Presidential Secretariat of Sri Lanka

மிளகு ஏற்றுமதி அபிவிருத்திக்கு திட்டம் – ஜனாதிபதி இரத்தினபுரியில் தெரிவிப்பு

போதைப்பொருள் பிரச்சினை குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் பற்றாக்குறை, காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட மேலும் பல மக்கள் பிரச்சினைகள் குறித்து கவனம்…..

முக்கிய ஏற்றுமதி பயிராக மிளகுப் பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்வதற்கு உடனடியாக திட்டமொன்றை தயாரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் வேறு நாடுகளில் இருந்து மிளகை கொள்வனவு செய்யும் முக்கிய நாடாக இந்தியா விளங்குகின்றது. இந்தியா கொள்வனவு செய்வது கோட்டா முறைமைக்கு அமையவாகும். இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கோட்டாவை அதிகரிப்பது இத்திட்டத்தின் முக்கிய பகுதியாகும். இதற்கு மேலதிகமாக சுதேச மிளகுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்படும். முடிவுப் பொருட்களாக மிளகை ஏற்றுமதி செய்வதற்கு விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவர். பொதியிடப்பட்ட மிளகு ஏற்றுமதியின் மூலமும் மிளகுடன் தொடர்புடைய புதிய உற்பத்திகளை உலக சந்தைக்கு அறிமுகப்படுத்தியும் அதிக வருமானத்தை ஈட்ட முடியுமென ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பொதுஜன முன்னணியில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (19) இரத்தினபுரி மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு, கொடக்காவெல பிரதேச சபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிற்கு சென்ற வேளையில், மக்கள் மிளகாய் செய்கையாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், மிளகாய் செய்கையை அபிவிருத்தி செய்வது குறித்த புதிய திட்டம் பற்றி விளக்கினார்.

சப்ரகமுவ சமன் தேவாலயத்தை அண்டிய பாரம்பரிய காணிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்து தருமாறு மக்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தினார்.

விதை உற்பத்தி வசதிகள் மற்றும் உர உற்பத்தி நிலையமொன்றை பெற்றுத் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது பற்றி கண்டறிந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ரிதிவிட்ட சந்தை வீதியை காப்பட் செய்து அபிவிருத்தி செய்து தருமாறும் மற்றுமொரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அதனை விரைவாக செய்து தருவதாக குறிப்பிட்டார்.

வெளிஓய மணல் அகழ்வு கடந்த அரசாங்க காலத்தில் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டது. அனுமதி பத்திர நிபந்தனைகளை மீறி கட்டுபாடுகளின்றி மணல் அகழ்வது குறித்து மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்ததுடன், அது குறித்து உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

கொடக்கவெல மக்கள் சந்திப்பை தொடர்ந்து கொடக்கவெல பிரதேச சபை வளாகத்தில் அதன் பணிக்குழாமினருடன் ஜனாதிபதி அவர்கள் சுமூகமாக கலந்துரையாடினார். அத்தோடு அவர்களின் விபரங்களை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள், அம்மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்தும் வினவினார். பிரதேசத்தில் குறைபாடாக உள்ள பிரேதங்களை தகனம் செய்வதற்கான மயானம் ஒன்றை அமைப்பதற்கும் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, முன்னாள் அமைச்சர் டப்ளியு.டி.ஜே.செனவிரத்ன, முன்னாள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, காஞ்சன ஜயரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி அவர்களின் இரத்தினபுரி மாவட்ட சுற்றுப் பயணம் எம்பிலிப்பிட்டிய மகாவலி விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

அபேட்சகர் சனி ரோஹண கொடிதுவக்கு மற்றும் அபேட்சகர் மியூறு பாஷித லியனகே ஆகியோர் எம்பிலிபிட்டிய புதிய நகரில் அநாகரிக்க தர்மபால சிறுவர் பூங்காவிற்கு அருகில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.

பிரதேசத்தில் பரவியுள்ள போதைப்பொருள் பிரச்சினை குறித்து மக்கள் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். பாரியளவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்தும் விரிவான நிகழ்ச்சித்திட்டமொன்று தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். அதன் வெற்றிக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகுமென்றும் கூறிய ஜனாதிபதி அவர்கள், கிராமங்களில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்களை உடனடியாக தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

மகாவெலி காணிகள் குறித்த பிரச்சினை பற்றியும் ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தினார்.

மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட எல்லேவெல நீர்ப்பாசனத் திட்டம் இடை நடுவே நிறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவு செய்து பிரதேசத்தை சேர்ந்த சுமார் 70% வீதமான மக்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரை வழங்க முடியுமென பிரதேசவாசிகள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர். இம்முறை வரவுசெலவு திட்டத்தில் நிதியை ஒதுக்கி இத்திட்டத்தை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அவர்கள் குறித்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் இறக்குவானை கொடக்கவெல, பலவின்ன மகா வித்தியாலய விளையாட்டரங்கிலும் மக்களை சந்தித்தார். இப்பாடசாலைக்கு புதிய கட்டிடம் ஒன்றை நிர்மாணித்து தருமாறு மாணவர்கள் முன்வைத்த கோரிக்கை குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், இராணுவத்தின் பங்களிப்புடன் அதனை விரைவாக செய்து தருவதாக குறிப்பிட்டார்.

அபேட்சகர் முதிதா பிரியந்தி சொய்சாவினால் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பலாங்கொட பொது விளையாட்டரங்கில் அபேட்சகர் அகில எல்லாவெல மற்றும் காமினி வலேகொட ஆகியோரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டு, மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

Most popular