Presidential Secretariat of Sri Lanka

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில்

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “நாட்டுக்காக வேலை” கலாசாரத்தை உருவாக்குவதற்காக 60,000 பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ளும் வகையில் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு அடையாள ரீதியாக நியமனங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

25 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எளிமையான இந்நிகழ்வு இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

50,000 பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரி இருந்தாலும் ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் கீழ் 60,000 பேரை இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. இன்று அரச சேவையில் உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளின் எண்ணிக்கை 50,177 ஆகும். அதில் 38,760 பேர் பெண்களாவர். தொழில்களை பெற்றுக்கொண்டவர்களில் கலை பட்டதாரிகளின் எண்ணிக்கை 31,172 ஆகும். பட்டதாரிகளை வகைப்படுத்தினால் உள்வாரி பட்டதாரிகள் 29,156 பேரும் வெளிவாரிப் பட்டதாரிகள் 20,322 பேரும் தேரர்கள் 1000 பேரும் இந்நியமனங்களை பெற்றுக்கொண்டனர்.

ஏனைய பட்டதாரிகளில் வனிகத்துறை 1839, முகாமைத்துவம் 7278, விஞ்ஞானம் 4494, சுதேச வைத்தியத்துறை 143, இணை சுகாதாரம் 161, கணனி தொழிநுட்பம் 989, பொறியியலாளர் மற்றும் சட்டம் 233 பேர் உள்ளிட்ட கணக்காய்வு டிப்ளோமாதாரிகள் 1906 பேரும் அடங்குவர்.

நியமனங்களை பெற்றுக்கொண்டவர்கள் தலைமைத்துவம், திறன் மற்றும் எண்ணக்கரு அபிவிருத்தி பயிற்சிகளுக்கு உள்வாங்கப்படுவர்.

ஒரு வருட கால பயிற்சி நிறைவின் பின்னர் கிராமிய மற்றும் தோட்டப் பாடசாலைகள், விவசாய சேவை மத்திய நிலையங்கள், பிரதேச நீர்ப்பாசன அலுவலகங்கள், வனஜீவராசிகள் அலுவலகம், சுதேச ஆயுர்வேத வைத்தியசாலைகள், கிராமிய வைத்தியசாலைகள், மருந்தகங்கள், சிறு ஏற்றுமதி பயிர்ச் செய்கை அலுவலகம் போன்ற கிராமிய பிரிவுடன் நேரடியாக தொடர்புள்ள நிறுவனங்களுக்கு இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அபிவிருத்தி செயற்பாட்டுக்கு செயற்திறனுடன் பங்களிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் நியமனம் பெற்றவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அரச சேவைக்கு வருமானம் ஈட்டித் தரக்கூடிய விவசாயம், மீன்பிடி போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு சுமையாகாமல் தாம் பெற்றுக்கொள்ளும் ஊதியத்திற்கு நியாயமாக நடந்துகொள்ளுமாறு அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமது தொழிலில் முன்னோக்கி பயணிக்கக்கூடிய வகையில் பட்டப்பின்படிப்பு, கணனிப் பயிற்சி மற்றும் குறித்த துறைசார் ஏனைய தொழில் வாய்ப்புக்களை மேம்படுத்துவது நியமனம் பெற்றவர்களின் பொறுப்பாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்தன, ஜனக்க பண்டார தென்னகோன், கெஹெலிய ரம்புக்வெல்ல, டலஸ் அலகப்பெரும, நாமல் ராஜபக்ஷ மற்றும் பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அவர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சிலரும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(English) Recent News