Presidential Secretariat of Sri Lanka

தடகளப் போட்டிகளில் சர்வதேச அளவில் பல சாதனைகளைப் படைத்த அகிலா திருநாயகி ஜனாதிபதியை சந்தித்தார்

  • ஜனாதிபதிக்கும் வடக்கில் உள்ள பனை கைத்தொழிற்துறையினருக்கும் இடையில் சந்திப்பு – பனை கைத்தொழில் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதியினால் குழு.
  • வடமாகாண சட்டத்தரணிகள் சங்கமும் ஜனாதிபதியுடன் சந்திப்பு.
  • பொருளாதாரத்தை சரியான திசையில் கொண்டு செல்ல பிரபலமல்லாத எந்த ஒரு முடிவையும் எடுக்கத் தயார்- யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஐ. தே. க செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

5000 மீற்றர் மற்றும் 1500 மீற்றர் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் 800 மீற்றர் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தையும் வென்ற முல்லைத்தீவு முள்ளியவளையைச் சேர்ந்த திருமதி அகிலா திருநாயகி வடமாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

72 வயதான ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரியான இவர் சிறுவயதிலிருந்தே தடகளப் போட்டிகளில் திறமை காண்பித்த அவர் நான்கு சகோதரர்கள் மற்றும் ஒன்பது சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் ஆறாவது பெண்ணாக பிறந்தார்.

தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியாவில் நடைபெற்ற பல சிரேஷ்ட வீரர்களுக்கான போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி இவர் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

திருமதி அகிலா திருநாயகியின் விளையாட்டு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அவருக்கு ஊக்கமளிக்கும் வகையில் பரிசில் ஒன்றையும் வழங்கி வைத்தார்.அவரது துணிச்சலான விளையாட்டு வாழ்க்கைக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்.

ஐ. தே. க செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு,

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (07) யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் இடம்பெற்றது.

நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு பிரபலமல்லாத எந்தவொரு தீர்மானத்தையும் எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இலங்கையின் தமிழ் நாகரீகம் வட மாகாணம் என்றும், யாழ்ப்பாணம் இந்து மதத்தின் மையப்பகுதி என்றும் கூறிய ஜனாதிபதி, வடமாகாணத்தின் முக்கியத்துவத்தை அப்படியே பேணிக்காத்து, வடக்கின் பொருளாதாரத்தை நாட்டின் தேசிய பொருளாதாரத்துடன் துரிதமாக இணைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

வடக்கின் விரைவான பொருளாதார அபிவிருத்தியுடன் எதிர்காலத்தில் புதிய தொழில் வாய்ப்புகளும் பல புதிய முதலீட்டு வாய்ப்புகளும் உருவாகும் எனவும் வடக்கை அபிவிருத்தி செய்து முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதற்கு வடக்கிலுள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பில் சுமார் 600 கட்சி செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டதோடு அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

வடமாகாண இளைஞர் கே. ரவியால் வரையப்பட்ட ஜனாதிபதியின் உருவப்படம் கொண்ட ஓவியமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தது தொடர்பில் விஜயகலா மகேஸ்வரனுக்கு நன்றி தெரிவிக்கிறேன். வடமாகாண பிரச்சினைகளில் காணி பிரச்சினை மற்றும் காணாமற்போனோர் பிரச்சினை என்பன முதன்மைப்படுத்தப்பட்டிருந்தன. அரசாங்கம் என்ற வகையில், அந்தப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

2025ஆம் ஆண்டு இறுதிக்குள் வடக்கின் காணி பிரச்சினை மற்றும் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கிறோம். அத்துடன் இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகளை வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வடமாகாணத்தில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி என்பவற்றை பயன்படுத்தி ஏற்றுமதிக்கான வலுசக்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பசுமை ஹைட்ரஜன் பசுமை அமோனியா உற்பத்தியிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் வளமான விவசாய நிலங்களில் நவீன தொழில்நுட்பத்தை சேர்த்து ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த தசாப்தத்தில் உலக மக்கள் தொகை இரட்டிப்பாகும் நிலையில், அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி விவசாயத்தை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்.மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் நல்லூர் திருவிழாவை உலக இந்து பக்தர்களுக்கு காணும் வாய்ப்பை வழங்கும் வகையில் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆகஸ்ட் மாதம் எசல பெரஹெர மற்றும் கதிர்காமம் பெரஹெர மற்றும் யாழ் நல்லூர் திருவிழா ஆகியவற்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளன.

வடக்கில் சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்தியில் புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்கான வாய்ப்புகளை புலம்பெயர் தமிழர்களுக்கு வழங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான புதிய பொருளாதார மறுசீரமைப்புகளினால் வட மாகாணத்தில் புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் உருவாகும். இதனால் வடபகுதி இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முடிவுகள் பிரபலமானவையாக இல்லாதிருக்கலாம். ஆனால், நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்காக எந்தவொரு பிரபலமற்ற முடிவையும் எடுப்பேன். நாம் அனைவரும் வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்து நாட்டை அபிவிருத்தி செய்வோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் ரஜித கீர்த்தி தென்னகோன், சுன்னாகம் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பனை கைத்தொழில்துறையினருடான சந்திப்பு,

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் வடமாகாண பனை கைத்தொழில்துறையினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (07) யாழ்ப்பாணம் தந்தைசெல்வா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வடக்கின் சமூகப் பிரச்சினைகள் மற்றும் பனை கைத்தொழில் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்கு இரண்டு குழுக்களை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.இக்குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் வடக்கில் பனை கைத்தொழிலை நவீனமயப்படுத்துவதற்கு தேவையான தீர்மானங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வடக்கில் உள்ள அனைவருக்கும் சம உரிமைகள் கிடைக்க வேண்டும் என்றும் அதற்காக தான் முன்நிற்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.வாக்குறுதி அரசியலினால் எந்தப் பலனும் கிடையாது எனவும் பிரச்சினைகளை சரியான முறையில் கண்டறிந்து தீர்வுகளை வழங்குவதே அனைவருக்கும் நன்மை பயக்கும் எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் பனை சார்ந்த தொழில்துறையினர் பலர் கலந்துகொண்டனர்.

சட்டத்தரணிகள் , வர்த்தகர்களுடன் சந்திப்பு,

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வடமாகாண சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் வர்த்தகர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நேற்று (06) இரவு வடமாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

வடமாகாணத்தில் சட்டத்துறை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

(English) Recent News

Most popular