Presidential Secretariat of Sri Lanka

USAID நிதி உதவிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை…

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்தின் (USAID) நிதி உதவியின் கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்தின் (USAID) இலங்கைக்கான பணிப்பாளர் ரீட் ஜே. ஈஷ்லிமன் (Reed J. Aeschliman) அவர்களுக்கும் இடையில், நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

USAID நிதியுதவியின் மூலம் தற்போது நாட்டில் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சில திட்டங்கள், பல்வேறு காரணங்களுக்காகச் செயலற்றுக் காணப்படுகின்றன. இதற்கு ஏதுவான காரணங்கள் பற்றிக் கண்டறிந்து, அத்திட்டங்களை விரைவாக நிறைவு செய்வதற்கு, இதன்போது இணக்கம் காணப்பட்டது.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்துக்கு ஏற்ப, நாட்டில் ஒரு பாரிய அபிவிருத்திச் செயன்முறை திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, USAID உதவிகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனாகச் செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை, ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.

அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 6 மில்லியன் டொலர்களுக்கும் அதிக பெறுமதியுடைய கொவிட் 19 வைரஸ் தொற்றொழிப்புக்கான மருத்துவ மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றிக்கொண்டு, விசேட விமானமொன்று அண்மையில் இலங்கையை வந்தடைந்தது. மேற்படி உதவிகளுக்காகத் தனது நன்றியைத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், கொவிட் 19 வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் பற்றியும் விளக்கினார்.

அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுக்குழுத் தலைவர் கெலீ மார்ட்டின், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் கிரிஸ்டோபர் பொலி, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல மற்றும் நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் அஜித் அபேசேகர ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

(English) Recent News