Presidential Secretariat of Sri Lanka

கேகாலையில் மண்சரிவு அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதற்கு விசேட நிகழ்ச்சித்திட்டம் – ஜனாதிபதி மக்களிடம் தெரிவிப்பு

  • பலமான பாராளுமன்றத்திற்கு முழுமையான ஆதரவை வழங்க மக்கள் உறுதி…

கேகாலை மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் மண்சரிவுகளை கட்டுப்படுத்தி அதனால் பாதிக்கப்படும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மாவட்ட மக்களிடம் தெரிவித்தார்.

இன்று (18) பிற்பகல் கேகாலை மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புகள் சிலவற்றில் கலந்துகொண்டு ஜனாதிபதி அவர்கள் மக்கள் முன்வைத்த பிரச்சினைகளை கேட்டறிந்ததன் பின்னர் இதனைத் தெரிவித்தார்.

புலத்கொஹூபிட்டிய லேவன சந்தை வளாகத்தில் இடம்பெற்ற பொதுஜன முன்னணியின் அபேட்சகர் ராஜிக்கா விக்கிரமசிங்க மற்றும் அரநாயக்க திப்பிட்டிய வைத்தியசாலை சந்தியில் அபேட்சகர் டப்ளியு.ஜயரத்ன ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளில் ஜனாதிபதி அவர்கள் இன்று பிற்பகல் கலந்துகொண்டார்.

வருகை தந்திருந்த மக்கள் ஜனாதிபதி அவர்களை உற்சாகமாக வரவேற்றதுடன், மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசிர்வதித்தனர்.

சிறு ஏற்றுமதி பயிர்களை இறக்குமதி செய்வது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் நாட்டில் விளையும் பயிர்களுக்கு எதிர்காலத்தில் அதிக விலை கிடைக்கும் என விவசாயிகள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும்போது ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

புலத்கொஹூபிட்டிய – யட்டியந்தொட்ட வீதியை காப்பட் செய்து அபிவிருத்தி செய்து தருமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

சட்டவிரோத போதைப்பொருள் காரணமாக பிரதேச இளைஞர்களை பாதுகாக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பிலும் ஜனாதிபதி அவர்கள் விசேட கவனம் செலுத்தினார்.

அபேட்சகர் இந்துனில் ஷாந்த குணசேகர மாவனெல்லை மயூரபாத கல்லூரி விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றினார்.

இங்கு மக்களின் விபரங்களை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள், அவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகள் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைக்கப்பட்டதுடன், கூட்டுறவு இயக்கத்தின் மேம்பாட்டிற்காக காலங்கடந்த சட்டங்களை திருத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் மக்கள் ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடினர்.

மாவனெல்ல நகருக்கு குறைபாடாக உள்ள பஸ் நிலையாமொன்றை அமைத்து தருமாறும் தனாகம அணைக்கட்டினை புனரமைத்து தருமாறும் மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக ஆராய்ந்து திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

மயூரபாத தேசிய பாடசாலையின் குறைபாடுகள் பற்றியும் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான தாரக பாலசூரிய மற்றும் கனக ஹேரத் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முன்னாள் பிரதி அமைச்சர் சாரதி துஸ்மந்த மித்ரபால மாவனெல்லை நகரிலும் கனக ஹேரத் ரம்புக்கனை புகையிரத நிலையத்திற்கு முன்னாலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புக்களிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்து வரும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அதிக மக்கள் வரவேற்பு கிடைத்ததுடன், இந்த நிகழ்ச்சித்திட்டங்களை மேலும் பலப்படுத்துவதற்கு இம்முறை பொதுத் தேர்தலில் தற்போதைய அரசாங்கத்திற்கு 2/3 பாராளுமன்ற பலத்தை வழங்குவதற்கு தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

“கேகாலையை கட்டியெழுப்புவோம்” கொள்கைப் பிரகடனம் கனக ஹேரத் மற்றும் மாவட்ட பொறியியலாளர் அமைப்பினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அபேட்சகர் தாரக பாலசூரிய கேகாலை பொது சந்தை  கட்டிடத் தொகுதி வளாகத்திலும் அபேட்சகர் சமன் ஜயசிங்க கலிகமுக ஷான் ஹோட்டலுக்கு முன்னாலும் முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கலிகமுவ கொட்டபொலவிலும் அபேட்சகர் உதயகாந்த குணதிலக்க வறக்காபொல சந்தை வளாகத்திலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளிலும் பங்குபற்றிய ஜனாதிபதி அவர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

இறுதி கூட்டங்களின்போது மழையையும் பொருட்படுத்தாது மக்கள் மத்தியில் சென்ற ஜனாதிபதி அவர்கள், மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

(English) Recent News

Most popular