Presidential Secretariat of Sri Lanka

ஜனாதிபதி அவர்களின் உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

எமது சிறுவர்கள் எமது தேசத்தின் எதிர்காலச் சொத்துக்கள். அவர்களை அறிவு ரீதியாக வளப்படுத்தி திறன் விருத்திக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பது முழு சமூகத்தினதும் பொறுப்பாகும். பிள்ளைகளின் உள, உடல், ஆரோக்கியத்தை வளப்படுத்துவதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை போன்றே அவர்கள் நற்பண்புள்ளவர்களாக வளர்வதற்கான சூழலை உறுதிப்படுத்துவதும் அவசியமாகும்.

ஒரு நாடு தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் எவ்வளவு உயர்ந்த அபிவிருத்திப் படிநிலைகளை அடைந்து கொண்டாலும், சமூகம் அன்பு, அறம் போன்ற அடிப்படை மானிடப் பண்புகளைப் பெற்றிருக்கவில்லை என்றால் அதனை ஒரு சிறந்த தேசமாக கருத முடியாது என நான் நம்புகிறேன். ஒரு சிறந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் எமது சிறுவர் தலைமுறையை சிறந்த ஒழுக்கப் பெறுமானங்களுடன் தொழிநுட்ப திறன்கள் மற்றும் மொழி அறிவைப் பெற்றவர்களாக வளப்படுத்த வேண்டும்.

உள, உடல். பலவீனங்களிலிருந்து விடுபட்ட பிரஜைகளைக் கொண்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதுவே எனது ஒரே எதிர்பார்ப்பாகும். அத்தகையதொரு நாட்டிலேயே சிறுவர்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மனநிறைவாகவும் வாழ்வதற்கான உறுதியான உத்தரவாதம் இருக்கும். இத்தகையதொரு தேசத்தின் நன்மைகளை அனுபவித்து மகிழும் ஒரு தலைமுறையை கட்டியெழுப்புவதற்கு உங்களது பிள்ளைகளின் சிறு பராயத்தை நீங்கள் மிகுந்த பொறுப்புடன் நெறிப்படுத்துவீர்களென நான் எண்ணுகின்றேன். அப்போதுதான் ‘எமது தேசத்தை நாமே கட்டியெழுப்புவோம்’ என்ற இவ்வருட உலக சிறுவர் தின கருப்பொருளை யதார்த்தமாக்க முடியும்.

(English) Recent News

Most popular