Presidential Secretariat of Sri Lanka

நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்காக வங்கி முறையை வலுப்படுத்தும் முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது – மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் பிறந்தநாள் விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக வங்கி முறையை வலுப்படுத்தும் முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

இலங்கையை பிச்சை பெறும் நாடாக மாற்றுவதற்கு தாம் எந்த வகையிலும் தயாரில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, இலங்கையர்களாகிய நாம் சுய முயற்சியில் எழுந்து நிற்க வேண்டும் எனவும், அதற்குத் தேவையான வேலைத்திட்டத்தை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் 86ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (23) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக்கூடிய எண்ணக்கருவை லலித் அத்துலத்முதலி கொண்டிருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் பட்டப்பின்படிப்பை தொடரக் கூடிய வகையில் லலித் அத்துலத்முதலியின் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை இலங்கையில் நிறுவவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது-
மறைந்த லலித் அதுலத்முதலி அவர்கள் ஒரு சிறந்த சட்டத்தரணியும் சிறந்த கலாநிதியும் ஆவார். நான் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட வேளை, அவரை அந்நிகழ்வுக்கு அழைத்திருந்தேன். காமினி திசாநாயக்க அவர்களையும் அந்நிகழ்வுக்காக அழைத்திருந்தேன். அச்சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஜே.ஆர். ஜயவர்தனவும், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக ஆர்.பிரேமதாசவும் இருந்தனர்.

இவர்களுக்கிடையிலான செயற்பாடுகளுக்கும் நாட்டினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் தலையெழுத்துக்களுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

லலித், காமினி மற்றும் நான், ஐ.தே.க நவீனமயமாவதைக் காண ஆவலாக இருந்தோம். எனது குடும்பம் ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே கட்சியில் இருந்து வருகின்றது.
ஆனால் ஒரு நவீன ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில், சமூக ஜனநாயகத்திற்கு அடித்தளமிட்ட டட்லி சேனாநாயக்க மற்றும் ஜே.ஆர்.ஜயவர்தன ஆகியோர் இணைந்து தயாரித்த 1963 ஐ.தே.க மாநாட்டின் களுத்துறை விஞ்ஞாபனத்தின் வரைவு என்னைக் கவர்ந்தது.

டி.எஸ்.சேனநாயக்காவின் காலத்திலிருந்தே, ஒரு கட்சி என்ற வகையில் நாங்கள் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கான அபிலாஷையைக் கொண்டிருந்தோம். பசியை ஒழிக்கவும், கல்வியறிவின்மையை ஒழிக்கவும், ஆரோக்கியமான மக்களை உருவாக்கவும் நாங்கள் விரும்பினோம்.

நானும் லலித்தும் ஒரே நேரத்தில் செயற்குழுவில் இணைந்தோம். எனவே, நாங்கள் அடிக்கடி பிரசாரங்களில் ஒன்றாக கலந்துகொண்டோம். 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சி மாநாட்டில், எதிர்க்கட்சித் தலைவரும், ஐ.தே.க.வின் தலைவருமான ஜயவர்தன, முழு சமூக ஜனநாயகத்தையும் மீண்டும் மிக வலுவாக ஆரம்பித்தார்.

லலித், காமினி ஆகியோரிடம் இதைப் பற்றி கலந்துரையாடும் போது நான் நிறைய ஆய்வுகளைச் செய்தேன் என்பதையும் குறிப்பிட வேண்டும். நான் லிபரல் சமூகம் அல்லது லிபரல் நிலையம் என்று அழைக்கப்படும் மற்றொரு கல்வி முகாமைச் சேர்ந்தவன்.

நாட்டின் மிக முக்கிய பகுதியான வர்த்தகம் லலிதிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், கடற்படை விவகாரங்கள் அதில் சேர்க்கப்பட்டன. ஜனாதிபதி மற்றைய பிரதான செயற்திட்டத்தை தன்னிடமே வைத்துக்கொண்டு பெரிய கொழும்பு பொருளாதார வலயத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்தார்.

அதற்காக மகாவலி வேலைத்திட்டம் காமினி திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டது. லலித்தின் கடமை வர்த்தகமாக இருந்தது. அப்படித்தான் ஆரம்பித்தோம்.

அவர் வர்த்தகத்தை திறந்தார். அப்போது நாங்கள் சோசலிச பொருளாதாரமாக இருந்தோம்.

அரசாங்கம் அனைத்தையும் கட்டுப்படுத்தியது. ஜனாதிபதி ஜயவர்த்தன என்ன செய்தார்? கம்பஹா மாவட்டத்தில் ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றார். இது நீர்கொழும்பில் தொடங்கி பியகமவில் முடிவடைகிறது. அங்கு கட்டுநாயக்க மற்றும் பியகம ஆகிய இரண்டு முதலீட்டு வலயங்களிலும் திறந்த சந்தைப் பொருளாதாரத்தின் பொதுவான விதிகள், செயன்முறைகள் மற்றும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டதுடன் நடைமுறையும் செய்யப்பட்டன.

ஆனால் அந்தப் பகுதிகளில் இருந்து மட்டும் ஏற்றுமதி செய்ய முடியாது என்பதை லலித் புரிந்து கொண்டார். நாட்டின் மற்ற பகுதிகளையும் நாங்கள் வைத்திருக்க வேண்டும். எனவே, பொருளாதார வலயத்திற்கு வெளியே ஏற்றுமதியை ஊக்குவிக்க ஏற்றுமதி அபிவிருத்திச் சபையை லலித் ஆரம்பித்தார். போக்குவரத்து மற்றும் துறைமுகங்களின் அவசியம் தொடர்பில் அவர் அடையாளம் காட்டியிருந்தமை மற்றுமொரு முக்கிய அம்சமாகும்.

இலங்கையின் முக்கிய துறைமுகமான கொழும்புத் துறைமுகத்தை அவர் அபிவிருத்தி செய்தார். கொழும்பைச் சுற்றியுள்ள அபிவிருத்தி, இரண்டு பெரிய பகுதிகளாக தொடர்கிறது. ஒருபுறம் வர்த்தக மையமாகவும் மறுபுறம் கொழும்புடன் இணைந்த துறைமுகம், பெரிய பொருளாதார வலயமென இந்த அபிவிருத்தி விஸ்தரிக்கப்பட்டதுடன் அவை பின்னர் கிராமப்புறங்களையும் சென்றடைந்தது.

நான் கல்வி அமைச்சராகப் பணியாற்றிய போதுதான் பல்கலைக்கழகம் செல்ல விரும்புவோருக்கு புலமைப்பரிசில் திட்டமாக மஹபொல வழங்கும் யோசனையை லலித் கொண்டு வந்தார். அதனால் உங்களுக்கு மஹபொல புலமைப்பரிசில் கிடைத்துள்ளது. நாம் நிறுவனங்களுக்காக அன்றி, இலவசக் கல்விக்காக தனிநபர்களுக்கு நிதியளித்தது இதுவே முதல் முறையாகும்.

துரதிஷ்டவசமாக, எம்மால் அதை முன்னோக்கி கொண்டு செல்ல முடியவில்லை. முழு பொறிமுறையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இன்றைய பாடநெறிகள் தொழில் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

அதற்கு மேலதிகமாக பல்கலைக்கழகங்கள், அவர்களின் வெளிவாரி பாடநெறிகளை நடத்துகிறது. 05 இலட்சம் பேர் மேலதிகமாக உள்ள அரச பணியில், ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக சுமார் 10,000 பேரை பணியமர்த்த வேண்டியுள்ளது.

எவ்வாறேனும், மஹபொல திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இலவசக் கல்வியை மேலும் அர்த்தமுள்ளதாக்கி தொடர்ந்து முன்கொண்டு செல்ல வேண்டும்.

அதன்பிறகு லலித், கமத்தொழில் அமைச்சராக இருந்து விவசாயத்தை நவீனப்படுத்த பல பணிகளைச் செய்தார். விவசாயத் துறையை ஏற்றுமதிக்குத் தயார்படுத்தவும் லலித் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்திக்கு அவர் பெரும் பங்களிப்பை வழங்கினார்.

1991 இல் லலித் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறினார். ஆனால் நான் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தேன். கட்சிதான் முக்கியம், கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று நான் நினைத்தேன். ஒரு மாற்றம் நிகழ வேண்டும், அதற்காக தான் வெளியே செல்ல வேண்டும் என்று லலித் நினைத்தார்.

முற்றிலும் மாறுபட்ட போக்கை இலங்கை அரசியல் எடுத்தது. 1993 ஆகும்போது, லலித் கொல்லப்பட்டார். அது நாட்டுக்கு பெரும் இழப்பு. ஜனாதிபதி பிரேமதாச ஒரு வாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு இறுதியாகும்போது காமினியும் இல்லை.

அபிவிருத்தியின் முன்னோடிகளாக இருந்து நாட்டை வடிவமைக்க வேண்டியவர்கள், நம்மை விட்டு பிரிந்தனர். அடுத்தபடியாக நாங்கள் ஒரு புதிய கட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் உலகமும் மாறிக்கொண்டிருந்தது. அதைத்தான் நாம் இன்று சமூக சந்தைப் பொருளாதாரம் என்று அழைக்கின்றோம்.

நான் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள இத்தருணத்தில் லலித்தின் அறிவுரைகள் மிகவும் முக்கியமானவை. ஏற்றுமதியை அதிகரிக்காவிட்டால், நாம் அழிந்து போகலாம். எனவே, ஏற்றுமதிப் பொருளாதாரம் உருவாக்கப்படல் வேண்டும்.

பொருளாதாரம் உலக அளவில் போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டும். அப்போது ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.

மறைந்த மங்கள சமரவீர அவர்கள் எமக்கு வழங்கிய காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த, பசுமை நீல பொருளாதாரம் என்ற எண்ணக்கருவுக்கே லலித் அன்று அஸ்திவாரம் இட்டார்.
டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு நாம் செல்ல வேண்டும். ஏற்றுமதி சார்ந்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த சமூகப் பாதுகாப்பு மற்றும் நீலப் பசுமைப் பொருளாதாரம் ஆகியவற்றுடன் கூடிய போட்டி நிறைந்த பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும்.

இப்போது நாம் முன்னேற வேண்டும். இனியும் பிச்சை எடுக்க முடியாது. சொந்தக் காலில் நிற்க கற்றுக் கொள்ள வேண்டும். 1991 இல் இந்தியா வீழ்ந்தபோது, அப்போது நான் கைத்தொழில் அமைச்சராக இருந்தேன். அவர்கள் தனியாக முன்னேர முடிவு செய்தனர். கலாசாரப் புரட்சியால் சீனா அழிக்கப்பட்டது, அதை மீண்டும் கட்டியெழுப்ப அதன் தலைவர் முடிவு செய்தார். அணுகுண்டாலும் யுத்தத்தாலும் அழிந்த ஜெர்மனியை மீண்டும் கட்டியெழுப்ப அவர்களே முடிவு செய்தனர்.

எனவே நாம் இப்போது நமது சொந்த முயற்சியால் வளர்ச்சி அடைய வேண்டும். நம்மால் முடியும். அதற்கு உயர்ந்த இலக்கை நிர்ணயம் செய்ய வேண்டும். நாங்கள் குறைந்த இலக்கை அடைய முடியாது. எனவே நாங்கள் 25 ஆண்டு திட்டத்தை இலக்காகக் கொண்டுள்ளோம். அது நிறைவடையும்போது நம்மில் பெரும்பாலானோர் இங்கு இருக்க மாட்டோம். அப்போது நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆகிறது. நான் 49 இல் பிறந்தேன். அந்த நேரத்தில் நாங்கள் ஜப்பானுக்கு அடுத்ததாக இருந்தோம். இன்று நாம் ஆப்கானிஸ்தானுக்கு மேலாகவே இருக்கின்றோம்.

திறந்த சந்தைப் பொருளாதாரமும், அதிக போட்டித்தன்மையும் ஒரே இரவில் வந்துவிடுவதில்லை.

ஐந்து வருட காலப்பகுதியில், நாங்கள் படிப்படியாக எங்கள் போட்டித்தன்மையை உருவாக்குவோம்.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் 7% வளர்ச்சியைத் தக்கவைக்க வேண்டும். அது முடியும். மொத்த தேசிய உற்பத்தியில் சர்வதேச வர்த்தகம் 100 சத வீதமாகவோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். நாம் அதனை ஒரே இரவில் அன்றி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் செய்ய வேண்டும்.

நாம் எதிர்காலத்தை நோக்கும்போது, கொழும்பு துறைமுகத்தை மீள் ஏற்றுமதி மையமாக மேம்படுத்துவதே மிகப் பெரிய புதிய அபிவிருத்தியாகும். தற்போது துறைமுகத்தின் தெற்குப் பகுதியை விரைவில் பெறுவோம். கிழக்கு முனையத்திற்கும் முதலீடுகள் வரவுள்ளன. அது நிறைவடைந்ததும் துறைமுகத்தின் வடக்குப் பகுதியை அபிவிருத்தி செய்வதே எமது அடுத்த இலக்காகும்.

இது ஜாஎல வரை விரிவடைந்து மிகப்பெரிய துறைமுகமாக மாறும். ஜாஎல பிரதேசத்தில் இருந்து விமான நிலையத்திற்கு ஐந்து மைல் தொலைவில், நீங்கள் இயற்கையாகவே ஒரு எயார் சீ ஹப் ஒன்றைப் பெறலாம். இந்து சமுத்திரத்தில் கிழக்குப் பகுதியில் ஆபிரிக்கா மற்றும் திருகோணமலையை அடையக் கூடிய மற்றொரு துறைமுகம் ஹம்பாந்தோட்டை ஆகும். இது லலித் அத்துலத்முதலி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாவதாக, விவசாயத்தை நவீனமயமாக்க வேண்டும். நெற்பயிர்ச் செய்கை நமது கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

இது பெரிய கிராமப்புறங்களில் நமது நெல் உற்பத்தியை அதிகரிக்க உதவும். எங்களிடம் ஏற்றுமதிக்கு மிகப்பெரிய சந்தை உள்ளது. மத்திய கிழக்கு, சிங்கப்பூர் மற்றும் பல்வேறு அபிவிருத்தி அடைந்து வரும் சந்தைகளுக்கு உணவு தேவையாக உள்ளது.

கிழக்கு ஆபிரிக்கா மற்றும் தென்னாபிரிக்காவில் உள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களைத் தவிர, 2050 ஆம் ஆண்டுக்குள் சவூதி அரேபியாவிலிருந்து இந்தோனேசியா வரை குறைந்தது 500 மில்லியன் மக்கள் இருப்பார்கள். உங்களின் உணவுக்கு ஒரு பெரிய சந்தை அங்கு உருவாக்கப்படுகின்றது.

பங்களாதேஷ், மியான்மர் மற்றும் இந்தியாவில் கூட, குறைந்த ஊதிய பொருளாதாரத்தை எதிர்பார்ப்பதால், நாம் அதிக உற்பத்தித்திறனை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கிறோம். நாம் ஒரு படி முன்னோக்கிச் செல்ல வேண்டும். நமது சுற்றுலாத்துறை, இப்போது உயர்மட்ட சுற்றுலாத்துறையாக மீண்டும் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

இந்த சமுதாயத்தை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம். லலித், காமினி, பிரேமதாச, ஜயவர்தன என அனைவரும் இந்த அபிவிருத்தியை ஆரம்பித்தாலும் யுத்தம் காரணமாக அது தடைப்பட்டது. இப்போது இந்த நாட்டில் போர் வரும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அதன் விளைவுகள் உண்மையில் சரி செய்யப்பட வேண்டும். வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் அடுத்த வாரம் முடிவடைந்த பின்னர், நாம் கட்சித் தலைவர்கள் மற்றும் சபாநாயகரைச் சந்தித்து அரசாங்கத்துடனான பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து கலந்துரையாடத் தீர்மானித்துள்ளோம்.

எது எப்படி இருந்தாலும் லலித்தின் தீர்மானத்தினால் இன்று பட்டம் பெற்றவர்கள் ஏராளம் உள்ளனர். அனைவரும் இணைந்து செயல்படுவோம். நாம் நல்ல பல்கலைக்கழகங்கள் மற்றும் நல்ல இலங்கைக்காக, பட்டம் பெறுபவர்களும், இணையத்தில் போஸ்ட் போடுபவர்களும் இணைந்து பணியாற்றுவோம்.

பிறந்த நாள் விழாவில் உரையாற்றிய, லலித் அத்துலத்முதலி அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க, கிராமப்புற மக்களின் கல்விக் கனவை நனவாக்கும் வகையில் லலித் அத்துலத்முதலி, மஹபொல புலமைப்பரிசில் முறையை அறிமுகப்படுத்தியதை நினைவு கூர்ந்தார்.

அவர் உயிருடன் இருந்திருந்தால் இம்முறைமை மேலும் மேம்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டிருக்கும் என குறிப்பிட்ட ரவி கருணாநாயக்க, மஹபொல புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள பிள்ளைகளுக்கான கல்விப் பாதை திறந்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மஹபொல புலமைப்பரிசிலின் கீழ் கல்வி கற்கும் பிள்ளைகள் நாட்டிற்காக பெரும் பணியை நிறைவேற்றியுள்ளனர் என சுட்டிக்காட்டிய அவர், இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தளம் மகபொல புலமைப்பரிசிலின் கீழ் கல்வி கற்ற மாணவர்களால் உருவாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

ஜப்பானின் பிரதம சங்கநாயக வண. பெல்பொல விபஸ்ஸி தேரர், நுகேகொடை நாளந்தாராமதிபதி வண. தீனியாவல பாலித தேரர், சேதவத்தை மங்களாராமதிபதி வண. அம்பன்வல ஞானாலோக தேரர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான ரியர் அட்மிரல் (ஓய்வு பெற்ற) சரத் வீரசேகர, ரவூப் ஹக்கீம், அஜித் மானப்பெரும, ஹர்ஷன ராஜகருணா, மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(English) Recent News