Presidential Secretariat of Sri Lanka

கொவிட் – 19, மத்திய சுகாதார சேவை கட்டமைப்பின் அவசியத்தை பறை சாற்றியது

ஜனாதிபதி இளம் வைத்தியர்களின் முன் தெரிவிப்பு.

  • தனது பதவிக்காலத்திற்குள் ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்குவதாக உறுதி…
  • கிராமிய மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்குவதற்கு புதிய உத்திகள்…
  • மக்களுக்கு அபிவிருத்தியே அவசியமானது. நியாயத்திற்கான காரணங்கள் அல்ல…
  • கொவிட் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பு…

கொவிட் – 19 நோய்த் தொற்று எமக்கு கற்றுத் தருகின்ற ஒரு பாடமாக மத்திய சுகாதார சேவை கட்டமைப்பு ஒன்றை நடைமுறைப்படுத்தி வருவதன் தீர்மானமிக்க முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். இலங்கையில் பல்வேறு வைத்தியசாலைகள் மாகாண சபையினால் நிர்வகிக்கப்பட்டு வந்தாலும் சுகாதார பிரச்சினைகளின் போது பயன்படுத்தக்கூடிய வகையில் நாடு பூராவும் பல்வேறு வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

சுகாதார சேவை முழுமையாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்தால் கொவிட் -19 நோய்த் தொற்றுக்கு இலங்கை முகங்கொடுக்கும் போது அதன் செயற்திறன் இதற்கு மாற்றமாக அமைந்திருக்கலாம் என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஒரு சில நடவடிக்கைகளுக்காக மத்திய அரசுடன் இணைந்து பொறுப்பை செயற்படுத்தும் முக்கியத்துவம் எமது அண்மைய கால அனுபவங்களின் மூலம் உறுதி செய்யப்படுவதோடு, கல்வி இதுபோன்ற இனங்காணக்கூடிய இன்னுமொரு துறையாகும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

களனி பொல்லேகல, மானெல்வத்த நாகானந்த சர்வதேச பௌத்த கல்வி நிலையத்தில் இன்று (05) “சிறந்த உள்வாரி வதிவிடவாளர்” பயிற்சி பட்டறையில் ஆரம்ப உரை நிகழ்த்தும்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இக்கருத்துக்களை தெரிவித்தார்.

அரச அதிகாரிகளின் சங்கத்தினால் ஏற்பாடு செய்திருந்த இப்பயிற்சி நெறிக்கு வதிவிட பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த புதிய இளம் வைத்தியர்கள் 680 பேர் கலந்துகொண்டனர். இன்று ஆரம்பிக்கப்பட்டது இவ்வாறன நிகழ்ச்சித்தொடரின் 08வது நிகழ்ச்சியாகும். இங்கு நூற்றுக்கும் அதிகமான பேராசிரியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் அவர்களுக்கு பயிற்சியளிப்பர்.

ஜனாதிபதி அவர்கள் தனது உரையின் ஆரம்பத்தில் கொவிட் – 19 நோய்த் தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதற்கு இலங்கைக்கு முடியுமாக இருந்தமைக்கான காரணம் அரசாங்கத்தின் பல்வேறு பிரிவினர் மேற்கொண்ட தீர்மானமிக்க மற்றும் உடனடி நடவடிக்கைகளோடு எமது சுகாதார சேவையாளர்களின் உன்னத அர்ப்பணிப்பும் ஆகுமென்று குறிப்பிட்டார். இம்முயற்சிக்கு பங்களித்த அனைத்து சுகாதார சேவையாளர்களுக்கும் அவர் தனது நன்றிகளையும் பாராட்டையும் தெரிவித்தார்.

“உலகின் பல்வேறு அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கும் கூட வெற்றிகரமாக நோய்த் தொற்றுக்கு போதுமான நடவடிக்கைகளை எடுக்க முடியாது போயுள்ளது. தாமதித்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் பொது சுகாதார பாதுகாப்பு கட்டமைப்பின்மை இதற்கான காரணமாகும். முன் தயார் இல்லாமை, போதுமானளவு பரிசோதனைகள் செய்யாமை இதனை மேலும் அதிகப்படுத்தியது. இதன் பிரதிபலனாக தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் மரணித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. கொவிட் தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என்று சந்தேகித்த எந்தவொரு நோயாளியையும் நாம் திருப்பி அனுப்பவில்லை. உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள், பல்வேறு நாடுகள் நாம் அடைந்த வெற்றியை பாராட்டுகின்றன. அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடாக இருந்தாலும் இலங்கை இவ்வாறான வெற்றியை அடைந்துகொள்வதற்கு எமது இலவச சுகாதார கட்டமைப்பே காரணமாக அமைந்தது என்பதை மிகப் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்” என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

கொவிட் – 19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தியதன் மூலம் இலங்கையின் பொது சுகாதார சேவை கட்டமைப்பின் பலம் எடுத்துக்காட்டப்படுகின்றது. இவ்வாறான நிலையின்போது எமது நாட்டில் பலர் வெளிவாரியான சுகாதார சேவையை எதிர்பார்க்கும் நோக்கம் என்ன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அரச சுகாதார சேவை கட்டமைப்பை மென்மேலும் பலப்படுத்துவதன் அவசியத்தைப் பற்றி எந்தவொரு சந்தேகமும் இல்லை. அரசாங்கத்தின் நிதியங்கள், பொது சுகாதார சேவையின் அபிவிருத்திக்காக செலவிடப்படுகின்ற புத்தாக்க முன்னெடுப்புக்களுக்கான காலம் தோன்றியுள்ளது. அவ்வாறன செயல்முறைகளின் இறுதி பிரதிபலன் பிரஜைகளுக்கு என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆணையை நினைவூட்டிய ஜனாதிபதி அவர்கள் மக்கள் அபிவிருத்தி தொடர்பாக மிக எதிர்பார்ப்புடன் இருப்பதும் அந்நடவடிக்கைகளுக்கு பல்வேறு நியாயங்களை கூறுவதன் மூலம் விரக்தியடைந்த நிலையில் இருப்பதையுமே தெளிவாகக் காட்டுகின்றதெனக் குறிப்பிட்டார். “அபிவிருத்தியின் அடிப்படைகளில் ஒன்று சுகதேகியான மக்களாகும். உறுதியான பொது சுகாதார இலக்குகளை அடைந்துகொள்வது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். எனது பதவிக்காலத்தினுள் சுகதேகியான மக்களை உருவாக்குவதற்காக நான் உறுதிப்பூண்டுள்ளேன்.” என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

வைத்தியர் ஒருவரை சந்திப்பதற்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ள கிராமிய மக்கள் பற்றி தமது அவதானத்தை செலுத்திய ஜனாதிபதி அவர்கள், இயல்பான, நடைமுறை ரீதியிலான கோணங்களில் நின்று பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முடியுமெனவும் சுட்டிக்காட்டினார். புதிய கருத்தியல்கள் அறிமுகப்படுத்துவதற்கு காலம் எழுந்துள்ளதாகவும் சுகாதார சேவை வசதிகள் போதுமானளவில் இல்லாத கிராமங்களுக்கு சுகாதார சேவைகளை வழங்குவதற்கு பொது சுகாதார தாதியர்மார் பங்களிக்க முடியுமென்றும் குறிப்பிட்டார். கிராமிய மருந்தகங்களை மீண்டும் செயற்படுத்துவது இதற்கான இன்னுமொரு தீர்வாகும்.

“சிறந்த உள்வாரி வதிவிடவாளர்” நிகழ்ச்சிகளில் இணைந்துள்ள இள வயது வைத்திய பட்டதாரிகளுடன் விசேடமாக உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், வைத்தியத்துறையானது ஒருவர் இணையக்கூடிய உன்னதமான தொழில் என்றும் குறிப்பிட்டார்.

“நோயாளர்களின் வாழ்க்கை தொடர்பாக வைத்தியருக்கு பாரிய பொறுப்புள்ளதாகவும் ஒரு நபரின் வாழ்க்கை அல்லது மரணம் என்ற தீர்மானத்தை எடுப்பது உங்களின் முடிவுகளின் பிரகாரமே ஆகுமென்றும் குறிப்பிட்டார். அதனால் உங்களின் பொறுப்பை சிறியதாக மதிக்க முடியாது” என்று ஜனாதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

தனது உரையை நிறைவு செய்யும்போது “ஆரோக்கியா பரமா லாபா” என்ற பௌத்த வசனத்தை நினைவூட்டிய ஜனாதிபதி அவர்கள், சுகாதார சேவையின் உயர் தரத்தை பேணுவதன் மூலம் சகோதர மக்களின் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு புதிய இளம் வைத்தியர்களிடம் கேட்டுக்கொண்டார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க மற்றும் சுகாதார அதிகாரிகள், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் அனுருத்த பாதினிய உள்ளிட்ட சங்கத்தின் அங்கத்தவர்கள் மற்றும் சுகாதார ஆய்வுகள் மற்றும் புத்தாக்க சங்கத்தின் அதிகாரிகள் ஆகியோருடன் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பயிற்சி பட்டறையில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நாகானந்த சர்வதேச பௌத்த கல்வி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் களனி மானெல்வத்த விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய போதாகம சந்திம தேரரரை சந்தித்த சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

தேரர் ஜனாதிபதி அவர்களுக்கு அனுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மகா போதியின் மாதிரி ஒன்றையும் கையளித்தார்.

ஜனாதிபதி அவர்கள் மானெல்வத்த விகாரையின் பௌத்த ஷ்ராவிக்கா கல்வி நிலையத்தின் பிக்குனியையும் கல்வி நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் தர்மசக்கர சிறுவர் அமைப்பின் சிறுவர்களுடன் கூட்டு புகைப்படத்திலும் தோற்றினார்.

“2020 சிறந்த உள்வாரி வதிவிட பயிற்சி நெறி” “Good Intern Programme 2020” நிகழ்ச்சியில் ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து சுகாதார ஆய்வுகள் மற்றும் புத்தாக்க சங்கம் நடத்துகின்ற “2020 சிறந்த உள்வாரி விதிவிடர் நிகழ்ச்சித்திட்டம்” பயிற்சி பட்டறையில் இன்று உங்கள் முன் உரையாற்ற கிடைத்தமையை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

எமது சமுதாயத்தில் வைத்தியர்கள் மற்றும் சுகாதார சேவையாளர்களின் முக்கியத்துவம் தற்போது உலகம் பூராகவும் பரவி வருகின்ற கொவிட் –19 தொற்று நோயின் காரணமாக பரந்தளவு அவதானத்திற்குட்பட்டுள்ளது.

இலங்கை இந்நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டிருப்பது மிக முக்கியமாக அரசாங்கம் பல்வேறு பிரிவுகளில் மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும் உடனடி நடவடிக்கைகள் உள்ளிட்ட எமது சுகாதார தொழில் வல்லுனர்களின் உண்மையான அர்ப்பணிப்பின் காரணமாகவேயாகும்.

எமது வைத்தியசாலைகள், இரசாயன கூடங்கள், தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் சமூகமட்டத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள், தாதிகள் பொதுசுகாதார பரிசோதகர்கள், தொழிநுட்பவியலாளர்கள் மற்றும் மேலும் பல்வேறு வகையில் சேவையில் ஈடுபட்டவர்கள் எமது இராணுவத்தின் செயற்திறனான பங்களிப்புடன் இவ் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

எனது உரையில் ஆரம்பத்திலேயே கொவிட் -19 நோய்த் தொற்றை இலங்கையில் கட்டுப்படுத்துவதற்காக பங்களித்த அனைத்து சுகாதார சேவையாளர்கள் மற்றும் ஏனையவர்களை பாராட்டுவதற்கும் நன்றி தெரிவிப்பதற்கும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்கின்றேன்.

இம்முயற்சியில் இலங்கை குறிப்பிடத்தக்களவு வெற்றியை அடைந்துகொண்டமை உலகில் பல்வேறு அபிவிருத்தியடைந்த நாடுகளும்கூட நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடியாத சந்தர்ப்பத்திலேயாகும்.

அந்நாடுகள் தாமதித்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் தொடக்கம் சிறந்த சுகாதார பாதுகாப்பின்மை, அந்நாடுகளில் சுகாதார சேவை நிறுவனங்கள் முன்னரே தயார் நிலையில் இருக்காமை, போதுமானளவு பரிசோதனைகள் செய்யாமை, நிர்வாகத்துறை கட்டமைப்பு போதியளவில் காணப்படாமை வரை பல்வேறு காரணங்களினால் வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு அதிகளவிலான அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு முடியாதுள்ளது.

பல்வேறு நாடுகளில் வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளை வைத்தியசாலைகளில் பொறுப்பேற்காமல் நோயாளிகள் தம்மை தாமே கவனித்துகொள்ள வேண்டிய நிலை தோன்றியது. சிலபோது போதுமானளவு சிகிச்சைகள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக சமூக மட்டத்தில் நோய் மிக வேகமாக பரவியதுடன், இறுதியில் இந்நாடுகளில் தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் மரணித்தவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையினால் கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்ட அந்நாட்டினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு, எமது இலவச சுகாதார கட்டமைப்பின் காரணமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடாக இருந்தாலும் இலங்கை இப்பிரச்சினைக்கு மிகவும் சிறந்த வழிமுறையினூடாக முகங்கொடுத்தாக மிகவும் பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கொவிட் -19 தொற்று உள்ளாகி இருக்கலாம் என்று சந்தேகித்த எந்தவொரு நோயாளியும் எமது சுகாதார சேவையினால் திருப்பி அனுப்பப்படவில்லை.

அனைத்து நோயாளர்களுக்கும் அரசாங்கத்தினால் எமது அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்கப்படுவதோடு, நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் 3110 பேரில் இதுவரை 2088 பேர் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 12 மரணங்களே நிகழ்ந்துள்ளது.

குறுகிய காலத்திற்குள் எம்மால் ஸ்தாபிக்க முடியுமாக இருந்த பலமான பரிசோதனை பொறிமுறை சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறிகள் உள்ள நோயாளர்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து உறுதி செய்ததன் மூலம் இம்முயற்சிக்கு பங்களித்தனர். வைரஸ் மிக வேகமாக பரவி வருகின்ற நாடுகளிலிருந்தும் நாம் எமது 1000த்திற்கும் மேற்பட்ட பிரஜைகளை திருப்பி அழைத்து வந்தோம்.

அவ்வாறு திரும்பி வருபவர்கள் நாடு பூராகவும் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்வாங்கப்படுவதுடன். அவர்களை எமது இராணுவத்தினர் மிகச் சிறப்பாக கவனித்து பாதுகாத்து வந்தனர். இந்நிலையங்கள் முழுமையாக அரசாங்கத்தின் மூலமே நிர்வகிக்கப்படுகின்றது. இவை அனைத்தையும் எவ்வாறு நோக்கினாலும் குறிப்பிடத்தக்களவு பாரிய வெற்றியாகும்.

கொவிட் – 19 நோய்த் தொற்றினை கட்டுப்படுத்துவதில் இலங்கை பெற்ற வெற்றி உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள், பல்வேறு நாடுகள் உள்ளிட்ட தனிப்பட்ட பலரும் பாராட்டியிருப்பது இவ்வெற்றியின் காரணமாகவேயாகும்.

கொவிட் – 19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தியதன் மூலம் இலங்கையின் பொது சுகாதார சேவை கட்டமைப்பின் பலம் எடுத்துக்காட்டுகின்றது. இவ்வாறான நிலையின்போது எமது நாட்டில் பலர் வெளிவாரியான சுகாதார சேவையை எதிர்பார்க்கும் நோக்கம் என்ன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி நிதியம் மற்றும் அரசாங்கத்தின் ஏனைய நலன்புரி சேவைகளின் மூலம் வழங்கப்படுகின்ற நிதியுதவிகளையும் கூட தனியார் வைத்தியசாலைகளில் தங்கி நின்று சிகிச்சை பெறுவதற்கு பயன்படுத்துகின்றனர்.

அரச சுகாதார சேவை கட்டமைப்பை மென்மேலும் பலப்படுத்தும் அவசியம் எப்போதும் இருப்பதுடன், இப்பொறிமுறையினுள் எமக்குள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவது காலத்தின் தேவையென நான் நினைக்கின்றேன். அரசாங்கத்தின் இவ்வாறான நிதியங்களின் மூலம் வழங்குகின்ற நிதிகள் பொது சுகாதார சேவை கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட வேண்டுமென்ற சிந்தனை இறுதியில் இந்நாட்டு பிரஜைகளுக்கே பயனுள்ளதாக அமையும்.

கொவிட் – 19 நோய்த் தொற்று எமக்கு கற்றுத் தருகின்ற இன்னுமொரு பாடமாக அமைவது மத்திய சுகாதார சேவை கட்டமைப்பொன்றை நடைமுறைப்படுத்தி வருவதன் முக்கியத்துவத்தை ஆகும். இலங்கையில் பல்வேறு வைத்தியசாலைகள் மாகாண சபையினால் நிர்வகிக்கப்பட்டு வந்தாலும் அதிர்ஷ்டவசமாக நோய்த் தொற்றின் உச்ச சந்தர்ப்பத்தில் சிக்கல் எதுவும் இன்றி பயன்படுத்தக்கூடிய வகையில் நாடு பூராவும் பல்வேறு வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

சுகாதார சேவை முழுமையாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்தால் நோய்த் தொற்றுக்கு இலங்கை முகங்கொடுக்கும் பொது அதன் செயற்திறன் இதற்கு மாற்றமாக அமைந்திருக்கலாம்.

ஒரு சில நடவடிக்கைகளுக்காக மத்திய அரசுடன் இணைந்து பொறுப்பை செயற்படுத்தும் முக்கியத்துவம் எமது அண்மைய கால அனுபவங்கள் உறுதி செய்கின்றது. கல்வி இதுபோன்ற விவரிக்கப்படக்கூடிய இன்னுமொரு பொது மக்களின் வாழ்க்கையின் மிக முக்கிய அம்சமாகும்.

நாம் முகங்கொடுக்கும் சவால்கள் மற்றும் சந்தர்ப்பங்களை உண்மையாக புரிந்துகொள்ளல் மற்றும் அவற்றுக்கான எமது செயற்பாடுகளை உரிய முறையில் திட்டமிடுவது தேசம் என்ற வகையில் எமக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இற்றைக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆணையின் மூலம் இலங்கை மக்கள் அபிவிருத்தி தொடர்பாக மிக எதிர்பார்ப்புடன் இருப்பதும் அந்நடவடிக்கைகளுக்கு பல்வேறு நியாயங்களை கூறுவதன் மூலம் விரக்தியடைந்த நிலையில் இருப்பதையுமே தெளிவாகக் காட்டுகின்றது.

அபிவிருத்தியின் அடிப்படைகளில் ஒன்று சுகதேகியான மக்களாகும். உறுதியான பொது சுகாதார இலக்குகளை அடைந்துகொள்வது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். இந்நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் எனது பதவிக்காலத்தினுள் சுக தேகியான மக்களை உருவாக்குவதற்காக நான் உறுதிப்பூண்டுள்ளேன்.

கடந்த சில நாட்களில் நான் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொண்ட விஜயங்களின்போது எமது சகோதர மக்கள் முகங்கொடுத்து வருகின்ற உண்மையான பிரச்சினைகள் தொடர்பான தெளிவுகளை என்னால் பெற முடியுமாக இருந்தது. கீழ் மட்டத்தில் உள்ள பிரதான பிரச்சினை சுத்தமான குடிநீரின் பற்றாக்குறை முதல் உரிய கல்வி மற்றும் சுகாதார சேவைகள் இல்லாமை வரை விரிந்து செல்கின்றது.

தமது பல்வேறு நோய்களுக்காக வைத்தியர் ஒருவரை சந்திப்பதற்கு நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய மக்கள் எமது நாட்டில் பல்வேறு கிராம பிரதேசங்களில் வசிக்கின்றனர். விசேடமாக இலங்கையில் தற்போது பொருளாதார நிலை பற்றி ஆராயும்போது இவர்களின் தேவைகளை போதுமானளவில் நிறைவு செய்து கொடுப்பதற்காக தேவையான வைத்தியசாலைகளை நிர்மாணிப்பதற்கு அல்லது ஏனைய சுகாதார வசதிகளை செய்துகொடுப்பதற்கு உண்மையில் அப்பிரதேசங்களில்  வாழ்கின்ற குறைந்தளவு சனத்தொகை தடையாக உள்ளது. மிகவும் இயல்பான, நடைமுறை ரீதியான மனதுடன் இப்பிரச்சினைகளை பார்க்கும்போது இலகுவான முறையில் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

சர்வதேச ரீதியாக பாராட்டைப்பெற்ற இலங்கை வரலாற்றில் மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகின்ற செயற்திட்டங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுவது பொது குடும்ப சுகாதார சேவை நிகழ்ச்சித்திட்டமாகும்.

இச்சேவையை வழங்குவதற்கு மிகவும் அர்ப்பணிப்புடன் மற்றும் பல்வேறு கஷ்டத்துடன் தொழில்புரிபவர்கள் பல தசாப்தங்களாக நாடு பூராகவும் மகப்பேறு மற்றும் குழந்தை நல சேவை வசதிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

பல்வேறு கிராமிய சூழலில் வீடுகள் தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதார நலன்களை கண்காணித்து அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் முதன்மையான சுகாதார சேவை வழங்குனர்களாக அவர்களே இருக்கின்றனர்.

அதுபோன்று தற்போது எமக்கு புதிய கருத்தியல் ஒன்றை அறிமுகப்படுத்தும் காலம் தோன்றியுள்ளது. சுகாதார வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாத மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வசிக்கின்ற மக்களுக்கு அவசியமான முதன்மையான சுகாதார வசதிகளை வழங்குவது பொது சுகாதார தாதிமார்களாலேயே முடியும். போதுமான பயிற்சிகள், தகுதிகள் உள்ள தாதிகளுக்கு சிறியளவிலான நோய்களை இனங் காண்பதற்காக மக்களுக்கு உதவிகளை செய்ய முடிவதோடு, வைத்திய ஆலோசனை தேவைப்படும் பட்சத்தில் அவற்றுக்காக அவர்களை அனுப்பி வைக்கவும் அவர்களுக்கு முடியும்.

அதுபோன்று தேவைக்கேற்ப நோயாளிகளை பிரதேசத்தில் உள்ள வைத்தியர்களிடம் அனுப்பி வைக்கவும் முடியும். இதுபோன்றதொரு ஆரம்பத்தின் மூலம் கிராமிய மட்டத்தில் வசிக்கின்ற மக்களுக்கு சுகாதர வசதிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்களை அதிகப்படுத்துவதோடு, அதன் மூலம் தேசிய ரீதியாக மிகவும் சிறந்த சுகாதார சேவையை முன்னெடுப்பதற்கு வழியேற்படும்.

இச்செயற்பாடுகளுடன் இணைந்த வகையில் பல்வேறு கிராமிய மருந்தகங்களை மீண்டும் செயற்படுத்துவதன் மூலம் மக்களின் சுகாதார பிரச்சினைகளுக்காக அடிப்படையான மற்றும் இலகுவான தீர்வுகளை வழங்க முடியும். இவ்வாறான மக்களுக்கு சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் சுகதேகியான பிரஜைகளை உருவாக்குவதற்கு பாரியளவில் பங்களிப்புகளை வழங்க முடியும்.

எமது பல்கலைக்கழகங்களில் இருந்து அண்மையில் வெளியாகிய வைத்திய பட்டதாரிகளான வைத்திய உள்வாரி வதிவிட பயிற்சிக்கு தகுதி பெற்ற “சிறந்த உள்வாரி வதிவிடவாளர்” பயிற்சி பட்டறைக்கு வருகை தந்துள்ள இளைஞர்களான உங்களுடன் உரையாடுவதற்கு நான் விசேடமாக விருப்பத்துடன் இருக்கின்றேன்.

வைத்தியத்துறை என்பது ஒருவர் இணையக்கூடிய மிகவும் புனிதமான தொழில்களில் ஒன்றாகும்.  நீங்கள் இள வயது வைத்தியர்களானாலும் ஏனையவர்களின் வாழ்க்கையின் பொறுப்பு உங்கள் கைவசம் உள்ளது. சிலபோது நோயாளியின் நோய் நிலை பற்றி நீங்கள் எடுக்கின்ற தீர்மானம் அந்நபரின் வாழ்வு பற்றி தீர்மானிக்கும் முடிவாகவும் அமையலாம்.

நீங்கள் வழங்கும் தீர்மானம் ஒரு நபரின் வாழ்க்கை அல்லது மரணம் என்ற இரு நிலைகளில் ஒன்றை தீர்மானிக்கும் உண்மையாக இது இலகுவான ஒரு பொறுப்பல்ல. எம்பிபிஎஸ் வைத்தியராவதற்கு முதல் நீங்கள் பல வருடங்கள் பெறுகின்ற கல்வி மற்றும் பயிற்சிகள் உங்களது தொழில் எவ்வளவு தூரம் பொறுப்பு வாய்ந்தது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. சமூகத்தில் சுகாதார சேவை வழங்குனர் என்பது மிகப்பெறும் கௌரவத்திற்குரிய ஒன்றாகும்.

இச்சூழ்நிலையில் மிகவும் சிறந்த வைத்திய கொள்கை மற்றும் அவர்களினால் சமுதாயத்திற்கு உள்ள பாரிய பொறுப்பு பற்றி இள வயது வைத்தியர்களின் அறிவுத் திறனை மேம்படுத்துவதற்கும் சிறந்த சுகாதார சேவையை வழங்குவதனை நோக்கமாகக்கொண்டும் நடைபெறுகின்ற “சிறந்த உள்வாரி வதிவிடவாளர்” நிகழ்ச்சித்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

“ஆரோக்கியமே உண்யைான நன்மை” – “ஆரோக்கியா பரமா லாபா”  நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்று அர்த்தப்படுத்துகின்ற வகையில் அமைந்த புத்த பெருமானின் போதனையே இதுவாகும். உயர் சுகாதார சேவையை உறுதி செய்வதற்கு உங்களின் அர்ப்பணிப்பின் மூலம் சகோதர மக்களின் உயர் வாழ்வுக்கு உங்களின் பங்களிப்பை வழங்க முடியும்.

இறுதியாக உங்களின் எதிர்காலம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் அமைவதற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, சிறந்த இளைஞர் சுகாதார சேவை வழங்குனர்களாக உங்களால் இயன்றளவு எமது நாட்டுக்கு சேவை புரிவீர்கள் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

(English) Recent News

Most popular