Presidential Secretariat of Sri Lanka

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் பேண்தகு முகாமைத்துவத்திற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளோம் – ஐ நா உயிர் பல்வகைத்தன்மை மாநாட்டில் ஐனாதிபதி தெரிவிப்பு

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் பேண்தகு முகாமைத்துவத்திற்கும் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்  ஐ நா உயிர் பல்வகைத்தன்மை மாநாட்டில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

இலங்கை மத்திய மலை நாடு, சிங்கராஜ மழைக் காடுகள் ஆகிய இரண்டு யுனெஸ்கோ இயற்கை மரபுரிமைகளின் தாயகமாக திகழ்கிறது. மேலும் எமது ஆறு இடங்கள் ஈர நிலம் பற்றிய ரம்சார் ஒப்பந்தத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எமது தனித்துவமான வளம் நிறைந்த உயிர் பல்வகைத்தன்மைக்கு பங்களிப்பு செய்யும் இந்த இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கும் நிலையாக அதனை முகாமைத்துவம் செய்வதற்கும் இலங்கை மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது பொதுச் சபை கூட்டத்தொடருடன் இணைந்ததாக நிவ்யோர்க்கில் உள்ள ஐ நா தலைமையகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட ஐ நா உயிர் பல்வகைத்தன்மை தொடர்பான அரச தலைவர்கள் மாநாட்டில் கணொலி தொழிநுட்பத்தின் ஊடாக இலங்கை நேரப்படி நேற்று (30) இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதி அவர்கள் உரையாற்றினார்.

‘பேண்தகு அபிவிருத்திக்கு உயிர் பல்வகைத்தன்மை தொடர்பில் துரித செயற்பாடு’ என்பது இவ்வருட மாநாட்டின் கருப்பொருளாகும். பொதுச் சபை கூட்டத் தொடரின் தலைவர் திரு. வோல்கன் பொஸ்கீர் ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.

2030ஆம் ஆண்டு பேண்தகு அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் சாரமாக இருக்க வேண்டியது உயிர் பல்வகைத்தன்மை பற்றிய எண்ணக்கருவாகும் என  ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். அண்மைய சில தசாப்தங்களாக பூகோள உயிர் பல்வகைத்தன்மைக்கு ஏற்பட்ட பல அழிவுகளுக்கு மத்தியிலும் உயிர் பல்வகைத்தன்மை பற்றிய ஒப்பந்தத்தில் விவரிக்கப்பட்டுள்ள உயிர்ப் பண்புகளை பாதுகாப்பதற்கு இலங்கை மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இயற்கைக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவுக்கும் தற்கால பூகோள சூழல் முகாமைத்துவத்திற்கும் இடையே ஒரு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தீர்க்கமான தேவை ஏற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் இலங்கை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் “நீல சாசனத்தை” (Blue Charter) 2018 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டதுடன், அதற்கேற்ப கண்டல் தாவர சுற்றாடல் முறைமை மற்றும் வாழ்வாதாரம் குறித்த பொதுநலவாய நாடுகள் அமைப்பின் “நீல சாசனத்தின்” செயற்குழுவிற்கு தலைமைத்துவத்தை வழங்குகின்றது. மேலும் பேண்தகு நைட்ரஜன் வாயு முகாமைத்துவம் தொடர்பான கொழும்பு பிரகடனம் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்டது. உலக தலைவர்கள் என்ற வகையில் மனித இனத்தின் நிலைத்த தன்மையை உறுதி செய்து மிகச் சிறந்த முறையில் நாம் நைட்ரஜன் வாயுவை முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஆட்சியாளர் ஒருபோதும் நாட்டின் உரிமையாளராகவன்றி தனது நாட்டு மக்களினதும் அனைத்து உயிரினங்களினதும் சார்பாக அதன் பொறுப்பாளர் மட்டுமே என்ற எண்ணக்கருவின் அடிப்படையிலேயே இலங்கையில் பண்டைய ஆட்சி முறைமை கட்டியெழுப்பப்பட்டிருந்தது. எமது அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் எனது அரசாங்கம் பின்பற்றும் கொள்கை இதுவாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். இந்த பிரபஞ்சத்தினதும் அதன் வளங்களினதும் பொறுப்பாளர்கள் என்ற வகையில் எம்மால் முடியமானளவு எமது பாதுகாப்பின் கீழ் உள்ளவற்றை பாதுகாத்து எதிர்கால தலைமுறைக்கு கையளிப்பதற்கு நாம் உறுதிகொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

———————————————————

ஐக்கிய நாடுகள் சபையின் உயிர் பல்வகைத் தன்மை பற்றிய

அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி

மேன்மைதங்கிய கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்

ஆற்றிய முழுமையான உரை – 30.09.2020

கௌரவ தலைவர் அவர்களே,

கௌரவ செயலாளர் நாயகம் அவர்களே,

மேதகையீர்களே,

கௌரவ பிரதிநிதிகளே,

வணக்கம்,

உயிர் பல்வகைத்தன்மை பற்றிய அரச தலைவர்கள் மாநாட்டில் இலங்கை மக்களை பிரதிநிதித்துவம் செய்ய கிடைத்ததை பெரும் கௌரவமாக கருதுகின்றேன்.

2030ஆம் ஆண்டு பேண்தகு அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் சாரமாக இருக்க வேண்டியது உயிர் பல்வகைத்தன்மை பற்றிய எண்ணக்கருவாகும். அண்மைய சில தசாப்தங்களாக பூகோள உயிர் பல்வகைத்தன்மைக்கு ஏற்பட்ட பல அழிவுகளுக்கு மத்தியிலும் உயிர் பல்வகைத்தன்மை பற்றிய ஒப்பந்தத்தில் விவரிக்கப்பட்டுள்ள உயிர்ப் பண்புகளை பாதுகாப்பதற்கு இலங்கை மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளது.

இயற்கைக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவுக்கும் தற்கால பூகோள சூழல் முகாமைத்துவத்திற்கும் இடையே ஒரு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தீர்க்கமான தேவை ஏற்பட்டுள்ளது.

மேதகையீர்களே, கௌரவ பிரதிநிதிகளே,

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் இலங்கை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் “நீல சாசனத்தை” (Blue Charter) 2018 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டதுடன், அதற்கேற்ப கண்டல் தாவர சுற்றாடல் முறைமை மற்றும் வாழ்வாதாரம் குறித்த பொதுநலவாய நாடுகள் அமைப்பின் “நீல சாசனத்தின்” செயற்குழுவிற்கு தலைமைத்துவத்தை வழங்குகின்றது.

மேலும் பேண்தகு நைட்ரஜன் வாயு முகாமைத்துவம் தொடர்பான கொழும்பு பிரகடனம் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்டது. உலக தலைவர்கள் என்ற வகையில் மனித இனத்தின் நிலைத்த தன்மையை உறுதி செய்து மிகச் சிறந்த முறையில் நாம் நைட்ரஜன் வாயுவை முகாமைத்துவம் செய்ய வேண்டும்.

இலங்கை மத்திய மலை நாடு, சிங்கராஜ மழைக் காடுகள் ஆகிய இரண்டு யுனெஸ்கோ இயற்கை மரபுரிமைகளின் தாயகமாக திகழ்கிறது. மேலும் எமது ஆறு இடங்கள் ஈர நிலம் பற்றிய ரம்சார் ஒப்பந்தத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

எமது தனித்துவமான வளம் நிறைந்த உயிர் பல்வகைத்தன்மைக்கு பங்களிப்பு செய்யும் இந்த இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கும் நிலையாக அதனை முகாமைத்துவம் செய்வதற்கும் இலங்கை மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளது.

நகரங்கள் மற்றும் நகர் பிரதேசங்களை புனர்நிர்மாணம் செய்யும்போதுகூட முடியுமானளவு சுற்றாடல் முறைமையை பாதுகாப்பது குறித்து நாம் விழிப்பாக இருக்கிறோம். நகரங்களுக்கு மத்தியில் சிறிய மழைக்காடு அனுபவங்களை ஏற்படுத்தி நகரங்களில் குறிப்பாக எமது தலைநகரான ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை அதன் சுற்றுச் சூழலில் நாம் உருவாக்கியுள்ள ஈர நில பூங்கா பல்வேறு மூலிகை தாவரங்கள், விசேட உயிரினங்கள் பலவற்றின் தாயகமாக உள்ளது.

ஆட்சியாளர் ஒருபோதும் நாட்டின் உரிமையாளராகவன்றி தனது நாட்டு மக்களினதும் அனைத்து உயிரினங்களினதும் சார்பாக அதன் பொறுப்பாளர் மட்டுமே என்ற எண்ணக்கருவின் அடிப்படையிலேயே இலங்கையில் பண்டைய ஆட்சி முறைமை கட்டியெழுப்பப்பட்டிருந்தது.

எமது அபிவிருத்தி நிகழ்ச்சிநிரலில் எனது அரசாங்கம் பின்பற்றும் கொள்கை இதுவாகும்.

மேதகையீர்களே, கௌரவ பிரதிநிதிகளே,

இந்த பிரபஞ்சத்தினதும் அதன் வளங்களினதும் பொறுப்பாளர்கள் என்ற வகையில் எம்மால் முடியமானளவு எமது பாதுகாப்பின் கீழ் உள்ளவற்றை பாதுகாத்து எதிர்கால தலைமுறைக்கு கையளிப்பதற்கு நாம் உறுதிகொள்ள வேண்டும்.

நன்றி

(English) Recent News