொருத்தமான பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், இளைஞர் தொழில் முயற்சியாளர்களுக்கு அவற்றை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் குறிப்பிட்டார்.

பல்வேறு அரசாங்கங்களின் கீழ் ஜனாதிபதிகள் மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கினார்கள். ஆனாலும் பிற்பட்ட காலங்களில் வங்கிக்கடன் அல்லது பொருளாதார அலகாக அக்காணிகளை ஆக்கிக்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுத்து வருவதாக பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு காணிகளை வழங்கும்போது கடன் மற்றும் ஏனைய வசதிகளை பெற்றுக்கொள்ள முடியுமான வகையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட வேண்டும். எதிர்காலத்தில் அவ்வாறே மக்களுக்கும் அதுபோன்ற வசதிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் உறுதிப்பத்திரங்களை தயாரிப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

குத்தகை அடிப்படையில் காணி ஒன்றின் சிக்கலற்ற தன்மையை உறுதி செய்துகொள்வதற்கு 20க்கும் அதிகமான நிறுவனங்களில் மக்கள் அனுமதி பெற வேண்டும். அதற்காக பல வருடங்கள் செல்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வாறான நிலைகளுக்கு இடமளிக்காது இலகுவான நிபந்தனைகளின் கீழ் காணிகளின் உறுதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

அனுமதிக்காக அரச நிறுவனம் ஒன்றுக்கு முன் வைக்கப்படும் வேண்டுகோளுக்கு 14 நாட்களுக்குள் பதிலளிக்க அவசியமான பின்புலத்தை அரச பொறிமுறையினுள் உருவாக்க வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரனசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர மற்றும் அமைச்சு, இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

(English) Recent News

Most popular