Presidential Secretariat of Sri Lanka

மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம்

ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் மகாநாயக்க தேரர்கள் பாராட்டு…

இன்று (11) முற்பகல் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் மல்வத்தை பீடத்தின் அனுநாயக தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரரை சந்தித்தார். அனுநாயக தேரர் ஜனாதிபதி அவர்களின் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பல்வேறு வகையில் தலைதூக்க முடியுமான மறைமுக சக்திகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தையம் தேரர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து அஸ்கிரிய விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்து அவரது சுகதுக்கங்களை கேட்டறிந்தார்.

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக தேரர் சங்கைக்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர்சங்கைக்குரிய மெதகம தம்மானந்த தேரர்கலாநிதி சங்கைக்குரிய கொடகம மங்கல தேரர் ஆகியோர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.

கண்டி மெனிக்ஹின்னஹுரிகடுவ ஸ்ரீ வித்யாசாகர பிரிவெனா விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் ராமாஞ்ய மகா நிகாயவின் மகாநாயக தேரர் சங்கைக்குரிய நாபான பேமசிறி தேரரை சந்தித்து அவரது சுக துக்கங்களை கேட்டறிந்தார்.

நாட்டுக்காக ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்தால் நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை செய்த ஜனாதிபதி என்ற வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மக்களின் பாராட்டைப் பெறுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என நாபான பேமசிறி தேரர் அவர்கள் தெரிவித்தார்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் செயற்பட்ட விதம் குறித்து தேரர் அவர்கள் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

அஸ்கிரிய மகா விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் சங்கைக்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரரை சந்தித்து அவரது சுக துக்கங்களை கேட்டறிந்தார்.

நாட்டை தற்போதிருக்கும் நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்திருக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் எதிர்பார்ப்பு வைக்கக் கூடிய வகையில் உள்ளன என்றும் அதற்கு ஜனாதிபதி அவர்களிடம் பெரும் பலம் உள்ளது என்றும் தேரர் அவர்கள் தெரிவித்தார். இப்பயணம் ஒரு எதிர் நீச்சலாகும் என்று தேரர் அவர்கள் தெரிவித்ததற்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள் தான் அதனை நன்றாக விளங்கியிருப்பதாக குறிப்பிட்டார்.

உள்நாட்டு வெளிநாட்டு பிக்குகளுக்காக பிரிவெனாவில் ஆங்கில மொழியில் கல்வி வழங்கப்படுகின்றது. இதற்குத் தேவையான அனைத்து வகையான புத்தகங்களையும் வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். பிரிவெனாவின் ஏனைய குறைபாடுகள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்தார்.

இன்று பிற்பகல் கெட்டம்பே ராஜோபவனாராம விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள்ராமாஞ்ய நிகாயவின் சங்கைக்குரிய கெப்பெடியாகொட சிறிவிமல நாயக தேரரையும் சந்தித்தார்.

ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்திருக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் மகாசங்கத்தினர் திருப்தியடைந்திருப்பதாக தேரர் அவர்கள் குறிப்பிட்டார். நாட்டின் சட்ட முறைமையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் தேரர் அவர்கள் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் மூலம் உருவாயிருக்கும் நிலைமைகள் குறித்து விளக்கிய சங்கைக்குரிய தேரர் அது விரைவில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தேரர் அவர்கள் ஜனாதிபதியிடம் அறிக்கையொன்றையும் கையளித்தார். கண்டி மாவட்ட புத்திஜீவிகள் அமைப்பின் பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதியிடம் முன்மொழிவொன்றையும் இதன்போது கையளித்தனர்.

அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல்ல, எஸ்.பி. திஸாநாயக்க, லொஹான் ரத்வத்த, திலும் அமுனுகம, ஆனந்த அளுத்கமகே மற்றும் அநுராத ஜயரத்ன ஆகியோரும் இங்கு வருகை தந்திருந்தனர்.

(English) Recent News